சீனா: அமெரிக்கத் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே சிறிய வெடிபொருள் ஒன்று வெடித்துச் சிதறியதை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். தாக்குதலாளியைத் தவிர இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து புகை வெளியேறுவதையும், அங்கு பொதுமக்கள் கூட்டமாக இருப்பதையும் சமூக வளைத்ததளங்களில் வெளியாகியுள்ள காணொளிகள் காட்டுகின்றன.

உள்ளூர்வாசிகள் இடிச் சத்தம் போன்ற ஒன்றைக் கேட்டதாக அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று மதியம் ஒரு மணிக்கு, தூதரகக் கட்டடத்தின் தென்கிழக்கு மூலையில் வெடிகுண்டு ஒன்று வெடித்ததாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அந்தக் கருவி பட்டாசு வெடிக்கும் கருவியாக இருக்கலாம் என்று பெய்ஜிங் காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தாக்குதலாளியின் கைகளில் காயம் உண்டாகியுள்ளது. எனினும், அவருக்கு உயிராபத்து எதுவும் உண்டாகவில்லை.

ஜியாங் எனும் குடும்பப் பெயர் உடைய அந்த நபர் சீனாவின் உள்மங்கோலியா மாகாணத்தைச் சேர்ந்தவர்.

இந்த சம்பவத்தின் பின் இயல்பு நிலை அங்கு திரும்பியுள்ளதாகவும், விசாவுக்கு விண்ணப்பிக்க அங்கு பலரும் வரிசையில் நிற்பதாகவும் சம்பவ இடத்துக்குச் சென்ற பிபிசி செய்தியாளர் ஸ்டீஃபன் மெக்டொனல் கூறுகிறார்.

இந்த வெடிப்பு நிகழ்வதற்கு முன்பு, உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு பெண் ஒருவர் அங்கு தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்திக்கொள்ள முயற்சி செய்ததாகவும், அவரைக் காவல் அதிகாரிகள் அப்புறப்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெளிவாகவில்லை.

சீனத் தலைநகரில் உள்ள இடங்களில் தாக்குதல் நடப்பது அரிதான சம்பவமாகும். 2013இல் தியனான்மென் சதுக்கத்தில் கூட்டத்தில் கார் ஒன்று நுழைந்ததே சமீபத்தில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவம்.

இதில் தாக்குதலாளி உள்பட ஐவர் இறந்தனர். இஸ்லாமிய உய்குர் பிரிவினைவாதிகளே இந்தத் தாக்குதலுக்குக் காரணமென சீன அரசு கூறியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :