You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
‘சேலம் - சென்னை எட்டு வழி சாலைத் திட்டம் கைவிடப்படாது’ - மத்திய அமைச்சர்
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: 'சேலம் - சென்னை எட்டு வழி சாலைத் திட்டம் கைவிடப்படாது'
சேலம்-சென்னை எட்டு வழி சாலைத் திட்டத்தைக் கைவிடும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் மன்ஷுக் எல். மாண்டவியா தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
தமிழகத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்கு எட்டு வழி சாலையை அமைக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு இருப்பது மத்திய அரசுக்குத் தெரியுமா? இத்திட்டத்திற்காக தங்களது நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவது உண்மை என்பது அரசுக்குத் தெரியுமா?
என்று சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பியதாவும், அதற்கு எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் மாண்டவியா, எட்டுவழி சாலையை அமைக்கும் அரசின் திட்டத்திற்காக தங்களது நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கள அலுவலகம் மூலம் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
எட்டு வழி சாலை திட்டத்தைக் கைவிடுவது தொடர்பாக மறுபரிசீலனை ஏதும் அரசு மேற்கொள்ளவில்லை. ஆனால், இந்த சாலையால் 68 கிலோமீட்டர் தூரம் குறைவதுடன் பல்வேறு பயன்கள் உள்ளன என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்து உள்ளதாகவும் விளக்குகிறது அந்நாளிதழ் செய்தி.
தினத்தந்தி: "இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சியா? போலீஸ் ஆட்சியா?"
தூத்துக்குடி கலவர வழக்கில் ஜாமீன் பெற்றவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது ஏன்?, இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சியா? அல்லது போலீஸ் ஆட்சியா? என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஹரிராகவன். இவர் கடந்த மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கலவரத்தை தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் மீது 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து கடந்த 6-ந்தேதி மதுரை மாவட்ட கோர்ட்டில் ஹரிராகவன் சரண் அடைந்தார். பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 24-ந்தேதி உத்தரவிட்டது." என்கிறது அந்நாளிதழ் செய்து.
"இந்தநிலையில் 26-ந்தேதி அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனால் அவர் ஜாமீனில் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதை எதிர்த்து ஹரிராகவனின் மனைவி சத்யபாமா, மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், 'எனது கணவருக்கு மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியதை கருத்தில் கொள்ளாமல், வேண்டுமென்றே அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தகவல் முறையாக தெரிவிக்கப்படவில்லை. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை ஐகோர்ட்டு உத்தரவை அவமதிப்பதாகும். எனவே இதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும், எனது கணவர் மீது பாய்ந்துள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்." என்கிறது அச்செய்தி.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மனுதாரரின் கணவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியபின்னர், அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது ஏன்?" என்று கேள்வி எழுப்பினர். மேலும், "இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சியா? அல்லது போலீஸ் ஆட்சியா?" என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தங்களது கண்டனத்தையும் தெரிவித்தனர் என்று கூறியதாக விவரிக்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: '5 மாவட்டங்களின் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது'
திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு என ஐந்து மாவட்டங்களின் நிலத்தடி நீர் மிகவும் மாசடைந்துள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. அனுமதிக்கப்பட்ட அளவினைவிட இந்த மாவட்டங்களின் நிலத்தடி நீரில் இந்திய தர நிர்ணய அமைப்பு அனுமதித்த அளவினைவிட அதிகமாக ஈயம், காட்மியம், குரோமியம் இருப்பது தெரியவந்துள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
இந்து தமிழ்: 'உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யாவிட்டால் நடவடிக்கை '
உள்ளாட்சித் தேர்தலுக்கான கால அட்டவணையை வரும் 6-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யா விட்டால் அவமதிப்பு நடவடிக் கையை சந்திக்க நேரிடும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எச்சரித்துள்ளது என்கிற செய்தி தமிழ் இந்து நாளிதழின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளது.
இந்து அறநிலைய துறை கூடுதல் ஆணையர் கைது செய்யப்பட்டுள்ள செய்தியும் பிரதானமாக இடம்பிடித்துள்ளது.
"சோமாஸ்கந்தர் சிலையில் 80 % செம்பு, 12% பித்தளை, 2% வெள்ளீயம், 1 % வெள்ளி, 5% தங்கம் இருக்க வேண்டும் என்பது ஆகம விதி. காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் தற்போது வைக்கப் பட்டுள்ள சோமாஸ்கந்தர் சிலையை 86 கிலோவில் செய்ய திட்டமிடப்பட்டது.
50 கிலோவில் சிலை, 36 கிலோ எடையில் பீடம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் சிலை 111 கிலோவில் செய்யப்பட்டுள்ளது. ஆகம விதிப்படி சிலையில் 5.75 கிலோ தங்கம் சேர்த்திருக்க வேண்டும். பிரத்யேக கருவிகளைக் கொண்டு சிலையை ஆய்வு செய்ததில், அதில் சிறிதளவும் தங்கம் இல்லை என்பது தெரியவந்தது.
சிலையில் சேர்ப்பதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பெற்ற சுமார் 8 கிலோ தங்கத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மோசடியாக அபகரித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்தி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை கைது செய்து கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் முன்னிலைப்படுத்தினோம்.
நீதிபதி அய்யப்பன் பிள்ளை, ஆக.14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து திருச்சி பெண்கள் சிறையில் கவிதா அடைக்கப்பட்டுள்ளார் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :