You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"இரண்டே ஆண்டுகளில் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றிவிடும்" ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
இன்னும் இரண்டே ஆண்டுகளில் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றிவிடும் என்ற அதிர்ச்சிகர தகவலை மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது.
முதல் முறையாக நீர் மேலாண்மை குறியீடு பற்றிய அறிக்கையை மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியா தனது வரலாற்றிலேயே மிக மோசமான தண்ணீர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக மில்லியன்கணக்கானோரின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலின் கீழ் உள்ளது என்றும் அந்த அறிக்கை தொடங்குகிறது.
அதில், தண்ணீரில் பற்றாற்குறையால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகள் முதல் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தண்ணீர் சார்ந்த பிரச்சனைகள் வரை அதில் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த பிரச்சனைகளை சமாளித்து, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் நீர் மேலாண்மையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் அமைப்பின் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான 10 விடயங்களை காண்போம்.
1. நாட்டிலுள்ள தண்ணீர் பிரச்சனை இதே வீதத்தில் தொடர்ந்தால், வரும் 2030ஆம் ஆண்டில் நாட்டில் 40 சதவீத மக்களுக்கு தண்ணீரே கிடைக்காது.
2. தற்போது 600 மில்லியன் இந்தியர்கள் தண்ணீர் பற்றாற்குறையின் காரணமாக அதிகபட்ச அழுத்தத்தில் சிக்கியுள்ளனர்.
3. நாட்டிலுள்ள 70 சதவீத தண்ணீர் கலப்படமடைந்துள்ளதாகவும் மற்றும் தூய்மையான தண்ணீரை பெறுவதற்கான போதிய வாய்ப்பில்லாமையால் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
4. 122 நாடுகளை கொண்ட உலகளவிலான தண்ணீரின் தரப் பட்டியலில் இந்தியா 120வது இடத்தை வகிக்கிறது.
5. இந்தியாவிலுள்ள 75 சதவீத வீடுகளில் குடிநீருக்கான வசதியே இல்லை. மேலும், 84 சதவீத கிராமப்புற வீடுகளில் குழாய் தண்ணீருக்கான வசதிக்கூட கிடையாது.
6. சென்னை, புதுடெல்லி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட 21 இந்திய நகரங்களில் இன்னும் இரண்டாண்டுகளில், அதாவது 2020ஆம் ஆண்டில் நிலத்தடி நீர் முழுவதுமாக வற்றிவிடும்; இதன் காரணமாக 100 மில்லியன் மக்களின் வாழவாதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும்.
7. மாநில வாரியான நீர் மேலாண்மை அட்டவணையின் இமயமலை தொடரருகே அமையாத மாநிலங்களின் பட்டியலில், 76 புள்ளிகளுடன் குஜராத் முதலிடத்தையும், மத்தியபிரதேசம் மற்றும் ஆந்திரப்பிரதேசம் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளது. இதில் தமிழ்நாடு 51 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது. ஜார்கண்ட் 35 புள்ளிகளுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
8. கடந்த 2015-2016 நிதியாண்டில் ஆறாவது இடத்திலிருந்த தமிழகம், 2016-2017ஆம் ஆண்டுக்கான நீர் வள மேலாண்மை பட்டியலில் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
9. அதிகபட்ச நகர்ப்புற பகுதிகளை கொண்ட மாநிலங்களான தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகியவற்றால் அதன் நகர்ப்புற மக்கள் தொகையில் வெறும் 53-72 சதவீத பேருக்கே குடிநீரை அளிக்க இயலுகிறது.
10. தண்ணீர் சார்ந்த பிரச்சனையின் காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வரும் 2050ஆம் ஆண்டில் 6 சதவீதம் குறையும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்