You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாயிக்கு பணி நிறைவு விழா நடத்தி அசத்திய மகன்கள்
- எழுதியவர், பிரவீன் காசம்
- பதவி, பிபிசி தெலுங்கு
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதாகும் விவசாயி ஒருவருக்கு பணி நிறைவு விழா நடத்தி அசத்தியுள்ளனர் அவரது குடும்பத்தினர்.
அரசு மற்றும் முறைப்படுத்தப்பட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு பணி ஓய்வின்போது பிரிவு உபச்சார விழா நடத்துவதைப் போல ஹரியா தண்டா கிராமத்தைச் சேர்ந்த நாகுலு எனும் விவசாயிக்கு கடந்த மே 29 அன்று இந்த விழா நடத்தப்பட்டது.
தங்களைப் படிக்கவைத்து ஆளாக்கிய தங்கள் தந்தையைச் சிறப்பிக்கும் விதமாக நாகுலுவின் மூன்று மகன்களும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் கிராமத்தினர், குடும்பத்தினர் மட்டுமல்லாது உள்ளூர் அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர்.
நாகுலுவின் மூத்த மகன் ரந்தாஸ் விஜயவாடாவில் காவல் துறையில் பணியாற்றுகிறார். இரண்டாவது மகன் ரவி ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராக உள்ளார். பட்டப்படிப்பு முடித்துள்ள மூன்றாவது மகன் ஸ்ரீனி வேலை தேடி வருகிறார்.
பிபிசியிடம் பேசிய நாகுலுவின் இரண்டாவது மகன் ரவி, "எல்லாத் துறைகளிலும் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு பணி ஓய்வு விழா நடத்தப்படுகிறது. ஆனால், அத்தகைய அங்கீகாரம் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. அந்த அங்கீகாரத்தை நாங்கள் எங்கள் தந்தைக்கு வழங்க விரும்பினோம்," என்கிறார்.
இந்த விழா மூலம் தங்கள் தந்தைக்கு மரியாதை செலுத்த விரும்பியதாகவும், இதுபோன்ற விழாக்கள் பிற விவசாயிகளின் குழந்தைகளுக்கும் உந்துதலாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த விழா குறித்து கேள்விப்பட்ட தெலங்கானா மாநில விவசாயத் துறை அமைச்சர் போச்சாரம் ஸ்ரீனிவாச ரெட்டி தங்களை அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக ரவி கூறினார்.
விவசாயத் துறை அதிகாரிகளும் இந்த விழாவில் பங்கேற்றதால் நாகுலுவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
"வெறும் ஒன்றரை ஏக்கராக இருந்த எங்கள் பரம்பரை விவசாய நிலத்தை தனது கடின உழைப்பால் 10 ஏக்கராக அதிகரித்தார் எங்கள் தந்தை. விளை நிலத்துடன் தனக்கு இருக்கும் தொடர்பு முடிவுக்கு வருவதை நினைத்து அவர் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவராக உள்ளார்," என்று ரவி பிபிசியிடம் கூறினார்.
தனது பணி ஓய்வு குறித்து பிபிசியிடம் பேசிய நாகுலு "நான் 40 ஆண்டுகளாக வேளாண் தொழில் செய்து வருகிறேன். இதில் நிறைய மேடு பள்ளங்களைச் சந்தித்துள்ளேன். நிறைய லாபநட்டங்களைக் கண்டுள்ளேன். இதுநாள் வரை நான் செய்த விவசாய வேலையை விடுவது எனக்கு மிகுந்த வலியைத் தருகிறது. எனினும், என் மகன்களின் தொடர்ச்சியான வற்புறுத்தலால் இதற்கு ஒப்புக்கொண்டேன், " என்று கூறினார்.
வேளாண்மை மீது தனக்கு இருக்கும் தீராப் பற்றை வெளிப்படுத்திய நாகுலு, பருவநிலை, மழை உள்ளிட்டவை எப்படி இருந்தாலும் தாம் தொடர்ந்து வேளாண் தொழில் செய்து வந்ததாகக் கூறினார்.
நாகுலு வேளாண்மை செய்துவந்த நிலம் தற்போது குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
"நான் அவர்கள் திருமணத்தை நடத்தியதைவிடச் சிறப்பாக என் பணி நிறைவு விழாவைக் கொண்டாடியுள்ளனர் என் மகன்கள்," என பெருமையுடன் கூறுகிறார் நாகுலு.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்