You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
‘’முன்னறிவிப்பின்றி துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்?’’ காயமடைந்தவர்கள் கேள்வி
''நாங்க குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டோம். காவல்துறை அறிவிப்பின்றி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் கலவரம் வெடித்தது. ஸ்டெர்லைட் ஆலை செயல்பட இன்னும் எத்தனை பேரின் உயிர்பலி வேண்டும்?'' தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு காயமடைந்த பொன்மணியின்(29) வார்த்தைகள் இவை.
தனது கணவர் மரிய சிலுவை எஸ்தோவுடன்(34) ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட பொன்மணி, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவருகிறார். கண்ணீருடன் பேசிய அவர், கால்களில் உள்ள பலத்த காயங்களைக் காட்டினார். தனது மூன்று வயது மகன் இன்பதாமஸுக்கு எதிர்காலத்தில் நல்ல காற்று, தண்ணீர் கிடைக்கவேண்டும் என்பதற்காக போராட்டத்திற்கு வந்ததாக பிபிசி தமிழிடம் கூறினார்.
''என் கணவரையும் என்னையும் காவல்துறையினர் தாக்கினார்கள். நாங்கள் குடும்பத்துடன் போரட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், கலவரம் ஏற்படுத்த நாங்கள் எவ்வாறு திட்டமிடுவோம்? பலரும் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். எங்களின் ஒரே கோரிக்கை ஆட்சியரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்பதுதான்,'' என்று தெரிவித்தார் பொன்மணி.
தமிழக அரசு திட்டமிட்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், தங்களது நலனில் அரசுக்கு அக்கறை இல்லை என்று கூறிய பொன்மணி, ''என்னைப் போன்ற பல பெண்கள் எங்களை தாக்கவேண்டாம் என்று கதறினோம். எங்களுக்கு அரசுக்கு உதவாது என்பதைதான் இந்த தாக்குதல் காட்டுகிறது,'' என்று அழுதுகொண்டே பிபிசிதமிழிடம் பேசினார்.
காவல்துறையின் துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அதிர்ந்துபோன மரிய சிலுவை எஸ்தோ இன்னும் பதட்டத்தில்தான் இருக்கிறார். ''நான் வாடகை ஆட்டோ ஒட்டி குடும்பத்தை நடத்திவருகிறேன். காற்று மற்றும் தண்ணீர் மாசுபட்டு, எங்கள் தெருவில், எங்களின் உறவினர்கள், நண்பர்கள் என பலரின் குடும்பத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரின் உரிமைக்காகதான் நாங்கள் குரல்கொடுக்கவந்தோம். எங்களுக்கு எந்த திட்டமும் இல்லை. ஆனால் அரசாங்கத்தின் திட்டம் எங்களுக்கு புரிந்துவிட்டது. எங்களுக்கு உதவாமல், தனியார் நிறுவனத்துக்கு உதவ எல்லா விதத்திலும் செயல்படுவார்கள் என்பது புரிந்துவிட்டது,'' என்று பிபிசி தமிழிடம் கூறினார் அவர்.
"அந்த பயம் இன்னும் போகவில்லை"
தலையில் கட்டுபோடப்பட்டு சிகிச்சை எடுத்துவரும் காமராஜ்(40) ஒரு மாற்றுத்திறனாளி. ''காந்திநகர் அருகில் உள்ள மீனவர்காலனியில் வசித்துவருகிறேன். என் அண்டை வீட்டார், உறவினர் என அனைவரும் போராட்டத்தில் கலந்துகொண்டோம். ஸ்டெர்லைட் ஆலையின் மாசுபாட்டால் எங்கள் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால் போராட்டம் நடத்தினோம். அரசாங்கம் ஆலை மீது நடவடிக்கை எடுக்காமல், எங்களை தாக்குவதற்கு காவல்துறையை ஏவியுள்ளது,'' என்று செவ்வாய் அன்று நடந்த தாக்குதலை நினைவுகூர்ந்தார் அவர்.
புதுதெருவில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சுமார் நான்கு கிலோமீட்டர் நடந்துவந்த காமராஜ் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசியபோது காயம் அடைந்ததாக கூறுகிறார்.
''எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். நாங்கள் வெடிச்சத்தம் கேட்டு ஓடினோம். அந்த பயம் இன்னும் போகவில்லை. தற்போது மருத்துவமனையில் என்னை பார்க்கவந்த உறவினர்களை கூட அனுமதிக்கவில்லை,'' என்றார்.
முன்னறிவிப்பு இல்லாமல் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் விடுத்துள்ள அறிக்கையில் தகுந்த அறிவிப்பு செய்யப்பட்ட பின்னர்தான் துப்பாக்கிச்சூடு நடந்தது என்று தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- தூத்துக்குடி சாவு 13 ஆனது: போக்குவரத்து, இணையம், கடைகள், வங்கிகள் முடக்கம்
- ஸ்டெர்லைட் நிலத்தடி நீரை மாசுபடுத்தவில்லை: 'வேதாந்தா' அனில் அகர்வால்
- தலித்துகளுக்கு மறுக்கப்படும் தமிழ் நிலம்
- துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்பதை இப்போது சொல்ல முடியாது - ஆட்சியர்
- வினோத சத்தம்: சீனாவில் உள்ள தங்கள் ஊழியர்களை எச்சரித்த அமெரிக்கா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்