You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கருணாநிதி உடல் நலம் பாதிப்பு; ஓ.பி.எஸ். அமைச்சர்கள் நேரில் வருகை
தி.மு.க. தலைவர் மு. கருணாநிதிக்கு சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றின் காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்று ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலன் குறித்து விசாரித்தனர்.
முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதி கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து உடல் நலக் குறைவின் காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்துவருகிறார். அவர் மூச்சு விடுவதை எளிதாக்க அவருக்கு ட்ராக்யோஸ்டமி குழாயும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம், ட்ராக்யோஸ்டமி குழாய் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாற்றப்பட்டது. இதற்குப் பிறகு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக செய்திகள் பரவின.
புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் பயப்படும்வகையில் ஏதும் இல்லையென்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், கருணாநிதிக்கு சிகிச்சையளித்துவரும் காவிரி மருத்துவமனை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்திக் குறிப்பில் அவருக்கு சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதைக் குணப்படுத்த தேவையான மருந்துகள் தரப்பட்டுவருவதாகவும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவமனைக்கான வசதிகள் செய்யப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் அடங்கிய குழு அவரைக் கண்காணித்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கருணாநிதியைப் பார்க்க பார்வையாளர்கள் யாரும் வரவேண்டாமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்குச் சென்ற துணை முதல்வர் ஓ.பி.எஸ். அமைச்சர்கள்
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்கள் சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தனர்.
வியாழக்கிழமை இரவு பத்து மணியளவில் வீட்டுக்கு வந்த அவர்களை மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு உள்ளிட்டவர்கள் உள்ளே அழைத்துச்சென்றனர். கருணாநிதியின் மகனும் தி.மு.க செயல் தலைவருமான மு.க. ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவர்கள் விசாரித்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், கருணாநிதி விரைவில் உடல் நலம் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தனர். அரசியல் பண்பாட்டின் அடிப்படையில் கருணாநிதியின் உடல் நலத்தை விசாரிக்க வந்ததாகவும் அவர்கள் கூறினர்.
கருணாநிதி உடல் நிலை குறித்து திமுக நிர்வாகி ஜெ.அன்பழகன்:
அமைச்சர்கள் கருணாநிதியின் இல்லத்திற்கு வந்தபோது, அங்கு பெரும் எண்ணிக்கையில் தி.மு.க.தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
அமைச்சர்கள் வந்துசென்ற சில நிமிடங்களுக்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து நலம் விசாரித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :