திருமண விளம்பரங்கள் மாறுவது எப்போது?

    • எழுதியவர், வந்தனா
    • பதவி, பிபிசி தொலைக்காட்சி ஆசிரியர் (இந்திய மொழிகள்)

பள்ளியிலும், கல்லூரியிலும் கணினி பாடம் கிடைப்பது கனவாக இருந்த காலம் ஒன்று! அப்படி கிடைத்தவர்களின் வாழ்க்கை ஏறுமுகம்தான், கவலையே இல்லை என்று கருதப்பட்ட காலம் அது. 1998ஆம் ஆண்டு பிபிசி நிருபர் மைக் உல்ரிஜ் இந்தியாவின் மேட்ரிமோனியல் விளம்பரங்களைப் பற்றிய ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதை அண்மையில் வலைதளத்தில் படித்தேன்.

அந்த கட்டுரையின்படி ஒருவர் தனக்கு திருமணத்திற்கு பெண் வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தார் எப்படி தெரியுமா?

வயது - 39, ஆனால் பார்ப்பதற்கு 30 போன்ற தோற்றம்

உயரம் - 180 செ.மீ

நிறம் - சிவப்பு, மிகவும் அழகான தோற்றம்

உணவு பழக்கம் - சைவம், மது, புகையிலை போன்ற பழக்கங்கள் எதுவும் கிடையாது.

அமெரிக்கா சென்று வந்தவர் என்பதால் இன்னும் சில ஆண்டுகளில் பிரபலமாகிவிடுவேன். டெல்லியில் மேட்டுக்குடியினர் வசிக்கும் பகுதியில் பெரிய பங்களா இருக்கிறது. இதுதான் மணமகனின் சுயவிவரம்.

எதிர்கால மனைவியின் தகுதிகளாக அவரின் எதிர்பார்ப்பு?

ஒல்லியான, மிகவும் அழகான, 30 வயதுக்கும் குறைந்த பெண்.

இந்த விளம்பரம் 20 ஆண்டுகள் பழையது என்றாலும், இன்றும் விளம்பரங்களின் அந்தத் தொனி மாறவில்லை.

கடந்த வாரம் பெங்களூருவில் திருமணத்திற்கு வரன் தேடித்தரும் நிறுவனம் ஒன்று வெளியிட்டிருந்த விளம்பரத்தில், திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் இளம் சாதனையாளர்களில் 'அழகான இளம் பெண்கள்' என்று குறிப்பிடப்பட்டு, தகுதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த விளம்பரத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்புக் கோரியது.

அழகான - குணமான-மெலிந்த-குடும்பப்பாங்கான-சம்பாதிக்கும்... பெண்

பத்திரிகைகளில் திருமணத்திற்காக கொடுக்கப்படும் விளம்பரங்களால் நான் மிகவும் விரக்தி அடைந்துவிட்டேன் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்.

எனக்கு ஏற்பட்ட விரக்திக்கு காரணம் விளம்பரங்கள் அல்ல, அதில் பெண்களிடம் எதிர்பார்க்கும் விஷயங்களாக குறிப்பிடப்படுவது தான் எனக்கு பிடிக்கவில்லை.

அதாவது, திருமண சந்தையில் தகுதி வாய்ந்த பெண்ணுக்கான அளவுகோள்கள் என்பது, 'அழகான, குணமான, அடக்கமான, ஒல்லியான, குடும்பப்பாங்கான, சம்பாதிக்கும்....' என பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்.

கடந்த 20 வருடங்களில் திருமண விளம்பரங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பத்திரிகைகளில் மட்டுமே வெளிவந்த விளம்பரங்கள், தற்போது வலைதளங்களிலும் வருகின்றன என்பதோடு திருமணத்திற்கு தயாராக இருப்பவர்களின் புகைப்படங்களும் அதில் இடம்பெறுகின்றன என்பதே அந்த மாற்றம்!

சேலை, சுடிதார், ஜீன்ஸ் என விதவிதமான உடையணிந்த பெண்களின் புகைப்படங்கள் இடம்பெறுகின்றன.

அழகான, அடக்கமான, ஒல்லியான என்ற அடிப்படை எதிர்பார்ப்புகளில் மட்டும் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால், முன்பு இருந்ததைவிட தற்போது பெண்களில் பெரும்பான்மையானவர்கள் வேலைக்கு செல்கின்றனர், கணிசமாக சம்பாதிக்கின்றனர். எனவே, 'படித்த, சம்பாதிக்கும்' பெண் என்ற தகுதியும் இப்போது எதிர்பார்ப்புகளின் அங்கமாகிவிட்டது.

ஒட்டுமொத்தமாக ஒரு திருமண வலைதளத்தில் பெண் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பின் பொருள் என்பது, 'தேவைக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்ட மணப்பெண்' கிடைக்கும் வரையிலும் 'சரியான மணமகளுக்கான' தேர்தல் வேட்டை தொடரும்.

அதாவது மணப்பெண் என்பவள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்படும் நாகரீகமான டிசைனர் பொம்மையைப் போன்று உயிருள்ள பொம்மையாக இருக்கவேண்டும்.

இது மட்டுமல்ல, குடும்பப் பாங்கு, கீழ்ப் படிதல், சேமிப்பில் விருப்பமுடையவர், குறைந்த பராமரிப்பு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பெண்கள், 5 நட்சத்திரங்கள்... என திருமண வலைதளங்கள் மணப்பெண்ணை பலவிதமாக வகைப்படுத்துகின்றன.

இதையெல்லாம் படிக்கும்போது இதை செய்வது வேறு யாரோ என்று தோன்றுகிறதா? ஆனால் உண்மையில் நம்முடைய நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள்தான் இப்படிப்பட்ட விளம்பரங்களை கொடுக்கிறார்கள்.

திருமணம் என்பதன் உண்மையான பொருள் என்ன?

ஆக்ஸ்போர்ட் அகராதியின்படி, திருமணம் என்பதற்கான பொருள் - சட்டப்பூர்வமாக அல்லது முறையாக இருவர் ஒன்றாக இணைந்து வாழ்வதற்காக கொடுக்கப்படும் அங்கீகாரம்.

ஆனால் திருமண விளம்பரங்களின் அடிப்படையில் பார்த்தால், திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் இருவரின் தகுதிகளும் ஒரே மாதிரி அளவிடப்படுகிறதா?

திருமணத்திற்கு முன்பே உறவுகள் சமமற்ற நிலையில் தொடங்குகிறது. திருமணத்திற்கான எதிர்பார்ப்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு அளவுகோல்களை கொண்டுள்ளது.

இதுபோன்ற விளம்பரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 2015ஆம் ஆண்டு 24 வயது இந்துஜா பிள்ளை தனது பெற்றோர் கொடுத்த விளம்பரத்துக்கு எதிராக ஒரு விளம்பரத்தைக் கொடுத்தார்.

தனக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் விளம்பரம் கொடுத்தது பற்றி தனக்கு எந்தவிதமான ஆட்சேபமும் இருக்கவில்லை என்று இந்துஜா கூறுகிறார்.

ஆனால் என்னுடைய விருப்பு வெறுப்புகள், மத நம்பிக்கைகள் மற்றும் என்னுடைய பொழுதுபோக்குகள் பற்றி என் பெற்றோர் அதில் குறிப்பிடவில்லை. நான் மது அருந்த மாட்டேன். புகைப்பிடிக்க மாட்டேன். முட்டை சாப்பிடுவேன்.

அசைவம் அல்ல. பாடப்பிடிக்கும். ஆடப்பிடிக்கும். கண்ணாடி அணிவேன். அதில் முட்டாள் போலத் தெரிவேன். நிறைய செலவழிக்கமாட்டேன். புத்தகங்கள் படிக்கமாட்டேன். நான் ஒரு சராசரிப் பெண் அல்ல. நிச்சயமாக திருமணம் செய்துகொள்ள தகுந்த பெண்ணாக நான் என்னை பார்க்கவில்லை. என்றைக்கும் நீண்ட முடி வளர்க்க மாட்டேன். நான் வாழ்நாள் முழுவதும் உடன் இருப்பேன் என்ற சத்தியத்துடன் வருவேன்.

சமூக ஊடகங்களில் தேடுதல் வேட்டை

திருமணத்திற்கான விளம்பரங்களின் வலையில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க 28 வயது ஜோதி சில மாதங்களுக்கு முன்பு நேரிடையாகவே தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார் - 'நான் திருமணம் ஆகாதவள். எனக்கு எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லை. ஜாதகம், சாதி மதம் என்ற எந்த வரம்பும் கிடையாது. எனது பெற்றோர்கள் இப்போது உயிருடன் இல்லை. பேஷன் டிசைனிங்கில் பி.எஸ்.சி பட்டம் பெற்றிருக்கிறேன். என் வயது 28, திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம்'.

ஏப்ரல் மாதத்தில் ஜோதியின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. 6100 பேர் ஷேர் செய்திருந்தார்கள். சுமார் 5000 பேர் பதிவுக்கு பதில் போட்டிருந்தார்கள்.

ஜோதியின் பேஸ்புக் பக்கத்திற்கு சென்று இப்போது பார்த்தால் அவருக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணமாகியிருக்கிறது. திருமண புகைப்படத்தை தனது பக்கத்தில் வைத்திருக்கிறார்.

34 வயது ரஜ்னீஷ் மஞ்சரியும் சென்ற ஆண்டு இதேபோல் ஒரு வித்தியாசமான முயற்சி எடுத்தார்.

உன்னிப்பாக கவனித்தால், பத்திரிகைகள் மற்றும் வலைத்தளங்களில் வெளியிடப்படும் திருமண துணை தேடும் விளம்பரங்கள், நமது சமூகத்தின் மனோபாவத்தை பிரதிபலிக்கின்றன. இன்றும்கூட நமது சமூகம் இன்று பழமைவாதத்தின் பிடியில் இருந்து முழுமையாக விடுபடவில்லை என்பது புரியும்.

முன்பெல்லாம் ஞாயிற்றுக் கிழமையன்று வெளியாகும் விளம்பரங்களை பார்ப்பதற்காக செய்தித்தாளின் பக்கங்கள் விரித்து வைக்கப்பட்டிருக்கும்.

வீட்டிற்கு வரும் மருமகள் மற்றும் மனைவி அழகு தேவதையாக இருக்கவேண்டும். அதுமட்டும் போதாது நன்றாக சமையல் செய்யத் தெரிந்தவராகவும் இருக்கவேண்டும். ஏனெனில் இந்த விளம்பரங்களில் குடும்பப்பாங்கான என்ற வார்த்தை தவறாமல் இடம் பெற்றிருக்கும். அதாவது பார்ப்பதற்கு அழகாகவும், சமையல் செய்ய தெரிந்தவராகவும் இருக்கவேண்டும்.

மணமகனைப் பற்றிய தகவல்களில் சாதி, வேலை, அரசு வேலையா என்பது போன்ற தகவல்கள் தான் இடம் பெற்றிருக்கும். நல்ல குணம் இருக்கிறதா? சமைக்கத் தெரியுமா? அழகானவரா என்ற தகவல்கள் பெரும்பாலும் இருக்காது. வேண்டுமானால், மது அருந்துவதில்லை, அசைவ உணவு சாப்பிடாதவர் போன்ற அவர்களது பழக்க வழக்கங்கள், அவரது உயர்தகுதிகளாக குறிப்பிடப்படும்.

இன்றும்கூட, நம் வீட்டு பரணிலோ அல்லது அலமாரியிலோ போட்டு வைத்திருக்கும் பழைய புத்தகங்களில் இதுபோன்ற ஏதாவது பழைய திருமண விளம்பரங்கள் இருக்கலாம். அந்த விளம்பர வாசகங்களை அப்படியே எடுத்து இன்றும் பயன்படுத்தலாம். ஏனெனில் அதே பழைய மனோபாவம் இன்னும் மாறவேயில்லை.

ஆமாம், இன்று ஆண்கள் அரசு வேலைக்கு பதிலாக வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கின்றனர். மாத சம்பளமோ நான்கு இலக்கத்தில் இருந்து ஐந்து இலக்கமாக அதிகரித்துவிட்டது.

ஆனால் பெண்களின் தகுதி குறித்த எதிர்பார்ப்பு மட்டும் மாறவேயில்லை. அழகான, குடும்பப்பாங்கான, அடக்கமான என்ற முத்திரைகள் இன்னும் தொடர்கின்றன. நம்பிக்கை ஏற்படவில்லை என்றால், இந்த வார ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ள மேட்ரிமோனியல் பக்கத்தை எடுத்துப் பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :