You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் திருநங்கைகளுக்கான முதல் பள்ளி
இந்தியாவில் முதல்முறையாக கேரள மாநிலத்தில் பள்ளிப்படிப்பை தொடர முடியாத திருநங்கைகளுக்கான தங்கும் பள்ளி திறக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகள் சமூகத்தில் பல கருத்துக்களுக்கும், வெறுப்பிற்கும் ஆளாவதன் விளைவாக, எண்ணிக்கையில் சுமார் பாதியளவு திருநங்கைகள் தங்கள் பள்ளிப் படிப்பை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் "சஹாஜ்" சர்வதேச பள்ளி திருநங்கைகளுக்கான முதல் பள்ளியாக தொடங்கப்பட்டுள்ளது.
25- 50 வயதுடைய 10 பேருக்கு அந்த பள்ளியில் இடம் வழங்கப்படவிருக்கிறது.
இப்பள்ளியில் சேரும் நபர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்காக தயார்படுத்தப்படுவார்கள்; பொதுவாக 15-16 வயதினர் 10 ஆம் வகுப்பும், 17-18 ஆம் வயதினர் 12 ஆம் வகுப்பு பயில்வார்கள்.
பள்ளியின் முதல்வரான திருநங்கை ஆர்வலர் விஜயராஜா மல்லிகா, "திருநங்கைகள் சமூகத்தில் நல்லதொரு பணிகளை பெறவும் மரியாதையுடன் வாழவும் அவர்களை இப்பள்ளி தயார்படுத்தும்" என பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
"இதுவரை வந்த 14 விண்ணப்பங்களில் நாங்கள் 6 பேருக்கு இடம் வழங்கியுள்ளோம் அனைவரும் ஆணிலிருந்து பெண்ணாக மாறியவர்கள். பத்து இடங்களில் ஒன்றை பெண்ணிலிருந்து ஆணாக மாறியவர்களுக்கும் மேலும் ஒன்றை மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கியுள்ளோம்". என்றும் அவர் தெரிவித்தார்.
திருநங்கை ஆசிரியர்
திருநங்கைகள் புறக்கணிப்பிற்கு எதிரான கொள்கையை கடைப்பிடித்த முதல் இந்திய மாநிலமான கேரளாவில் இந்த பள்ளி திறக்கப்பட்டுள்ளது.
அந்த கொள்கையின் படி திருநங்கைகளுக்கு சிறப்பு கல்வி மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவச பாலின மாற்று அறுவை சிகிச்சை வழங்கப்படும்.
மாணவர்களுக்கான உணவு, தங்கும் வசதி மற்றும் படிப்பிற்கான செலவை ஏற்றுக் கொள்ளும் நபர்களை ஏற்பாடு செய்திருப்பதாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளார்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வி பயில வரும் மாணவர்களை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் ஆசிரியரும் திருநங்கையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் திருநங்கை கல்லூரி முதல்வரான மனபி பந்தோபாத்யேய் தனது பாலின அடையாளத்தால், மாணவர்களும், சக ஆசிரியர்களும் பரபரப்பை ஏற்படுத்துவதாக கூறி ராஜிநானாமா செய்த சம்பவத்தை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2 மில்லியன் திருநங்கைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது; மேலும் 2014 ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கும் சம உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் திருமணம் செய்து கொள்ளவும் சொத்து உரிமையை பெறவும் அவர்களுக்கு உரிமை உள்ளது என்றும் பணி மற்றும் கல்வி நிலையங்களில் சிறப்பு இட ஒதுக்கீடுகளை பெறவும் அவர்களுக்கு உரிமையுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க திருநங்கைகளை நோக்கிய கிண்டல் மற்றும் அவதூறுகள் பேச்சுக்களும் பரவலாக நடைபெற்றுதான் வருகிறது.
பல திருங்கைகள் குடும்பத்தை விட்டு வெளியே துரத்தப்படுகின்றனர், அவர்களுக்கு பணிகள் மறுக்கப்படுகிறது மேலும் பாலியல் தொழிலுக்கும், பிச்சை எடுப்பதற்கும் அல்லது திருமண நிகழ்வுகளில் ஆடும் சூழலுக்கும் அவர்கள் தள்ளப்படுகின்றனர்.
`இடம் தராமல் நிராகரித்த 700 பேர்`
"பள்ளிக்கான இடத்தை தேடுவது பெறும் சவாலாக இருந்தது எனவும் யாரும் அவர்களின் இடங்களை தர தயாராக இல்லை" எனவும் மல்லிகா தெரிவிக்கின்றார்.
"நாங்கள் 700 பேரை அணுகினோம்; 51 வீடுகளை அணுகினோம் அனைவரும் மறுத்துவிட்டனர். அவர்கள் நாங்கள் பாலியல் தொழில் செய்வதற்காக இடம் பார்க்கிறோம் என நினைத்துக் கொண்டதாக தெரிகிறது". என்று கூறுகிறார் மல்லிகா.
கடைசியில் ஒரு தகுந்த இடம் கிடைத்தது
தற்போது இப்பள்ளிக்கான மாணவர்கள் கேரளாவிலிருந்து வருகின்றனர். ஆனால், இம்முயற்சி கேரள மாநிலத்தை தாண்டியும் வரவேற்கபடும் என மல்லிகா நம்புகின்றார்.
"முதலில் இந்த பள்ளி ஒரு சோதனை முயற்சியாக பார்க்கப்படுகிறது பிறகு வெற்றியடைந்தால் வசதிகளை விரிவுப்படுத்தி இந்தியா முழுவதும் அதிக மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவர்" எனவும் அவர் தெரிவித்தார்.
"கேரளாவில் 25,000 திருநங்கைகள் உள்ளனர் மேலும் அதில் 57 சதவீதம் சமூக சூழலால் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டவர்கள்; அனைவருக்கும் ஒரு சரியான தங்குமிடம் கிடைக்க வேண்டும் என்று திருநங்கைகளுக்கான கொள்கைகளில் கூறப்பட்டுள்ளது".
திருநங்கை ஆர்வலர் கல்கி சுப்ரமணியம் இந்த பள்ளியை திறந்து வைத்தார்.
"இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்" என்று அவர் தெரிவித்தார்.