நம்பிக்கை வாக்கெடுப்புகளில் வீழ்ந்த அரசுகள்!

கர்நாடக சட்டப்பேரவையில் சனிக்கிழமையன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், மாநிலத்தின் 23வது முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட 55 மணி நேரத்தில் ராஜிநாமா செய்யும் முடிவை பி.எஸ். எடியூரப்பா அறிவித்ததால், கர்நாடகாவில் பா.ஜ.க அரசு வீழ்ந்தது.

இந்திய அரசியலில் இதுபோன்ற திடீர் அரசியல் திருப்பங்கள் நடப்பது இயல்பானது. இதுபோன்ற சிக்கலான சூழ்நிலைகளில் தப்பிப் பிழைத்த ஆட்சிகளை மட்டுமல்ல, ஆட்டம் கண்டு வீழ்ந்த ஆட்சிகளையும் இந்திய அரசியல் கண்டிருக்கிறது. அவற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம்…

1979: 15 நாட்களில் வீழ்ந்த சரண் சிங்கின் ஆட்சி

இந்தியாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் எதிர்ப்பு அலைகளின் வேகம் குறையாததைக் கண்ட பிரதமர் இந்திரா காந்தி, மக்களவை தேர்தலை நடத்த பரிந்துரைத்தார்.

அவசர நிலை பிரகடனம் காங்கிரசுக்கு பாதகத்தை ஏற்படுத்த, நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே இருக்க, நாட்டில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சி அமைந்தது.

ஜனதா கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்க, பிரதமராக பதவியேற்றார் மொரார்ஜி தேசாய். அரசின் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார் சரண் சிங்.

கட்சியில் ஏற்பட்ட உட்பூசல்களால் மொரார்ஜி தேசாயின் ஆட்சி சரிய, காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியுடன் சரண் சிங் 1979 ஜூலை மாதம் 28ஆம் தேதி பிரதமராக பதவியேற்றார்.

சரண் சிங் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி உத்தரவிட்டார். ஆனால் காலக்கெடு முடிவதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஆகஸ்ட் 19ஆம் தேதியன்றே சரண் சிங்குக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக இந்திரா காந்தி அறிவித்ததால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு செல்வதற்கு முன்பே சரண் சிங்கின் ஆட்சி வீழ்ந்தது. அவரும் எடியூரப்பாவைப் போலவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னரே பதவி விலகல் கடிதத்தை கொடுக்க நேர்ந்தது.

1989: பிஹாரில் ரத யாத்திரைக்கு போடப்பட்ட முட்டுக்கட்டை டெல்லியில் ஆட்சியை வீழ்த்தியது

1989ஆம் ஆண்டு நடந்த மற்றொரு நம்பிக்கை வாக்கெடுப்பும் மிக முக்கியமானது. அதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர், அதாவது 1988, அக்டோபர் 11ஆம் தேதியன்று ஜெய் பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டபோது, ஜனதா கட்சி, லோக் தளம் மற்றும் காங்கிரஸ் (எஸ்) ஆகியவை இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை உருவாக்கின.

ஜனதா தளத்தின் தலைவராக வி.பி. சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் பல பிராந்தியக் கட்சிகள் ஒருங்கிணைந்தன; தேசிய முன்னணி உருவானது.

1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய முன்னணி பெரிய அளவில் வெற்றியை பெற்றாலும், அரசு அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையை பெறவில்லை.

பா.ஜ.க மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவு பெற்ற தேசிய முன்னணி ஆட்சியமைக்க, வி.பி. சிங் பிரதமரானார்.

ஒரு வருடத்தில் பா.ஜ.க. ரத யாத்திரையத் தொடங்கியது. பல மாநிலங்கள் வழியாக பயணித்த ரத யாத்திரை பிஹார் சென்றடைந்தது. ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த பிஹாரின் முதலமைச்சராக இருந்தார் லாலு பிரசாத் யாதவ்.

ரத யாத்திரைக்குக் கடிவாளம் இட்டு, ரத யாத்திரையின் சாரதியாக செயல்பட்ட லால் கிருஷ்ண அத்வானியின் கையில் காப்பு மாட்டி கைது செய்தார் பிஹார் முதலமைச்சர். அடிவாங்கிய பா.ஜ.க சும்மா இருக்குமா? மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்ள, வி.பி.சிங்கின் ஆட்சி கவிழ்ந்தது.

1990: உளவு பார்த்ததால் கவிழ்ந்த அரசு

இந்திய அரசியலின் ஆட்சி கவிழ்ந்த நிகழ்வுகளில், அடுத்தது 1990ஆம் ஆண்டில் அரங்கேறியது. வி.பி. சிங் பதவி விலகிய பின்னர், ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர் தனது ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு வெளியேறி சமாஜ்வாதி ஜனதா கட்சியை உருவாக்கினார்.

1991ஆம் அண்டு பொதுத் தேர்தலில் அவரது கட்சி 64 தொகுதிகளை வென்றது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் உதவ, சந்திரசேகர் பிரதமரானார்.

சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு சந்திரசேகர் பதவியை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை உருவானது. 1991 மார்ச் 2ஆம் தேதியன்று ராஜீவ் காந்தியின் வீட்டிற்கு வெளியே, வேவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஹரியானா காவல்துறையின் கான்ஸ்டபிள் பிரேம் சிங் மற்றும் ராஜ் சிங் கைது செய்யப்பட்டார்கள்.

சீருடை அணியாமல் வழக்கமான உடையில் இருந்த அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, தகவல் சேகரிக்க வந்ததை ஒப்புக்கொண்டனர்.

இந்த விவகாரம் ஏற்படுத்திய அரசியல் திருப்பங்களால், மத்திய அரசுக்கு வழங்கிய ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது. பின்னர், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், 1991 மார்ச் 6ஆம் தேதியன்று சந்திரசேகர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1992: மியூசிகல் சேரில் வென்ற மாயாவதி

உத்தரப்பிரதேச மாநில சட்டசபை கண்ட சுவாரஸ்யமான கதை இது. சமாஜ்வாதி ஜனதா கட்சியிலிருந்து 1992ஆம் ஆண்டு பிரிந்து சென்ற முலாயம் சிங் யாதவ், சமாஜ்வாதி கட்சியை உருவாக்கினார்.

ஓராண்டுக்கு பிறகு அயோத்தியில் பாபர் மசூதி தகர்க்கப்பட, கல்யாண் சிங் தலைமையிலான மாநில அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

1993ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி இணைந்து கூட்டணி அரசு அமைத்தது. அந்த கூட்டணி அரசு ஐந்து ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யவில்லை. அதற்கு காரணம் முதலமைச்சர் நாற்காலிக்கான மாயாவதியின் வேட்கை.

சமாஜ்வாதி கட்சிக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்ட பகுஜன் சமாஜ்வாதியின் மாயாவதி, உத்தரப்பிரதேச சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். தன்னை ஏமாற்றிய மாயாவதிக்கு ஆதரவு தராமல் சமாஜ்வாதி கட்சி விலக, பா.ஜ.க ஆதரவுடன் மாயாவதி அரியணை ஏறினார்.

1999: ஒற்றை வாக்கில் வீழ்ந்த வாஜ்பாய் அரசு

1998ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, ஆனால் அ.இ.அ.தி.மு.க ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தது.

13 மாதங்களுக்கு பிறகு அ.தி.மு.கவின் ஆதரவை ஜெயலலிதா விலக்கிக்கொள்ள, எதிர்கட்சிகளின் கோரிக்கையின் அடிப்படையில் வாஜ்பாய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசு ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனது, அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.

வாஜ்பாய் அரசை வீழ்த்திய அந்த ஒற்றை வாக்குக்கு சொந்தக்காரர் ஒடிசா மாநில முதலமைச்சர் கிர்தர் கமாங். முதலமைச்சர் எப்படி நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ள முடியும் என்று குழப்பமாக இருக்கிறதா?

அந்த சமயத்தில் ஒடிசா முதலமைச்சராக பதவி வகித்த கிர்தர் கமாங், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிப்பதற்காக அவர், ஒடிசாவில் இருந்து டெல்லிக்கு வந்திருந்தார். வந்தார், தோற்கவைத்தார்…

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: