You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகள்
தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு.
நீட்: தொடரும் தற்கொலைகள்
நீட் தேர்வில் தோல்வியைச் சந்தித்ததால், தமிழகத்தைச் சேர்ந்த பிரதீபா எனும் மாணவி தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஜஸ்லீன் கவுர் எனும் மாணவியும், டெல்லியின் துவாரகா பகுதியை சேர்ந்த பிரணவ் மகேந்திரநாத் எனும் மாணவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுர சிற்பம் சேதம்
தஞ்சாவூரில் பெய்த மழையின்போது, பெரிய கோயில் நுழைவுவாயிலில் உள்ள கேரளாந்தகன் திருவாயில் கோபுரத்தில் இடி தாக்கியுள்ளது. இதனால் கோபுர உச்சியில் உள்ள சிற்ப பாகம் சேதமடைந்துள்ளது. அதனருகில் இடி தாங்கி இருந்ததால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணி பதவி உயர்வு: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு
''சட்டத்துக்கு உட்பட்டு, மத்திய அரசு பணியின் பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.சி., எஸ்.டி.) இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு தடை ஏதும் இல்லை'' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செளதி: ஓட்டுநர் உரிமத்தை பெறும் பெண்கள்
செளதி அரேபியா அரசு முதல் முறையாக ஓட்டுநர் உரிமத்தை பெண்களுக்கு வழங்க தொடங்கி உள்ளது. செளதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட தடை செய்யப்பட்டு இருந்தது. இந்த தடையானது, ஜூன் 24 ஆம் நாளோடு நிறைவடைகிறது.
சிபிஎஸ்இக்கு கடிதம் எழுதிய பிரதீபா
இந்த ஆண்டு வேலூரில் நீட் தேர்வை எழுதிய பிரதீபா, ஆங்கிலத்தில் இருந்து பல கேள்விகள் தமிழில் மாற்றப்படும்போது தவறுகள் இருந்ததை கண்டறிந்து சிபிஎஸ்இக்கு கடிதம் எழுதியதாகச் சொல்கிறார் அவரது தந்தை சண்முகம். "கண்டிப்பாக ஐநூறு மார்க் வரும்பா என்று சொல்லிக்கொண்டேயிருந்தாள். ஆனால், 39 மதிப்பெண்கள் மட்டுமே வந்ததை அவளால் தாங்கவே முடியவில்லை" என்கிறார் சண்முகம்.