You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"வளர்ச்சியின் பெயரில் போடப்படும் சாலைகள் எதுவும் மக்களுக்கானதல்ல": அருந்ததி ராய்
"வளர்ச்சியின் பெயரால் இந்தியாவில் போடப்படும் சாலைகள் எதுவும் சாமான்ய மக்களுக்கானவை அல்ல. அந்த பெரும் சாலைகள் அனைத்தும் நிறுவனங்களுக்கானவை" என்கிறார் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான அருந்ததி ராய்.
தில்லி பிரஸ் கிளப்பில் மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு சார்பில், ' ஃபாசிச ஆய்வு கூடமாக மாறிவரும் தமிழ் நாடு - தெற்கிலிருந்தான குரல்கள்' என்ற தலைப்பில் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு போராட்டங்களில் பாதிக்கப்பட்ட செயற்பாட்டாளர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
எதுவும் புதிதல்ல
அதில் பேசிய அருந்ததி ராய், "இப்போது வளர்ச்சியின் பெயரால் தமிழகத்தில் நடைபெறும் எதுவும் புதிதல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு இவைதான் வடக்கில் நடந்தன. சத்தீஸ்கரில் அகலமான சாலைகள் போடப்பட்ட போது மக்களுக்கு எதுவும் புரியவில்லை. ஏன் இந்த சாலைகள் போடப்படுகின்றன. யாரின் தேவைக்காக இந்த சாலைகள் என்று மக்கள் புரியாமல் நின்றார்கள். அந்த சாலைகள் சுரங்க நிறுவனத்திற்காக, வளங்களை சுரண்டி எடுத்து செல்வதற்காக, நிறுவனங்களின் நலனுக்காக போடப்பட்டவை என்று தெரிந்ததும், மக்கள் எதிர்க்க தொடங்கினார்கள். ஆனால், அரசு அவர்கள் மீது வன்முறையை ஏவியது. அப்போது அந்தப் பகுதிகளில் என்ன நடந்ததோ? அதேதான் இப்போது தமிழகத்தில் நடக்கிறது" என்றார்.
"அப்போது சத்தீஸ்கரில் நடப்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக நியாயம் கோருவதற்காக நாங்கள் சென்னை வந்தோம். இப்போது தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தெரிவிப்பதற்காக சென்னை டெல்லிக்கு வந்திருக்கிறது" என்று அவர் கூறினார்.
மேலும் அவர், "முன்பு இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக அரசு சித்தரித்தது. இப்போது எழுத்தாளர்கள், அறிஞர்கள், அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள் என அரசை கேள்வி கேட்பவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்க தொடங்கி உள்ளது" என்று பேசினார்.
இந்த பாசிச நடைமுறைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார் அருந்ததி ராய்.
கொல்லப்பட்ட ஆதிவாசிகள்
அருந்ததி ராயை தொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணும் சத்தீஸ்கருடன் தமிழகத்தை ஒப்பிட்டு பேசினார்.
"அங்கு நிறுவனங்களை எதிர்த்து அரசை எதிர்த்து போராடுபவர்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. ஆதிவாசிகள் கைது செய்யப்பட்டனர், கொல்லப்பட்டனர். அவர்கள் மட்டுமல்ல, இதனை எதிர்த்து எழுதிய பத்திரிகையாளர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இப்போது தமிழ்நாட்டில் நடப்பதை இந்த சம்பவங்களுடன் பொருத்திப் பார்க்க முடிகிறது" என்றார்.
மத்திய அரசின் கைகளில் இருக்கும் பொம்மையாக தமிழக அரசு இருக்கிறது என்ற பூஷண், மத்திய அரசு தாம் விரும்புவதை எல்லாம் தன் கையில் பொம்மையாக இருக்கும் தமிழக அரசைக் கொண்டு நிகழ்த்திக் கொள்கிறது என்றார்.
மக்களின் பணத்தை கொண்டு தனியார் நிறுவனங்களுக்கு லாபமீட்டித் தரும் செயலைதான் அரசு செய்வதாக கூறினார் பிரசாந்த் பூஷண்.
ஜனநாயக விரோத அரசு
இந்த கூட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், தமிழகத்தில் எந்த ஜனநாயக மாண்புகளும் மதிக்கப்படுவதில்லை. செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்குகள் எந்த அறமும் இல்லாமல் போடப்படுகின்றன என்றார்.
இந்த கூட்டத்தில் செயற்பாட்டாளர் பியூஹ் மனுஷ், பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், சிபிஎம் (எம்எல்) கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் கவிதா கிருஷ்ணன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாள்ர் சுந்தராஜன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :