2018 உலகக்கோப்பை கால்பந்து :ரஷ்யாவிற்கு சைக்கிளில் சென்ற தென் இந்தியர்

    • எழுதியவர், விகாஸ் பாண்டே
    • பதவி, பிபிசி

தென் இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் க்ளிஃபின் ஃப்ரான்சிஸ். ஒரு நாள் வீட்டில் அமர்ந்திருந்த க்ளிஃபினிடம், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு நீ போகவில்லையா என்று அவரது நண்பர் கேட்டுள்ளார்.

உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவை பார்க்க ரஷ்யாவிற்கு போனாலும் போவேன் என்று கூறியுள்ளார் க்ளிஃபின்.

இது ஆகஸ்டில் நடந்தது. ஆனால், கேரளாவில் இருந்து ரஷ்யா செல்ல விமான டிக்கெட் வாங்க அதிக செலவாகும். பகுதி நேரத்தில் கணித பாடம் எடுக்கும் அவர், நாள் ஒன்றுக்கு 40 டாலர்கள் ஊதியம் பெறுகிறார்.

"விமானத்தில் ரஷ்யாவிற்கு சென்று, அங்கு ஒரு மாதம் தங்கும் அளவிற்கு என்னிடம் போதிய பணம் இருக்காது. எப்படி மலிவாக அங்கு செல்வது என்று நானே என்னை கேட்டுக் கொண்டபோது, சைக்கிள்தான் அதற்கு ஒரே வழி என்று தோன்றியது."

அவரது நண்பர்கள் முதலில் நம்பவில்லை. ஆனால், சைக்கிளில் ரஷ்யா செல்ல மனதளவில் தயாராகியிருந்தார் க்ளிஃபின்.

பிப்ரவரி 23ஆம் தேதியன்று, தனது பயணத்தை தொடங்கிய க்ளிஃபின், விமானம் மூலம் துபாய் சென்று, அங்கிருந்து படகு வழியாக இரான் சென்றார். இரானில் இருந்து மாஸ்கோவுக்கு 4,200 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம்.

அவருக்கு இறுதியான பரிசு, உலகிலேயே சிறந்த கால்பந்து வீரர் என்று கூறப்படும் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸியை பார்க்க கிடைக்கப்பெறும் வாய்ப்பு.

"எனக்கு சைக்ளிங் என்றால் மிகவும் பிடிக்கும். மற்றும் கால்பந்து என்றால் வெறி கொண்டு பார்ப்பேன்" என்று பிபிசியிடம் கூறுகிறார் க்ளிஃபின்.

முதலில் பாகிஸ்தான் வழியாக பயணம் செய்ய திட்டமிட்டார் க்ளிஃபின். இந்தியா - பாகிஸ்தான் இடையே இருந்த பதற்றம் காரணமாக அந்த திட்டத்தை அவர் கைவிட்டார்.

கால்பந்து மற்றும் படங்கள்

"என் திட்டத்தை மாற்றி அமைத்ததினால் எனக்கு அதிக செலவுகள் ஆனது. என் சைக்கிளை துபாய்க்கு எடுத்து செல்ல இயலவில்லை. இதனால் அங்கு 700 டாலர்கள் செலவு செய்து புதிய சைக்கிள் ஒன்றை வாங்கினேன். அதிக தூர பயணங்களுக்கு அது உகந்தது இல்லை என்றாலும், அதைதான் என்னால் வாங்க முடிந்தது," என்று அவர் தெரிவித்தார்.

மார்ச் 11ஆம் தேதி இரான் நாட்டிற்கு சென்றடைந்தார் க்ளிஃபின்.

"உலகில் மிக அழகான நாடு அது. மக்கள் அவ்வளவு அன்பாக என்னை வரவேற்றனர். 45 நாட்கள் இரானில் இருந்தேன். ஆனால், இரண்டே நாட்கள்தான் விடுதியில் தங்கியிருந்தேன்" என்று கூறுகிறார் அவர்.

நாள் ஒன்று 10 டாலர்கள் மட்டுமே செலவு செய்யும் அளவிற்கு க்ளிஃபினிடம் பணம் இருந்தது. ஆனால், இரானில் மக்கள் பலரும் தங்கள் வீடுகளுக்கு அழைத்து தங்க வைத்து, உணவு அளித்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

"இரான் குறித்த என் பார்வை மாறிவிட்டது. உலக அரசியலை அடிப்படையாக வைத்து ஒரு நாடு இப்படிதான் என்று முடிவெடுக்கக்கூடாது" என்று கூறுகிறார் அவர்.

வியக்கத்தகுந்த இயற்கை காட்சிளை நினைத்து பார்க்கிறார் க்ளிஃபின்.

இரான் நாட்டில் உள்ள அழகான நிலங்களையும் கிராமங்களையும் பார்த்தபோது, சைக்ளிங் செய்தது அவ்வளவு கடினமாக இல்லை. நிச்சயம் அங்கு மீண்டும் ஒரு நாள் திரும்பிப் போகப் போவதாக அவர் கூறுகிறார்.

"ரஷ்யாவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் இரானுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு பாலிவுட் படங்கள் மிகவும் பிடித்திருக்கிறது. பல இடங்களில் அதை பற்றி பேசி கலந்துரையாட முடிந்தது. கால்பந்து விளையாட்டும், படங்களும் உலகில் உள்ள அனைவரையும் இணைக்கிறது என்பது உண்மையே" என்று க்ளிஃபின் தெரிவித்தார்.

சைக்ளிங்கால் மெலிந்துவிட்டேன்

இரானுக்கு அடுத்து அவர் சென்றது அசெர்பைஜான். கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவிற்கு இடையில் உள்ள நாடு இது.

அங்கு எல்லையில் இருந்த காவல்துறையினர், க்ளிஃபினின் ஆவணங்களை சரிபார்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில், தொடர்ந்து சைக்ளிங் செய்ததில் அதிக எடையை அவர் இழந்திருந்தார்.

"எனது ஆவணங்களில் இருக்கும் புகைப்படத்திற்கும், நேரில் இருந்த எனக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. எனது தகவல்களை சரிபார்க்க எட்டு மணி நேரத்திற்கு மேலானது, ஆனால் என்னிடம் அவர்கள் நன்றாக நடந்து கொண்டனர்" என்று க்ளிஃபின் தெரிவித்தார்.

அசெர்பைஜானில் ஹோட்டலில் தங்க போதிய பணம் இல்லாததால் பெரும்பாலும் ஆங்காங்கே இருந்த பூங்காக்களில் கூடாரம் அமைத்து அவர் தங்கினார்.

யாரும் இல்லாத இடத்தில் சிக்கிய க்ளிஃபின்

ஜார்ஜியா நாட்டை சென்றடைந்த க்ளிஃபினுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.

"என்னிடம் எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தது. அசெர்பைஜனக்கு என்னிடம் சிங்கிள் என்ட்ரி விசா இருந்ததினால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது" என்கிறார் அவர்.

இதனால் ஜார்ஜியா மற்றும் அசெர்பைஜான் இடையே மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு நாள் சிக்கியிருந்ததாக க்ளிஃபின் கூறுகிறார்.

மீண்டும் வேறொரு வழியை கண்டுபிடித்து ரஷ்யாவின் டஜெஸ்தான் எல்லையை அவர் அடைந்தார்.

மொழி ஒரு பெரும் பிரச்சினையாக இருந்ததாக க்ளிஃபின் குறிப்பிடுகிறார்.

ஒரு இந்தியர் சைக்கிளில் வருவதை அவரகள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

டாம்பாவ் வரை சென்ற க்ளிஃபின், அங்கிருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாஸ்கோவிற்கு ஜூன் 26ஆம் தேதிக்குள் செல்ல வேண்டும்.

அன்று நடைபெற உள்ள ஃபராண்ஸ் மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டுகளை மட்டும்தான் அவரால் பெற முடிந்தது.

"ஆனால் என் ஆதரவு அர்ஜென்டினாவுக்குதான். எனக்கு மிகவும் பிடித்தவர் லியோனல் மெஸ்ஸி. அவரை கடவுள் போல் நான் வழிபடுவேன். அவரை பார்த்து, அவரிடம் என் சைக்கிளில் கையெழுத்து வாங்க வேண்டும் என்பது என் கனவு" என்று கூறுகிறார் க்ளிஃபின்.

தனது இந்த பயணம், கால்பந்து மற்றும் உடல்நலம் ஆகிய இரண்டையும் மக்களிடத்தில் ஊக்குவிக்கும் என்று க்ளிஃபின் ஃப்ராண்சிஸ் நம்புகிறார்.

"உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், ஒரு நாள் இந்தியா விளையாடுவதை நான் பார்க்கவேண்டும். இந்தியாவில் பல குழந்தைகள் கால்பந்து விளையாடுவதை தேர்ந்தெடுத்தால்தான் அது சாத்தியமாகும்" என்று அவர் தெரிவித்தார்.

என் கதையை படித்தபிறகு பலரும், சைக்ளிங் செய்வதை பழக்கமாக்கிக் கொள்வர் என்றும் தாம் நம்புவதாக கூறினார்.

"என் பயணம், ஒரு சிறுவரையாவது கால்பந்து விளையாட ஊக்குவிக்கும் என்றால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்" என்று க்ளிஃபின் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :