கோயில்களில் பூஜை - ஆன்லைன் முன்பதிவில் ரூ.500 கோடி முறைகேடு
இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம்.
தினத்தந்தி: 'கோயில்களில் பூஜை - ஆன்லைன் மூலம் முன்பதிவில் ரூ.500 கோடி முறைகேடு'

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவுசெய்வதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"பழனி கோவிலில் ஆன்லைன் மூலம் பணம் வசூல் செய்யும் 'ஸ்கை' என்ற தனியார் நிறுவனம் ரூ.25 கோடி வரை அறநிலையத் துறைக்கு பணம் செலுத்தவில்லை என்பது தெரியவந்தது. இதேபோல், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோவில்களில் இருந்தும் கடந்த 4 ஆண்டுகளாக கோடிக்கணக்கான பணம் அரசுக்கு வழங்கப்படாமல் இருப்பது தெரியவந்தது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

இந்து தமிழ்: 'வரலாற்றை மூடும் தார் சாலைகள்!'
செங்கோட்டையை குத்தகைக்குவிட்டது தொடர்பாக வரலாற்றை மூடும் தார் சாலைகள் என்ற தலைப்பில் நடுப்பக்க கட்டுரை வெளியிட்டுள்ளது இந்து தமிழ் நாளிதழ்.

பட மூலாதாரம், Getty Images
சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதியுள்ள அந்தக் கட்டுரையில் "எந்த வரலாறு காக்கப்பட வேண்டும், எந்த வரலாறு அழிக்கப்பட வேண்டும் என்பதை அரசியலே தீர்மானிக்கிறது. வரலாற்றைப் புராணங்களால் நிரப்ப வேண்டுமென்றால், அதற்கான முன்நிபந்தனை வரலாற்றுச் சான்றினை அப்புறப்படுத்துவதுதான். அதனால்தான், அசோகரின் கல்தூணையும் தாஜ்மஹாலின் பேரழகையும்விட சாலைகளும் பாலங்களும் முக்கியம் என்று துணிந்து கூறுகின்றனர்." என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


தினமணி: 'சந்திராயன் - 2 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு'
சந்திராயன் -2 திட்டத்தை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ மீண்டும் ஒத்திவைத்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
"நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக இஸ்ரோ முதன்முதலில் சந்திராயன்-1 விண்வெளி ஓடத்தை கடந்த 2008ஆம் ஆண்டு ஏவியது. நிலவை சுற்றிவந்த இந்த விண்வெளி ஓடம், அங்கு நீர் இருப்பதை கண்டுபிடித்தது. இதைத் தொடர்ந்து, நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும் வகையில் சந்திராயன் - 2 விண்வெளி ஓடம் செலுத்தும் திட்டத்தை இஸ்ரோ உருவாக்கியது. இந்த விண்வெளி ஓடத்தை கடந்த ஏப்ரல் மாதம் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. பின், அந்த திட்டத்தை அக்டோபர் மாதத்துக்கு இஸ்ரோ ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், சந்திராயன் -2 திட்டத்தை இஸ்ரோ மீண்டும் ஒத்தி வைத்துள்ளது என்கிறது அந்நாளிதழ் செய்தி.
ஜனவரி மாதத்துக்கு முன்பு அந்த திட்டம் செயல்படுத்தப்படும் வாய்ப்பில்லை. இந்தத் திட்டத்தில் எந்தவித தவறையும் இழைக்க நாங்கள் விரும்பவில்லை என்று இஸ்ரோ மூத்த அதிகாரி கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


பட மூலாதாரம், இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'கொசஸ்தலை ஆறு: சேதமடைந்த நிலையில் திருகண்டலம் தடுப்பணை'
2015 ஆம் ஆண்டு சென்னை பெருமழையில் சேதமடைந்த கொசஸ்தலை ஆற்றில் உள்ள திருக்கண்டலம் தடுப்பணை இன்னும் புனரமைக்கப்படாமல் இருப்பதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். முப்பத்தி ஐந்து கோடி மதிப்பில் கட்டப்பட்ட அந்த அணை இப்போது சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












