You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீடு தேடி வந்தவர்களுக்கு விருந்து வைத்து மகிழ்ந்த பாப்பாள்
திருப்பூர் மாவட்ட அவிநாசி வட்டம் திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமையலர் பாப்பாள் ஒரு தலித் பெண் என்பதால் சத்துணவு சமைக்க சாதி இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று, ஞாயிற்றுக்கிழமை, பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த பாப்பாளை நேரில் சந்திக்கச் சென்ற அனைவருக்கும் பாப்பாள் அவர் சமைத்த உணவை விருந்தளித்தார்.
ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், இளைஞர் எழுச்சி இயக்கத்தலைவர் எழிலன், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாப்பாளின் வீட்டுக்குச் சென்றனர்.
பிரச்சனைக்கு காரணமான 88 பேர் மீது சேவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பிறகு பாப்பாள் தற்போது அதே பள்ளியில் பணியைத் தொடர்ந்து வருகிறார்.
'மனசு நெறஞ்சு இருக்கு..'
இந்த நிகழ்வு குறித்து பாப்பாள் பிபிசி தமிழிடம் அவரது உணர்வுகளை பகிர்ந்து கொண்டார். "எல்லாரும் என்னோட வீடு தேடி வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, மனசு எல்லாம் நெறஞ்சு இருக்கு. 12 வருஷம் இந்த பிரச்சனையால் அதிகமா கஷ்ட்டபட்டேன். ஆனா இப்ப எனக்காக இத்தனை பேரு இருக்காங்கனு பாக்கும்போது அந்த கஷ்டம் ஏதும் தெரியல. ஒவ்வொரு முறையும் ஸ்கூல்ல பிரச்சனை இருக்கும்போது மனசுக்கு கஷ்டமா இருக்கும். ஆனா நா சமைக்கிற சாப்பாட சாப்பிடற குழந்தைங்க சந்தோசமா சாப்பிடும்போது அந்த வருத்தம் தெரியாது. சேவூர் போலீஸ் ஸ்டேஷன்ல பிரச்சனைக்காக போகும்போது பழைய ஸ்கூல்ல என் கையால சாப்பிட்ட பசங்க என்ன பாத்து அழுதுட்டாங்க. இனி நா எதுக்கும் பயந்துக்க மாட்டேன். தைரியமா என்னோட வேலைய பாக்க போறேன்," என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் பாப்பாள்.
'சமத்துவத்தை வளர்க்க கொண்டுவந்த திட்டம்'
பாப்பாள் வீட்டில் விருந்தில் பங்கேற்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசினார். "ஏழை குழந்தைகளுக்காகவும், பள்ளி குழந்தைகளிடையே சமத்துவத்தையும் ஒற்றுமையையும் வளர்க்க கொண்டு வரப்பட்டதே சத்துணவுத்திட்டம். இந்த திட்டத்தில் பணியாற்றிய பாப்பாள் 12 ஆண்டுகளில் சாதி காரணமாக 5 ஊர்களுக்கு பந்தாடப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் அவர் திருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளியில் பணியாற்றியபோது அவருக்கு அந்த ஊரில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஏழு பேர் தொந்தரவு கொடுத்துள்ளனர். பாப்பாள் வேறு பள்ளிக்கு சென்ற பிறகும் தொடர்ந்து சாதி வெறியை அந்த ஏழு பேர் தொடர்ந்து மற்ற பள்ளிகளிலும் சாதிப் பிரச்சனை தொடரச் செய்துள்ளனர். இந்த செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது," என்றார்.
மேலும் பேசிய அவர், "தொடர்ந்து இந்த பிரச்சனைகளை சந்தித்த அவரது மனதில் தற்போது போராட்ட குணம் வெடித்துள்ளது. அதுமட்டுமல்லாது திருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளியில் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு குடத்தில் குடிக்க தண்ணீர் வைத்திருப்பதாகவும் அறிந்தேன். இதுபோன்ற செயல்பாடுகள் மாணவர்கள் மத்தியில் வேற்றுமையை உருவாக்கி விடும். இந்த வழக்கில் தற்போது வரை 88 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் யாரும் கைது செய்யப்படவில்லை. அனைவரையும் உடனடியாக கைது செய்து முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் தொகுதியிலேயே இதுபோன்ற ஒரு செயல் நடைபெற்றிருப்பது அரசு மற்றும் அதிகாரிகளின் கவனக்குறைவை காட்டுகிறது. இன்று பாப்பாள் அவர்களை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம். அவரது மன அழுத்தத்தை போக்கும் விதமாக அவருடன் உரையாடி விட்டு அவரது கையால் உணவை உண்டோம்," என்று அவர் தெரிவித்தார்.
வெட்கப்பட வேண்டிய நிகழ்வு...
பாப்பாளை வீட்டில் சந்தித்த இளைஞர் எழுச்சி இயக்கத்தின் தலைவர் எழிலன் பிபிசி தமிழிடம் அவரது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். "அவிநாசி அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்வை மிகவும் வெட்கப்பட வேண்டிய, இன்றைய சமுதாயம் அவமானப்பட வேண்டிய ஒன்றாக பார்க்கிறேன். இந்திய நாட்டில் சத்துணவுத்திட்டத்தில் தமிழகம் முன்னோடியாக செயல்படுவதாக அரசு கூறி வருகிறது. ஆனால் அந்த திட்டத்தில் பணியாற்றக்கூடியவர்களுக்கு நடைபெறும் நிகழ்வுகள் அரசால் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும். பல பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சனையில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு ஆதரவாக அதிகம் பேர் செயல்படுகின்றனர். அரசு எந்திரம் அதை கண்காணித்து நெறிப்படுத்த வேண்டும். சமூக மாற்றத்திற்கு அரசின் சரியான செயல்பாடுகள் முக்கிய தேவையாக உள்ளது என்றார்."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :