You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தண்ணீருக்காக '20 கோடி' மணி நேரம் செலவிடும் பெண்கள்
- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
நீர் பண்டமாகி விட்டது. பணம் இருந்தால் அதனை எந்த சிரமும் இல்லாமல் சுலபமாக வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டு அரை தசாப்தத்திற்கு மேல் ஆக போகிறது.
ஆனால், பொருளாதார வசதி அற்றவர்களுக்கு நீர் என்பது அவ்வளவு சுலபமான ஒரு விஷயமாக இருப்பதில்லை. அவர்களுக்கு நீரெனப்படுவது யாதெனில் மன உளைச்சல் தரும் ஒரு நடைபயணம்.
சில மாதங்களுக்கு முன் தருமபுரி மாவட்டம் பென்னகரம் வட்டுவனஹள்ளி பஞ்சாயத்தில் உள்ள கோட்டூர்மலை, ஏரிமலை, அலக்கட்டு ஆகிய மலை பகுதிகளுக்கு சென்றிருந்தோம். அந்தப் பகுதி மக்கள் குடிநீர் எடுப்பதற்காக ஒரு நாளை இரண்டு மைல் தூரம் நடப்பதாக தெரிவித்தார்கள்.
அந்த மலை பகுதியில் அரசு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தந்திருந்தாலும் அதை நம்பி மட்டும் இருக்க முடியாது, பெரும்பாகும் எங்கள் தாகத்தை தணிப்பது சுனை நீர்தான் என்கிறார்கள் அந்த மலைபகுதி மக்கள்.
"தண்ணீர் எடுக்க மட்டும் ஒரு நாளைக்கு சர்வசாதாரணமாக 30-லிருந்து 45 நிமிடங்கள் வரை ஆகிறது. குழாயை திறந்தால் தண்ணீர் வரும் சமதளத்தில் இருக்கும் மக்களுக்கு இது தெரியபோவதில்லை; எங்கள் வலிகள் புரியபோவதில்லை" என்கிறார் ஏரிமலை பகுதியை சேர்ந்த சரோஜா.
ஆனால், நிஜத்தில் சமதளத்திலும் இதுதான் நிலையாக இருக்கிறது.
சமதளத்திலும் இதுதான் நிலை
தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த மக்கள் தண்ணீர் குடங்களை எடுத்து செல்வதற்கென்றே தனி வாகனத்தை வடிவமைத்து வைத்திருக்கிறார்கள்.
"தண்ணீரை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்று தெரியவில்லை. எங்களுக்கு தண்ணீர் என்றால் செல்வம்." என்கிறார் தூத்துக்குடி மாவட்டம் முப்பிலிவெட்டி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன்.
குடங்கள் எடுத்து செல்வதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தள்ளுவண்டியில், இந்த பகுதி மக்கள் தினமும் ஐந்து முதல் ஆறு குடங்களை எடுத்து செல்கிறார்கள். தண்ணீர் வரும் வரை காத்திருந்து, அந்த குடங்களை நிரப்பி எடுத்து செல்கிறார்கள்.
ஒரு குடும்ப தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமானல், ஒரு நபர் குறைந்தது தண்ணீர் பிடிக்க மட்டுமே 30 நிமிடங்கள் செலவிட வேண்டும்.
"நீர் தட்டுப்பாட்டின் காரணமாகவே வீட்டிற்கு உறவினர்களை அழைக்க தயக்கமாக இருக்கிறது. இது எவ்வளவு துயரத்தை தரும் என்பது அப்படியான சூழலில் வாழ்பவர்களுக்கு மட்டுமே புரியும்" என்கிறார் இளங்கோவன்.
தண்ணீருக்காக நடப்பது, ஏதோ தமிழக சமதளம் மற்றும் மலைகளில் மட்டும் இருக்கும் பிரச்சனை அல்ல. உலகளவில் இதுதான் நிலை.
200 மில்லியன் மணி நேரம்
யுனிசெஃப் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகெங்கும் பயணம் செய்து ஓர் ஆய்வை மேற்கொண்டது.
உலகெங்கும் பெண்கள் தண்ணீர் எடுப்பதற்காக எவ்வளவு மணி நேரத்தை செலவிடுகிறார்கள் என்று அந்த ஆய்வு விவரித்தது.
ஆசியாவில் கிராமப்பகுதிகளில் தண்ணீர் எடுக்க சராசரியாக 21 நிமிடங்கள் ஆகிறது. அதுவே நகரப் பகுதிகளில் 19 நிமிடங்கள் ஆகிறது.
ஆஃப்ரிக்க சாஹார பகுதிகளில் இதுவே கிராம பகுதிகளில் தண்ணீர் எடுக்க 33 நிமிடங்களும், நகரப் பகுதிகளில் 25 நிமிடங்களும் ஆகிறது என்று விவரிக்கிறது அந்த ஆய்வு.
உலகம் முழுவதும் பெண்கள் தண்ணீர் எடுப்பதற்கு ஒரு நாளைக்கு செலவிடும் நேரத்தை கூட்டினால், அதன் சராசரி 200 மில்லியன் மணி நேரத்தை செலவிடுகிறார்கள் என்கிறது யுனிசெஃப்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்