பிரதமர் மோதி செய்யும் யோகா எந்த வகை?

    • எழுதியவர், யோக்குரு தீரஜ் வஷிஷ்ட்
    • பதவி, வஷிஷ்ட் யோக் ஃபவுண்டேஷன்

விராட் கோஹ்லியின் 'ஃபிட்னஸ் சவாலை' ஏற்கத் தயார் என்று கூறிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அண்மையில் தனது உடற்தகுதியை நிரூபிக்க வெளியிட்ட காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானதுடன், அதை வைத்து கிண்டலும், நையாண்டியுமாக மீம்ஸ்கள் வெளிவந்து சமூக ஊடகங்களை கலகலக்க வைத்துள்ளன.

மோதி செய்யும் யோகா எந்த வகை?

பட மூலாதாரம், Getty Images

அந்த காணொளிக் காட்சியுடன் ஒரு டிவிட்டர் செய்தியையும் பதிவு செய்திருக்கிறார் பிரதமர். அதில், 'நான் எனது காலை உடற்பயிற்சிகளில் இருந்து சில காட்சிகளை வெளியிட்டிருக்கிறேன். யோகாவுடன் இயற்கையின் பஞ்ச பூதங்களுடன் இணைந்து நடைபயிற்சி மேற்கொள்கிறேன். பஞ்சபூதங்களுடன் இணைந்து நடைபயிற்சி மேற்கொள்கிறேன். இயற்கையுடன் இணைந்து உடற்பயிற்சி செய்வதுடன், மூச்சுப்பயிற்சியும் மேற்கொள்கின்றேன்' என்று அவர் கூறியிருக்கிறார்.

சரி, இப்போது நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், செய்தி ஊடகங்களில் 'பஞ்சதத்வ யோகா' என்ற பெயரில் மோதி செய்யும் யோகா ஒளிபரப்பபடுகிறது. உண்மையில் இதுதான் யோகாவை பயிற்சி செய்யும் முறையா?

'பஞ்ச பூதங்கள் என்றால்' என்ன? உண்மையில் இவற்றுக்கும் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா?

இந்த கேள்விக்கான பதில்களை ஆராய்வதற்கு முன்னதாக, இந்த காணொளிக் காட்சியில் பிரதமர் மோதி செய்திருக்கும் உடற்பயிற்சியின் மற்ற அம்சங்களை புரிந்துகொள்வோம்.

மோதி செய்யும் யோகா எந்த வகை?

பட மூலாதாரம், Getty Images

காணொளிக் காட்சியின் தொடக்கத்தில் பிரதமர் நடைபயிற்சி செய்வது காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், யோகா பயிற்சியில் இது ஒரு பகுதி இல்லை என்றாலும் உடற்பயிற்சியின் ஒரு வகை.

பிரதமர் பின்நோக்கி நடக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இப்படி நடக்கும்போது, காலின் தசைகளுக்கு மாறுபட்ட இயக்கம் கொடுக்கப்பட்டு அவை வலுவடையும்.

தண்ணீர், மணல், கூழாங்கல், மரம் என பல்வேறு தளங்களில் பிரதமர் நடக்கிறார். இதன் அடிப்படையில்தான் அவர் பஞ்சதத்வ யோகா என்று கூறுகிறார்.

ஒரு பெரிய கல்லில் பின்புறமாக பிரதமர் படுத்திருப்பதைப் போல காணொளி காட்சிகளில் காட்டப்படுகிறது. இது உடலின் நெகிழ்வுத்தன்மையை காட்டுகிறது.

இதை, பின்புறமாக வளையும் ஆசனம் என்ற பிரிவில் சேர்க்கலாம். இது தசைகளை வலுப்படுத்துவதோடு, முதுகுத்தண்டின் வளையும் தன்மையை அதிகரிக்க செய்து, இதயத்தையும் நுரையீரலையும் சீராக செயல்பட செய்கிறது.

NARENDRAMODI

பட மூலாதாரம், NARENDRAMODI.IN/BBC

காணொளியின் இறுதிப் பகுதியில் பிரதமர் பிராணாயாமம் செய்வது காண்பிக்கப்படுகிறது. முதலில் அவர் நின்றவாக்கில் அனுலோம்-விலோம் மற்றும் கபாலபதி கிரியாவைத் செய்கிறார். ஆனால், பிராணாயாம விதிகளின்படி, இவை தலைகீழ் வரிசையில் செய்யப்பட வேண்டும்.

யோக குரு ராம்தேவை, மோதி சந்தித்து உரையாடியிருந்தால், அவருக்கு யோகாவின் விதிமுறைகள் தெரிந்திருக்கும்.

பொதுமக்களிடையே உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை பரப்புவது மட்டுமே காணொளிக் காட்சியின் நோக்கம் என்றால், யோகா செய்யும் கிரம வரிசையை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

பஞ்சபூதங்களின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்வோம்

பண்டைய காலத்தில் இருந்தே யோகா ஓர் ஆழமான உணர்வை கொண்டுள்ளது. 'யத் பிண்டே, தத் பிரம்மாண்டே' என்ற சுலோகத்தின் பொருள், பிரபஞ்சத்தின் அடிப்படை கூறுகளால் உருவானது நமது உடல். இந்த தத்துவம் வேரூன்றியிருந்தது.

யோகம், தந்திரம், ஆயுர்வேதம், ஜோதிடம் போன்ற அனைத்துமே பஞ்ச பூதங்களால் ஆனது உடல் என்று கூறுகிறது.

பஞ்ச பூதங்களில் சமநிலை தவறினால், பிரளயம், அழிவு, நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் ஏற்படுவதைப்போல, நமது உடலில் இந்த ஐந்து தனிமங்களின் சீரற்றத்தன்மையால் பலவிதமான உடல் மற்றும் மன நோய்கள் ஏற்பட வழிவகுக்கும். அதுமட்டுமல்ல, நமது வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகும்.

யோகாவின் பல்வேறு வகைகளை செய்வதன் முக்கிய நோக்கம், நமது உடலில் இருக்கும் பஞ்ச பூதங்களின் கூறுகளை சமநிலைப்படுத்தி அவற்றை சுத்திகரிப்பதுதான்.

தந்திரத்தில் இதை பஞ்சபூத சுத்திகரிப்பு என்றும் அழைக்கின்றானர்.

மோதி செய்யும் யோகா எந்த வகை?

பட மூலாதாரம், Getty Images

1. பூமி

பஞ்ச பூதங்களில் முதன்மையானது பூமி. நமது பெளதீக உடலில் இதுவே ஆதாரமானதாக கருதப்படுகிறது. இந்த தத்துவம் உடலுக்கு நிலைத்தன்மையை தருகிறது. நமது உடலில் எலும்புகள் மற்றும் உறுப்புகளுக்கு வடிவத்தை கொடுக்கிறது பூமி எனும் தத்துவம்.

நம் உடலில் இருக்கும் திடமான உறுப்புகள் அனைத்தும் பூமி என்ற தத்துவமாக கருதப்படுகிறது.

பூமி என்ற தத்துவம் உடலில் குறைந்தால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

தசை, எலும்புகள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் ஏற்படும். முதுகுவலி, எலும்புப்புரை (ஆஸ்டியோபோரோசிஸ்), உடல் பருமன், தளர்ச்சி, மெலிந்த உடல்வாகு, பலவீனம் போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

யோகா சிகிச்சை - உடலின் சமநிலையை பேணுவதற்காகவே யோகாசனங்கள் செய்யப்படுகின்றன. நின்றுக் கொண்டே செய்யக்கூடிய ஆசனங்கள், தரையில் வெறுங்காலுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் ஆசனங்கள், களிமண் பூசும் சிகிச்சை மற்றும் தூய்மையான சமச்சீர் உணவு.

2. நீர்

NARENDRAMODI

பட மூலாதாரம், NARENDRAMODI.IN/BBC

ரத்தம், உமிழ்நீர், ஹார்மோன்கள், நிணநீர் என நமது உடலில் இருக்கும் நீர்ம பொருட்கள் அனைத்தும் நீர் என்ற தத்துவத்திற்குள் அடங்குபவை.

உடலில் நீர் என்ற தத்துவம் சீர்கெட்டால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

குளிர், ஆஸ்துமா, வீக்கம், ரத்தம் உறைந்துபோவது, எலும்பு முறிவு, சிறுநீரக பிரச்சினைகள், பாலுறவு பிரச்சனைகள் மற்றும் இனப்பெருக்க உறுப்பு பிரச்சினைகள்.

இதைத்தவிர, நோய் எதிர்ப்பு திறன் இல்லாததால் ஏற்படும் நோய்கள், நீரிழிவு, தைராய்டு போன்ற ஹார்மோன்கள் தொடர்பான அனைத்து வகை நோய்களும், உடலில் நீர் சம சீரற்ற நிலை ஏற்பட்டால் ஏற்படும்.

யோகா சிகிச்சை - யோகாசனம் செய்வதால் உடலின் இயக்கம் நன்றாக இருக்கும். அதோடு, உடல் இயக்கம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

குஞ்சல் யோகா எனப்படும் யோகாசனத்தில் வெதுவெதுப்பான நீரை வாயில் ஊற்றி கொப்பளித்து துப்புவது. இதைத்தவிர, போதுமான அளவு தண்ணீர் அருந்துவது, தண்ணீரில் நடப்பது மற்றும் குளிப்பது ஆகியவை இந்த வகையில் அடங்கும்.

3. நெருப்பு

யோகாவில், நெருப்பு என்ற தத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உடல் தூய்மைக்கு நெருப்பு மிகவும் முக்கிய காரணியாக கருதப்படுகிறது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

நமது பெளதீக உடலின் செரிமானம், பசி, வளர்சிதைமாற்றம் ஆகியவற்றை பிரதிபலிப்பது நெருப்பு.

மூளை, நரம்பு, மற்றும் ஆற்றல் ஆகியவை நெருப்பு என்ற தத்துவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. நமது எண்ணங்கள், உணர்வுகள், கருத்துக்களை வெளிப்படுத்த உதவுவது நெருப்பு.

உடலில் நெருப்பு தத்துவம் குறைந்தால் ஏற்படும் பிரச்சனைகள்...

அஜீரணம், செரிமாணக்கோளாறு, காய்ச்சல், சமச்சீரற்ற அமில சுரப்பு, வளர்சிதைமாற்றம், நீரிழிவு போன்றவை ஏற்படும்.

யோகா சிகிச்சை - பலவித ஆசனங்களும், முத்திரைகளும் இதற்காக செய்யப்பட்டாலும், முன்புறமாக உடலை வளைத்து செய்யும் சூரிய நமஸ்காரம் நல்லது. சூரிய வெளிச்சத்தை உட்கிரகிப்பது இதன் நோக்கம்.

4. வாயு தத்துவம்

உடல் முதல் மனதின் தூய்மை வரை அனைத்திற்கும் காற்று முக்கியமானது. பஞ்சபூதங்களில் மூச்சு என்ற வடிவில் அனைத்து உயிர்களிலும் இருப்பது காற்று.

வாயு தத்துவமானது அலைந்து திரியும் குணம் கொண்டது. பொருட்களை உலர்த்தும் தன்மை, சூட்சுமமான தன்மை, அறிவு, மனம், பிராண வாயு மற்றும் உயிர் ஆகிய தன்மைகளுடன் இணைத்து பார்க்கப்படுகிறது.

NARENDRAMODI

பட மூலாதாரம், NARENDRAMODI.IN

நமது உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்குகிறது காற்று. நச்சுக்கள் நமது உடலின் முக்கிய உறுப்புகளை பலவீனப்படுத்தி, அவற்றின் செயல்பாட்டை பாதிக்கின்றன.

உடல் மற்றும் மன இயக்கத்திற்கு காற்று முக்கியமானது. ஏனென்றால், நமது உடலில் காற்று நேரடியாக கட்டுப்படுத்துவதால், நமது மனதை, மனோபாவத்தை கட்டுப்படுத்தும் காற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

காற்று என்ற தத்துவம் குறைந்தால் ஏற்படும் பிரச்சனைகள்...

மூட்டுவலி, உடல் வலி, நோய், பார்கின்சன்ஸ், மன அழுத்தம், மனச்சோர்வு, உடல் இயக்கம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் உடலில் காற்று என்ற தத்துவம் சீரற்று போகும்போது ஏற்படும்.

யோகா சிகிச்சை - சுத்தமான காற்று வரும் இடங்கள் அதாவது பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வது, பிராணாயாமம் செய்வது போன்றவற்றாலும், இயற்கையான இடங்களில் வசிப்பது ஆகியவற்றாலும் காற்று என்ற தத்துவத்தின் குறைபாட்டை சீராக்கலாம்.

5. ஆகாயம்

நமது முழுமையான வடிவத்தை ஆகாய தத்துவம் என்று சொல்கிறோம். ஒரு விண்வெளி கூறாக இருக்கும் ஆகாயம் இருப்பை வெளிப்படுத்துவது. நமக்கு அனுபவங்களை உணர்த்துவது.

உடலில் ஆகாயம் என்ற தத்துவம் சீர்கெட்டால், பேசுவதில் பிரச்சனைகள், ஆளுமை தொடர்பான சிக்கல்கள், வலிப்பு நோய், மூர்க்கத்தனம், புத்தி பேதலிப்பு, மனநிலை பிறழ்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

NARENDRAMODI

பட மூலாதாரம், NARENDRAMODI.IN/BBC

யோகா சிகிச்சை - யோகாசனம் செய்வது, பிராணாயமம் செய்வது, குறிப்பாக கவனம் அதிகரிப்பதற்கான பயிற்சிகளை செய்யவேண்டும். திறந்தவெளி அதிகமாக இருக்கும் சூழலில் வசிப்பது, திறந்தவெளியில் நடைபயிற்சி மேற்கொள்வது, இயற்கையுடன் இயைந்து வாழ்வது.

பஞ்சபூதங்களில் சில, ஒன்றுடன் மற்றொன்று இணைந்தவை என்றாலும், சில எதிரானவை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். காற்று மற்றும் நீர் தத்துவங்கள் ஒன்றுக்கொன்று எதிரானவை.

உணவு உண்டதுமே, நெருப்பு தத்துவம் உங்கள் உடலில் விழித்துக்கொள்ளும். அதனால் உணவு உண்ட பின் உடனடியாக நீர் அருந்தக்கூடாது என்று கூறப்படுகிறது. ஏனெனில், அது உணவுப்பொருட்களை செரிமானம் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

பின்னர் பூமி மற்றும் நீர் தத்துவங்கள் ஒன்றோடொன்று நட்பானவை. அதேபோல் நெருப்பும், காற்றும் ஒன்றாக இணைந்து வேலை செய்யக்கூடியவை.

இந்த தத்துவங்களை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கூட, நீங்கள் யோகாசனம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால் பஞ்சபூதங்கள் உங்கள் உடலில் ஏதாவது ஒரு விதத்தில் சமநிலையை ஏற்படுத்தும்.

யோகா, உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் ஆளுமையையும் மேம்படுத்தும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :