கோலாகலமாக நடைபெற்ற இளவரசர் ஹாரி - மெகன் மார்கில் திருமணம்

இங்கிலாந்தில் உள்ள விண்ட்சர் கோட்டையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் முதல், உறுதி மொழி ஏற்றுக் கொண்டு மோதிரம் அணிவித்தது வரை நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது இச்செய்தி.

06: 39 அடுத்து என்ன?

திருமணம் முடிவடைந்ததையடுத்து, பிரிட்டன் நேரப்படி மாலையில் புனித ஜார்ஜ் மண்டபத்தில் திருமண வரவேற்பு விழா நடைபெறும்.

06:00 உலக அரசியல் தலைவர்கள் வாழ்த்து

புதுமண தம்பதியான ஹாரி - மெகன் தொடங்கவுள்ள புதிய வாழ்க்கைக்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, பிரிட்டனுக்கான அமெரிக்க தூதர் மற்றும் பலர் தங்களது வாழ்த்துகளை இளவரசர் ஹாரி மற்றும் மெகனுக்கு தெரிவித்துள்ளனர்.

05:58 "என் மகள் அழகாக இருக்கிறாள்" - மெகனின் தந்தை

திருமண மேடைக்கு மெகனை அழைத்துச் செல்ல வேண்டிய அவரின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால், அவரால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை.

இதுகுறித்து TMZ ஊடகத்திடம் பேசிய மெகனின் தந்தை, தோமஸ் மார்கில், "என் மகள் அழகாக இருக்கிறாள். மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள். நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம்தான். ஆனால் அவர்களுக்கு என் வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

05:39 திருமணம் முடிந்து தேவாலயத்திற்கு வெளியே வந்த ஹாரி மற்றும் மெகன் மார்கிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்பு இருவரும், ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டுக் கொண்டனர்.

05:10 இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கிலுக்கு திருமணம் நடைபெற்றது. உறுதிமொழி ஏற்று, மோதிரம் மாற்றிக் கொண்ட மணமக்கள்.

04:51 ஒருவருக்கு ஒருவர் அன்போடு பார்த்துக் கொள்ளும் ஹாரி - மெகன்

04:46 உறுதிமொழி ஏற்றுக் கொண்ட மமக்கள்

மகிழ்ச்சியாக சிரித்தபடி இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

04:38திருமண நிகழ்வுகள் தொடங்கின

திட்டமிடப்பட்டிருந்ததைவிட ஆறு நிமிடங்கள் தாமதமாக திருமண நிகழ்வுகள் தொடங்கின.

04:35 மெகன் மார்கிலை அழைத்துச் செல்கிறார் இளவரசர் சார்ல்ஸ்.

04:30தேவாலயத்திற்கு வந்தார் மணப்பெண் மெகன் மார்கில்

ரோல்ஸ் ராய்ஸ் காரிலிருந்து இறங்கிய மணப்பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

04:27 பிரிட்டன் இளவரசி மற்றும் எடின்பர்க் கோமகன் தேவாலயத்தை வந்தடைந்தனர்.

04:22 காரில் வந்து கொண்டிருக்கும் மெகன் மார்கிலை மக்கள் உற்சாகமாக வரவேற்கின்றனர்.

04:21மணமகள் மெகனுக்காக காத்திருக்கும் ஹாரி!

மெகனுக்காக புனித ஜார்ஜ் தேவாலயத்தில் காத்திருக்கும் ஹாரி, தன் மூத்த சகோதரருடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

04:06:இளவரசர்கள் ஹாரி மற்றும் வில்லியம் தேவாலயத்தை வந்தடைந்தனர்.

கேம்பிரிட்ஜின் கோமகனுடன் தேவாலயத்திற்கு வந்த இளவரசர் ஹாரி பதற்றமில்லாது அமைதியாக காணப்பட்டார்.

04:00: திருமணத்திற்கு இன்னும் அரை மணி நேரமே உள்ளது. விருந்தினர்கள் பலரும் வந்து கொண்டிருக்கின்றனர்.

03:51 தேவாலயத்திற்கு புறப்பட்டார் மணப்பெண் மெகன் மார்கில் .

தனது தாயுடன் மெகன் மார்கில், ரோல்ஸ் ராய்ஸ் காரில் புறப்பட்டுள்ளார்.

03:31 தொலைக்காட்சி பிரபலமான ஜேம்ஸ் கார்டன் தன் மனைவியுடன் திருமணத்திற்கு வந்துள்ளார்.

03:16 புகழ் பெற்ற டென்னிஸ் வீராங்களை செரீனா வில்லியம்ஸின் உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

03:15 புகழ்பெற்ற ரக்பி வீரர் ஜானி வில்கின்ஸன் தன் மனைவியுடன் திருமணத்திற்கு வந்தார்.

03:14 இளவரசர் ஹாரியின் முன்னாள் காதலிகள் திருமண விழாவிற்கு வருகை தந்தனர்.

க்ரெஸிடா பொனஸ் மற்றும் செல்ஸி டேவி ஆகியோருக்கு திருமண அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அமெரிக்க திரைப்பிரபலமான ஓப்ரா வின்ஃப்ரி, ஜார்ஸ் மற்றும் அமல் க்ளூனி, டேவிட் மற்றும் விக்டோரிய பெக்ஹம், புகழ் பெற்ற ரக்பி வீரரான ஜானி வில்கின்ஸன் ஆகியோர் திருமணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

திருமண நிகழ்வில் தனது தந்தை கலந்துகொள்ள மாட்டார் என்று மெகன் மார்கில் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

33 வயதான இளவரசர் ஹாரியிடம் திருமணம் குறித்து கேட்ட போது, அவர் "பதற்றமில்லாமல்" இருப்பதாக தெரிவித்தார். மெகன் மார்கில், தான் "அற்புதமாக உணர்வதாக" குறிப்பிட்டார்.

அரச குடும்ப திருமணத்திற்கு பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருமணம் அரசாங்கத்தின் விழா அல்ல என்பதினால், பிரதமர் மே உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.