14 வயது தலித் சிறுமி வன்புணர்வு: 2 ஆண்டாக கிடைக்காத நீதியும், நிவாரணமும்

    • எழுதியவர், சர்வப்ரியா சங்வான்
    • பதவி, பிபிசி ஹிந்தி

14 வயது சிறுமி என்றால் உங்கள் மனதில் விரியும் காட்சி என்னவாக இருக்கும்?

rape victim

அவள் பள்ளிக்கு செல்வாள். தோழிகளுடன் மகிழ்வாக சிரித்துக்கொண்டிருப்பாள். கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருப்பாள். ஆனால் அந்த வயதில் யாரோ ஒருவனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு அதனால் கர்ப்பமாகி யாரின் உதவியும் கிடைக்காமல் அச்சிறுமி அபலையாக அலைய நேர்ந்தால் எப்படி இருக்கும். அது போன்ற நெஞ்சை உருக்கும் நிகழ்வுதான் இது...

உத்தர பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டம் டெல்லியிலிருந்து சுமார் 680 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்தச் சிறுமி பஹ்ரைச் மாவட்டத்தில உள்ள ஒரு கிராமத்தில்தான் வசிக்கிறாள். பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட அந்த 14 வயது சிறுமிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் குழந்தை பிறந்தது.

அது ஜூன் மாதம் 2016ம் ஆண்டு. அந்தச்சிறுமியின் வயிறு உப்பத் தொடங்கியது நன்றாகவே தெரிந்தது. அண்டை வீட்டு பெண் என்ன நடந்தது என கேட்டாள்..அப்போதுதான் தான் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதைச் சொன்னாள் அச்சிறுமி. அதே கிராமத்தை சேர்ந்த 55 வயது நபர்தான் அந்த கொடுஞ்செயலை செய்தது.

கத்தி முனையில் வன்புணர்வு...

தந்தையும் மகளும் கல்வி அறிவு அற்றவர்கள். தாய் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். களிமண்ணாலான குடிசை வீடுதான் அவர்கள் வசிப்பிடம். அவர்களது வாழ்க்கைத்தரம் என்பது வறுமைக்கோட்டுக்கெல்லாம் வெகு கீழே இருந்தது. தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த அக்குடும்பத்தின் இரு மகள்களில் மூத்தவளுக்கு எப்படியோ சிரமப்பட்டு திருமணம் செய்து வைத்துவிட்டார் அந்த தந்தை. இளையவளுக்கு என்ன செய்வது என்பதுதான் அந்த தந்தை முன் இருந்த பெருங்கவலை.

அப்படிப்பட்ட சமயத்தில்தான் அந்த தந்தைக்கு ஒரு தகவல் கிடைத்தது. ஏழைக்குடும்பத்து திருமண வயது பெண்களுக்கு

லக்னோவில் அரசு உதவித்தொகை கிடைக்கிறது என்ற செய்திதான் அது. இதை கூறிய அந்த நபருடன் பணத்தை பெறுவதற்காக தன் மகளை லக்னோவுக்கு அனுப்பி வைத்தார் அந்த தந்தை.

அப்போது நடந்த விபரீதத்தை வேதனை தோய்ந்த வார்த்தைகளுடன் விவரித்தார் அந்த அப்பாவி தந்தை.

"என் மகளை லக்னோவிற்கு அழைத்துச்சென்ற அந்த படுபாவி கத்தி முனையில் வன்புணர்வு செய்துவிட்டான். பிறகு நன்பாராவிலும் வீட்டுக்கு திரும்பும் போதும் அக்கொடுமையை புரிந்துள்ளான்".

பயம் காரணமாக தனக்கு நேர்ந்ததை வீட்டில் சொல்லவில்லை அச்சிறுமி. ஆறு மாதத்திற்கு பின்தான் நடந்த எல்லாமே தந்தைக்கு தெரியவந்தது. உடனே அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அந்த தந்தை. இது நடந்தது 2016ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி.

பாலியல் வன்புணர்வு

தாழ்த்தப்பட்டவருக்கு எதிராக குற்றம் இழைத்தவருக்கு முன் ஜாமீன் தரக்கூடாது என்பது சட்டம். அந்த நபர் கைதான பின் ஜாமீன் தரலாமா கூடாதா என்பது நீதிபதியின் முடிவுக்குட்பட்டது.

ஆனால் இந்த விவகாரத்தில் குற்றம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின்பும் தவறிழைத்தவர் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணமோ இழப்பீடோ தரப்படவில்லை.

இதற்கிடையில் குழந்தையை பெற்றெடுத்துவிட்டாள் அச்சிறுமி. தங்களுக்கே சோற்றுக்கு வழியில்லாமல் திண்டாடிக்கொண்டிருந்த குடும்பத்தில் இன்னுமொரு உறுப்பினர் சேர்ந்துவிட்டதால் நிலைமை இன்னும் மோசமானது.

இந்தச்சூழ்நிலையில் வழக்கை விசாரித்து வந்த காவல் துறை குழந்தையின் டிஎன்ஏவும் குற்றம் சாட்டப்பட்டவரின் டிஎன்ஏவும் பொருந்தினால் மட்டுமே இதில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துவிட்டது. டிஎன்ஏ அறிக்கைக்காக காத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாலியல் வன்புணர்வுக்காளானவர்கள் நலனுக்காக கடுமையான சட்டங்கள், விதிமுறைகள், நீதிமன்றங்கள் உருவாக்க வேண்டும். ஆனால் இவை எல்லா சமயத்திலும் பாதிக்கப்பட்டவருக்கு சாதகமாக அமையுமா என்பது கேள்விக்குறியே.

தாழ்த்தப்பட்ட குடும்ப சிறுமி வன்புணர்வினால் கருவுற்றது தெளிவாக தெரியும் நிலையில் தேசிய அளவிலான அமைப்போ அல்லது மாநில அளவிலான அமைப்போ அல்லது மாவட்ட அளவிலான அமைப்போ அச்சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டியிருக்க வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளாகியும் நீதிக்காக காத்திருக்க வேண்டியுள்ளது அச்சிறுமி.

இவ்விஷயத்தை விசாரிப்பதற்காக சம்மந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு சென்றேன். இதற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவளது தந்தையுடனும் பேசினேன்.

அந்தக்காவல் நிலையத்தில் தலைமை பொறுப்பில் இருந்த பெண் அதிகாரி நான் சென்றிருந்த போது உள்ளூர் முக்கிய பிரமுகருடன் பிரச்னை ஒன்றை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்கிடையிலும் எனது வருகையின் காரணம் பற்றி கேட்ட இந்த அதிகாரி அதை சர்க்கிள் அலுவலகத்தில்தான் கேட்க வேண்டும் என்றார். அடுத்து மதியம் 2 மணியளவில் பஹ்ரைச் சர்க்கிள் அலுவலகத்திற்கு சென்றேன். அப்போது சர்க்கிள் அதிகாரி அங்கு இல்லை. அப்போது அங்கிருந்த அதிகாரியின் உதவியாளர் என்னிடம் சிலவற்றை கூறினார். லக்னோவில் மட்டும் டிஎன்ஏ சோதனை தொடர்பான 5500 வழக்குகள் தேங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் டிஎன்ஏ அறிக்கை இல்லாமல் ஒருவரை எப்படி கைது செய்வது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாலியல் வன்புணர்வு
படக்குறிப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு எடுக்கப்பட்ட படம்

பாதிக்கப்பட்டவருக்கு சட்டப்படி இழப்பீடு தரப்பட்டதா என கேட்டேன். முதல் தகவல் அறிக்கைப்படியும் மருத்துவ சோதனை அடிப்படையிலும் இழப்பீட்டுத்தொகையில் 50% உடனடியாக தரப்படும் என்றார் அவர். 2016 ஏப்ரலில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தரப்படும். கூட்டு வன்புணர்வால் பாதிக்கப்பட்டிருந்தால் 8 லட்சம் ரூபாய் இழப்பீடு என்றும் அவர் கூறினார். இந்த சிறுமியை பொறுத்தவரை இரண்டரை லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும்.

சிறுமிக்கு இழப்பீடு வழங்கப்படும் பட்சத்தில் அதை பக்கத்து அறையில் அமர்ந்துள்ள போலீஸ்காரர்தான் தருவார் என அந்த உதவியாளர் தெரிவித்தார். இழப்பீடு தருவது குறித்த அந்த போலீஸ்காரரிடமே கேட்டுவிட்டேன். விசாரணை அதிகாரி எழுத்துமூலம் பரிந்துரைத்தால் தான் இழப்பீடு தருவேன் என அந்த போலீஸ்கார ர் தெரிவித்தார்.

சர்க்கிள் அதிகாரி வந்தவுடன் அவரிடம் இதே கேள்வியை எழுப்பினேன். அப்போது அந்த உதவியாளர் கூறினார்....2 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் இழப்பீடு தந்திருக்க வேண்டும்... இப்போதும் பிரச்னையில்லை. நாளையே அதை தந்துவிடலாம்... என்றும் அவர் கூறினார்.

இவர்கள் இந்த விஷயத்தையே வெகு சாதாரணமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாக புரிந்துவிட்டது. உரிய சமயத்தில் சிறுமிக்கு பணம் கிடைத்திருந்தால் அதை வைத்து சிகிச்சைக்கும் வழக்கு செலவுகளுக்கும் பயன்படுத்தியிருக்கலாம்.

காவல் துறையின் அலட்சியம் காரணமாகவோ அல்லது தவறு காரணமாகவோ இப்படி நடந்துள்ளது.

படிப்பறிவில்லாத சிறுமியும் அவளது தந்தையும் எப்படி தோற்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

மருத்துவ அறிக்கையில் சிறுமியின் வயது 19 என இருந்தது எப்படி?

சிறுமி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படும்போது அவளுக்கு வயது 14 என்கிறார் அவளது தந்தை. நீதிபதியிடம் தந்த வாக்குமூலத்திலும் வயது 14 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் வயது 20 என குறிப்பிடப்பட்டிருந்த்து.

பாலியல் வன்புணர்வு

பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது 18க்கு கீழ் இருக்கும் பட்சத்தில் அந்த புகாரை சிறுவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவு 21ன் கீழ் வழக்காக பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் முதல் தகவல் அறிக்கையில் இவ்வாறு பதிவு செய்யவில்லை.

இதைக்கேட்டதற்கு 2 ஆண்டுகளுக்கு முன் சிறுமிக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையை அவர் தந்தார்.

பாதிக்கப்பட்டவரின் துல்லியமான வயதை உறுதிப்படுத்த கை எலும்பின் எக்ஸ்ரே, அறிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால மருத்துவ அறிக்கையிலோ சிறுமிக்கு 19 வயது என எழுதப்பட்டிருந்தது.

சிறுமிக்கு வன்கொடுமை நடக்கும் போது 14 வயது என தந்தை கூறியிருந்த நிலையில் அறிக்கையில் 19 என எப்படி குறிப்பிட்டீர்கள் என கேட்டேன். எக்ஸ்ரே ஒரு போதும் பொய் சொல்லாது என்றார் அந்த அதிகாரி.

போலீஸ் அறிக்கையை கூர்ந்த ஆராய்ந்தபோது அதில் சந்தேகத்துக்கிடமான சில விஷயங்களை கண்டுபிடித்தேன். எக்ஸ்ரே தாளில் சோதனை வரிசை எண் 1278 என்றும் மருத்துவ அறிக்கையில் வரிசை எண் 1378 என்றும் இருந்தது.

இறுதி அறிக்கையில் 1278ல் உள்ள 2 என்பது 3 என நீல மையால் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் இறுதி அறிக்கையில் ஒரு பகுதி நீல மையிலும் இன்னொரு பகுதி கறுப்பு மையிலும் எழுதப்பட்டிருந்தது. அதில் சிறுமியின் கைரேகையும் பெறப்பட்டிருந்தது.

இதையெல்லாம் பார்த்த பிறகு மருத்துவ அறிக்கையில் செய்யப்பட்டிருந்த முறைகேடுகளை எப்படி கண்டுகொள்ளாமல் செல்லமுடியும் என்றேன். எனது இந்த கேள்விக்கு பதில் தராத அவர்கள் இந்த வழக்கை பற்றி உங்களுக்கு சொன்னது யார் என பதில் கேள்வி கேட்டார்கள்.

2016 ஜூன் 24ல் முதல் தகவல் அறிக்கை பதிவாகிறது. இதற்கு 25 நாட்களுக்குபின்தான் நீதிபதி முன் அச்சிறுமி வாக்குமூலம் அளிக்கிறாள். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் 24 மணி நேரத்திற்குள் பெறப்பட வேண்டும். தாமதம் ஏதும் நேர்ந்தால் அதற்கான காரணத்தை போலீசார் நீதிபதியிடம் எழுத்து மூலம் தெரிவித்திருக்கவேண்டும்.

இதில் போலீஸ் விசாரணையில் சிறுமியின் தந்தைக்கு நம்பிக்கை இல்லை. குற்றம் செய்தவர் பணத்தை கொண்டு காவல் துறையின் கையை கட்டிப்போட்டுவிட்டார் என்பதுதான் அத்தந்தையின் குற்றச்சாட்டு.

மருத்துவ அறிக்கையில் இருந்த முரண்களை வழக்கறிஞர்கூட கண்டுபிடித்து இழப்பீடு பெற்றுத்தர முயற்சிக்காதது எனக்கு ஆச்சரியமே.

போலீஸ் மற்றும் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்துவிட்ட சிறுமியின் தந்தை கிராமத்தலைவரின் உதவியுடன் நாட்டின் முக்கியமான 11 பதவிகளில் உள்ளோரிடம் முறையிட்டார். ஆனால் யாருமே அச்சிறுமியை 2 ஆண்டாகியும் கண்டுகொள்ளவில்லை.

பிரதமர், முதல்வர், மாவட்ட ஆட்சியர், தேசிய மனித உரிமை ஆணையம், மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், போக்குவரத்து அமைச்சர், எம்எல்ஏ, தேசிய மகளிர் ஆணையம், மாநில பெண்கள் ஆணையம், காவல் தலைமை ஆய்வாளர் என 11 இடங்களுக்கு அனுப்பப்பட்ட முறையீட்டு கடிதங்களின் நகலும் என்னிடம் உள்ளன.

பாலியல் வன்புணர்வு

பஹ்ரைச்சிலிருந்து கடந்த ஜூன் 3ம் தேதி திரும்பியபோது இது குறித்து மாவட்ட ஆட்சியர் மாலா ஸ்ரீவஸ்தவாவுக்கு தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் தெரிவித்தேன். எனது தகவலின் பேரில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதா என ஒரு வாரம் கழித்துக் கேட்டேன். அதை சரிபார்த்துக்கொண்டிருப்பதாக சாதாரணமாக கூறிவிட்டார் அவர். சிறுமிக்கு இழப்பீடு தருவது குறித்து சம்மந்தப்பட்ட துறைக்கு கூறியிருப்பதாகவும் அவர் கூறினார். மற்ற நடவடிக்கைகள் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

இதன்பின் நான் உத்தர பிரதேச தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் முறையிட்டேன். சிறுமியின் குடும்பத்தை தனது லக்னோ அலுவலகத்துக்கு அனுப்புமாறு அந்த ஆணையர் என்னிடம் கூறினார். ஆனால் அக்குடும்பம் மிகவும் ஏழ்மையில் வாடுகிறது என்பதால் நேரில் சென்று சந்திப்பதே சரியாக இருக்கும் எனக் கூறினேன். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். அச்சிறுமியின் ஊருக்கு போவதற்கு தங்கள் அமைப்பில் யாருமில்லை என அவர் கூறினார்.

போலீசாரும் கூட அச்சிறுமிக்கு உதவவில்லை. இந்த கட்டுரையை எழுதும்வரை உதவி அவளை சென்றடையவில்லை. போலீஸ், மருத்துவர், வழக்கறிஞர், பத்துக்கும் அதிகமான சமூக சேவை அமைப்புகள் என யாரிடமிருந்தும் சிறுமிக்கு உதவி கிடைக்கவில்லை. நான் அச்சிறுமியின் குடும்பத்தினரிடம் பேசும் வரை இதற்கு இழப்பீடு என்ற ஒன்று இருப்பதே அவர்களுக்கு தெரியாது. எந்த அதிகாரிகளும் இது பற்றி அவர்களிடம் கூறவில்லை.

குற்றம்சாட்டப்பட்டவர் கைதாகும் வரையோ டிஎன்ஏ சோதனை அறிக்கை வரும்வரையோ அந்த சிறுமிக்கு எந்த உதவியும் கிடைக்காது.

தற்போது அந்த சிறுமி பக்கார்பூர் என்ற கிராமத்தில் உறவினர் வீட்டில் வசிக்கறார். அந்த குழந்தை, சிறுமியின் தந்தை பாதுகாப்பில் உள்ளது. அவர் தினக்கூலியாக தன் வயிற்றை கழுவி வருகிறார்.

வன்புணர்வு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபோது ரூ.15,000 கொடுத்து கருக்கலைப்பு செய்யுமாறு குற்றமிழைத்தவர் கூறியுள்ளார். மேலும் அந்த சிறுமியின் நடத்தையையும் அந்நபர் கேள்விக்குள்ளாக்கியிள்ளார். இந்த பிரச்னையில் குற்றப்பத்திரிகை எதுவும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. டிஎன்ஏ அறிக்கை வராததால் வழக்கு 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

அந்த சிறுமி கர்ப்பம் ஆகவில்லை என்றால் இவ்வழக்கில் மேற்கொண்டு எதுவும் நடக்குமா என்பது சந்தேகமே. மேலும் அச்சிறுமிக்கு 18 வயதுக்கு மேலிருக்கும் பட்சத்தில் என்ன நடந்திருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.

பாலியல் வன்புணர்வு

பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண் இவ்வளவு மோசமாக நடத்தப்படுவது இது முதல்முறையல்ல... இது போன்ற செய்திகள் டிவிக்களில் விரைவு செய்திகள் பிரிவில் 15 நொடிகளில் கடந்து சென்றுவிடும். இதில் அடுத்து என்ன நடக்கிறது...தீர்வு கிடைத்ததா என்றெல்லாம் யாரும் பார்க்கமாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்காக உள்ள அரசு அமைப்புகள் கூட இது போன்ற சம்பவங்களை கண்டுகொள்வதில்லை. பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க சட்டம் பல்வேறு வாய்ப்புகளை தந்துள்ளது. ஆனாலும் அச்சிறுமிக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவராக இருந்தால்...

* குற்றம் இழைத்தவர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியாக இல்லாமல் இருந்தால் எஸ்சி/ எஸ்டி சட்டம் 1989ன் படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

* மருத்துவ பரிசோதனை அறிக்கையும் முதல் தகவல் அறிக்கையும் இருப்பின் இழப்பீட்டுத் தொகையில் 50% உடனே வழங்கப்பட வேண்டும்.

* பாதிக்கப்பட்டவருக்கும் அவர் சார்ந்திருப்பவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

* பாதிக்கப்பட்டவர் சிறப்பு நீதிமன்றத்திலோ அல்லது பிரத்யேக சிறப்பு நீதிமன்றத்திலோ சாட்சியங்களையோ ஆவணங்களையோ தாக்கல் செய்ய மனு அளிக்கும் வாய்ப்பு தரப்பட வேண்டும்.

* பாதிக்கப்பட்டவருக்கும் சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டிய கடமை சிறப்பு நீதிமன்றத்திற்கோ அல்லது பிரத்யேக சிறப்பு நீதிமன்றத்திற்கோ உள்ளது. மேலும் விசாரணையின்போது பாதிக்கப்பட்டவர்களின் சமூக பொருளாதார நலனுக்காக குறிப்பிட்ட தொகை வழங்கப்பட வேண்டும் .

* பாதிக்கப்பட்டவர், சாட்சி, தகவல் தந்தவர் மிரட்டலுக்கு ஆளாகும் பட்சத்தில் விசாரணை அதிகாரியும் காவல் அதிகாரியும் இது பற்றி அறிக்கை தரவேண்டும்.

* பாதிக்கப்பட்டவர் தரப்புக்கு முதல் தகவல் அறிக்கையின் பிரதியை இலவசமாக வழங்கவேண்டும்.

* பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக நிதியுதவி தருவது மாநில அரசின் பொறுப்பு

* முதல் தகவல் அறிக்கை பதியும் போதும் புகார் பெறும்போதும் பாதிக்கப்பட்டவருக்கு உள்ள உரிமைகள் விளக்கப்பட வேண்டும்

* இழப்பீடுகள் குறித்த தகவல்களை வழங்குவது மாநில அரசின் கடமை.

* விசாரணை ஏற்பாடுகள், சட்ட உதவிகள் குறித்த தகவலை பாதிக்கப்பட்டவருக்கு எடுத்துச்சொல்வது மாநில அரசின் கடமை.

* பாதிக்கப்பட்டவருக்கு அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் உதவியையோ அல்லது வழக்குரைஞரின் உதவியையோ நாடும் உரிமை உண்டு.

* சிறப்பு பிரத்யேக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை பதியப்பட்டு 2 மாதங்களுக்குள் வழக்கு முடிக்கப்படவேண்டும்.

Scheduled Caste or a Tribe
படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தற்போது குழந்தையை பராமரித்து வருகிறார்

பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு கீழானவராக இருந்தால்...

* இதுபோன்ற சமயங்களில் குற்றம் இழைத்தவர் மீது போஸ்கோ சட்டம் என அறியப்படும் சிறுவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும்.

* பாதிக்கப்பட்டவர் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தால் 24 மணி நேரத்திற்குள் பாதுகாப்பு தரப்படவேண்டும்.

* விசாரணை முடியும் வரை பாதிக்கப்பட்டவருக்கு குற்றம் இழைத்தவரால் எவ்வித கெடுதலும் நேராமல் பாதுகாக்க வேண்டியது விசாரணை அதிகாரியின் பொறுப்பு.

* போஸ்கோ சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு அமைக்க வேண்டும். இதன் மூலம் வழக்குகளை விரைந்து தீர்க்கமுடியும்.

* போலீஸ் அறிக்கை அல்லது புகார் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்கும்

* சிறப்பு நீதிமன்றம் வழக்கை எடுத்த 30 நாளுக்குள் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது முக்கியம்.

* விசாரணை அல்லது சிறப்பு நீதிமன்றங்கள் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிப்பது அவசியம்.

* பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் அவர்களாக சட்ட உதவி கோர இயலாவிட்டால் சட்ட உதவி ஆணையம் மூலம் ஒரு வழக்குரைஞரை ஏற்பாடு செய்ய வேண்டும்.

* பாதிக்கப்பட்டவரிடம் விசாரணை தொடங்குமுன் அவர்கள் நிபுணர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியை பெற அனுமதிக்கப்பட வேண்டும்.

* பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பம் ஆனால் குற்றம் இழைத்தவருக்கு குறைந்தது 10 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படவேண்டும்.

Scheduled Caste or a Tribe

பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டோருக்கான சட்டங்கள்

* உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அறிக்கை தாக்கல் செய்த 24 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர் நீதிபதி முன் நிறுத்தப்பட வேண்டும். தாமதம் நேரிடின் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்

* குற்றவியல் நடைமுறைச் சட்டம் 357 சி-யின் படி பாதிக்கப்பட்டவருக்கு அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை தரப்பட வேண்டும் என்பதை சட்டம் வலியுறுத்துகிறது

* 1987 சட்ட உதவிகள் சட்டப்படி எந்தப் பெண்ணும் குழந்தையும் தாழ்த்தப்பட்டவரும் பழங்குடியினரும் அரசின் சட்ட உதவி மையம் மூலம் வழக்குரைஞர்களை பெற உரிமையுள்ளவர்கள் ஆவர்.

* பாதிக்கப்பட்டவர் நிதியுதவி கோரியோ இழப்பீடு கோரியோ சட்ட உதவி ஆணையத்துக்கு மனு செய்யலாம்.

* மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக திட்ட்டங்களின் கீழ், எவ்வித வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இலவசமாக மருத்துவ மற்றும் சட்ட உதவிகள், கவுன்சலிங் வழங்கப்படும்.

* வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர் எந்த காவல் நிலையத்திலும் தனக்கு நேர்ந்த கொடுமையை புகார் செய்ய இயலும். காவல் நிலைய வரம்பில் குற்றம் நடக்காவிட்டாலும் புகார் அளிக்கலாம். இது போன்ற இடங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை பூஜ்யம் முதல் தகவல் அறிக்கை எனப்படும்.

* முதல் தகவல் அறிக்கை யை பதிவு செய்ய போலீஸ் அதிகாரி மறுக்கும் பட்சத்தில் குற்றவியல் சட்டம் 2013 பிரிவு 166ன் கீழ் அவரை தண்டிக்க முடியும். இதில் அவருக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைப்பதுடன் பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :