You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாப்பிடறது, துங்கறது மட்டும்தான் வாழ்க்கையா?: தாயையும் போராட்டத்துக்கு அழைத்த ஸ்னோலின்
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
"நாமும் போராட வேண்டும் என்று மக்களோட சேர்ந்து போராட்டத்துல கலந்துகிட்டா என் மகள். ஆனா அவளை ஏன் இவ்வளவு கோரமா கொல்லனும்?".
மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தத் தாய், வேதனை தாள முடியாமல் இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வீடே சோகத்தில் மூழ்கியிருக்கிறது. அந்தத் தாய்க்கும் குடும்பத்தாருக்கும் எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் உறவினர்கள் அனைவரும் அங்கு கூடியிருக்கிறார்கள்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். அதில் ஒருவர்தான் 18 வயதான ஸ்னோலின். தன் தாயுடன் போராட்டக் களத்திற்கு சென்ற அவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.
காரப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றது பிபிசி. ஸ்னோலினுக்கு இரண்டு சகோதரர்கள். வீட்டிற்கு ஒரே பெண் இவர்தான்.
தூத்துக்குடியில் நடைபெற்று வந்த போராட்டங்களை பார்க்கும் போது, நாமும் இதற்காக போராட வேண்டும் என்று தன் தாயிடம் கூறியுள்ளார் ஸ்னோலின்.
"சாப்பிடறது, தூங்கறது மட்டும்தான் வாழ்க்கையாம்மா? நம்மளும் போராடனும்" என்று தாயிடம் கூறியிருக்கிறார் ஸ்னோலின்.
அவரது தெருவில் சில வாரங்களுக்கு முன்னால் புற்று நோயால் ஒருவர் உயிரிழந்தார். இதுதான் ஸ்னோலினை போராடத் தூண்டியது என்று அவரது தாய் வனிதா குறிப்பிடுகிறார்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற 100-ஆவது நாள் போராட்டத்திற்கு ஸ்னோலினும், அவரது தாய் வனிதாவும் சென்றுள்ளனர்.
போராட்டம் பெரிய அளவில் உருவெடுக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது இருவரும் பிரிந்துவிட்டதாக கூறுகிறார் வனிதா.
"மக்கள் அங்கயும் இங்கயும் ஓட, குண்டு சத்தமெல்லா கேட்டுது. நான் வீட்டுக்கு வந்துட்டேன். ஆனா ஸ்னோலின காணலை. அப்பறம் அவ இறந்தத டி.வி. நியூஸ் பாத்துதான் தெரிஞ்சுகிட்டேன்" என்று வருத்தத்துடன் அவர் கூறுகிறார்.
அரசு மருத்துவமனைக்கு வனிதா விரைந்தார். அவருக்கு அங்கு மேலும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
"பின்மண்டைல குண்டடிபட்டு வாய் வழியா வெளிய வந்துருக்கு. இவ்வளவு கோரமா என் பொன்னை ஏன் கொல்லனும்? அந்த ஆலையால பாதிப்பு இருக்குனுதான போராடினோம். அதுக்கு இப்டி குருவி சுட்ற மாதிரி சுட்டுட்டாங்க" என்று கதறுகிறார் வனிதா.
"எம் புள்ளைய நானே கூட்டிட்டு போய் பலி குடுத்துட்டேன். அந்த ஆலையை மூடினாதான் என் மகளோட ஆத்மா சாந்தியடையும்" என்று கலங்குகிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்