You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பதநீர் விற்று பள்ளிக்கூடம் நடத்தும் கிராம மக்கள்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகின்ற நிலையில், தூத்துக்குடி அருகே கடந்த 15 ஆண்டுகளாக கல்வி வளர்ச்சிக்காக பதநீர் விற்று வருகின்றனர் ஒரு கிராம மக்கள்.
தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், தூத்துக்குடியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அந்தோணியார்புரம் கிராமம்.
சுற்றிலும் பனைமரங்கள் மிகுதியாக காணப்படும் இந்த கிராமத்தில் பனை தொழிலாளர்கள் அதிகம்.
ஒரு காலத்தில் பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரித்து விற்பனை செய்து வந்த இந்த கிராம மக்கள், அதில் போதுமான வருமானம் கிடைக்காததால் தற்போது பதநீராகவே விற்பனை செய்து வருகின்றனர்.
அந்தோணியார்புரம் பதநீருக்கு தூத்துக்குடி பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
பனைத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக பதநீர் விற்பனை செய்வதால் ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில், கிராம மக்களே இணைந்து அனைத்து தொழிலாளர்களிடமும் பதநீரை வாங்கி மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர்.
ஊர் நிர்வாகக் குழு சார்பாக முடிவுகள் எடுக்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் அந்தோணியார்புரத்தில் பதநீர் விற்பனை நடைபெறுகிறது. இந்த பதநீர் விற்பனையில் கிடைக்கும் லாபம் அனைத்தும் கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்காகவே செலவு செய்யப்பட்டு வருகிறது.
அந்தோணியார்புரத்தில் உள்ள பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகள் வரை அரசின் நிதி உதவியைப் பெறுகின்றன. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை நிதி உதவி இல்லாததால், அந்த மக்கள் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆர்.சி. பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரியேந்திரன், “இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் 63 மாணவர்கள் 6, 7, 8ம் வகுப்புகள் படித்து வருகின்றனர். மொத்தம் 193 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழக அரசு, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் அப்பள்ளிகளை மூடி வரும் நிலையில் எங்கள் பள்ளியை நிச்சயம் தரம் உயர்த்தலாம்” என்று தெரிவித்தார்.
அந்தோணியார்புரம் கிராம கல்வி வளர்ச்சி குழு தலைவர் செல்வன் பிபிசி தமிழிடம் கருத்து தெரிவிக்கையில், "பனை மரங்களில் இருந்து கிடைக்கும் பதநீரை விற்று அதனால் வருகின்ற வருமானத்தை கொண்டு தான் அந்தோணியார்புரம் பள்ளி நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர்,"ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை ஆறு மாதங்கள் மட்டுமே பதநீர் கிடைக்கிறது. அந்தக் காலத்தில் கிடைக்கும் வருமானத்தை வைத்து அந்த ஆண்டு முழுவதும் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. கடும் வறட்சி காரணமாக பதநீர் உற்பத்தி கடந்த ஆண்டு முற்றிலும் குறைந்ததால் எங்களுக்கு பள்ளியை நடத்த மிகுந்த சிரமம் ஏற்பட்டது."
"எங்கள் தாத்தா காலத்தில் இப்பகுதியில் 3,000 பனை மரங்கள் இருந்தன. ஆனால், தற்போது வெறும் 300 பனைகள் மட்டுமே உள்ளன. நாளுக்கு நாள் பனை தொழில் நலிவடைந்து வருவதால் எதிர்காலத்தில் பள்ளியை எப்படி நடத்த போகிறோம் என்ற அச்சம் மேலோங்குகிறது," என்று தெரிவித்தார்.
"ஆர்.சி தொடக்கப்பள்ளியில் 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு நான்கு பேர் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் ரூபாய் 4,000 வீதம் 16 ஆயிரம் ரூபாய் ஊர் மக்கள் சார்பாக பதநீர் விற்று வரும் வருமானத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றோம். ஆகையால் எங்களது பள்ளியை அரசு பள்ளியாக மாற்றினால் அந்தோணியார்புரத்தை சுற்றியுள்ள அனைத்து கிராம பகுதி மாணவர்களும் கல்வி பயில உதவியாக இருக்கும்" என அப்பள்ளியின் ஆசிரியர் அருட்சகோதரி ஜூலி மேரி பிபிசியிடம் கூறினார்.
இந்த பள்ளியின் நிலை குறித்து மாவட்ட கல்வி அலுவலர் மனோகரனிடம் கேட்டபோது, "அந்த பள்ளியானது சுயநிதிப் பள்ளியாக செயல்படுவதால், பள்ளியின் செலவை நிர்வாகமே பார்த்துக் கொள்கிறது. கூடுதலாக நிதி தேவைப்பட்டால் மாவட்ட கல்வி அலுவகத்தில் முறையாக தெரிவித்தால், அரசின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்