இந்தியாவில் குறுகிய காலத்தில் முதல்வர் நாற்காலியை இழந்தவர்கள்

பட மூலாதாரம், STRDEL
ஒரு மாநிலத்தின் முதல்வராக மூன்று நாட்கள் மட்டுமே பதவி வகித்துவிட்டு பதவியை ராஜிநாமா செய்ததன் மூலம் இந்திய அரசியல் வரலாற்றிலே குறைந்த நாள் பதவி விகித்த முதல்வர்கள் பட்டியலில் இரண்டாவது முறையாக இடம்பிடித்திருக்கிறார் பி.எஸ்.எடியூரப்பா.
75 வயதாகும் எடியூரப்பா கடந்த மே 17ஆம் தேதி மாநில கர்நாடக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
நேற்றைய தினம் கர்நாடக சட்டசபையில் அவர் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பாவின் முதல்வர் பதவி தப்பும் என்ற நிலை இருந்தது.
ஆனால், சட்டசபையில் உருக்கமான பேசிய எடியூரப்பா, தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாகவும், ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கப்போவதாகவும் கூறி சபையைவிட்டு வெளியேறினார்.
முதல்வராக பதவியேற்று முழுமையாக மூன்று நாட்கள் கூட நிறைவுபெறாத நிலையில் எடியூரப்பா பதவியை இழந்தது ஒன்றும் புதிதல்ல. கர்நாடகத்தில் 2004ஆம் ஆண்டு தொடங்கிய 12வது சட்டப்பேரவைக் காலத்தில், பல சர்ச்சைகளுக்கு பிறகு 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா. ஆனால், அவரது பதவி ஒருவாரம் கூட நீடிக்கவில்லை. பதவியேற்று 7வது நாள் நவம்பர் 19ஆம் தேதி தனது பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார்.
எடியூரப்பாவை போல இந்தியா மாநிலங்களிலுள்ள பல அரசியல் தலைவர்கள் மிகக் குறுகிய காலமே முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர். அவ்வாறு பதவி வகித்த முதல்வர்களின் பட்டியல் இதோ!

1998ல் உத்தர பிரதேச மாநில முதல்வராக பிப்ரவரி 21ஆம் பதவியேற்று கொண்டார் ஜகதாம்பிகா பால். அடுத்தநாள் காலை அவரது பதவியேற்பு செல்லாது என்று கூறி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஒரே நாளில் ஜகதாம்பிகா பால் தனது முதல்வர் பதவியை இழந்தார்.
பிகார் மாநில தற்காலிக முதல்வராக 1968ஆம் ஆண்டு சதிஷ் பிரசாத் சிங் ஜனவரி 28ஆம் தேதி பதவியேற்றார். ஆனால், அடுத்த மாதமே பிப்ரவரி 1ஆம் தேதி பதவியை ராஜிநாமா செய்தார்.
சதிஷ் பிரசாத் சிங்கை தொடர்ந்து முதல்வராக பதவியேற்ற பி.பி மண்டலுக்கும் முதல்வர் நாற்காலி நீண்ட காலம் நிலைக்கவில்லை. பிப்ரவரி 1ஆம் தேதி பதவியேற்ற அவர் மார்ச் 2ஆம் தேதி பதவியை ராஜிநாமா செய்தார்.

பட மூலாதாரம், ARIF ALI
1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹரியானா மாநில முதல்வராக ஓம் பிரகாஷ் சௌதாலா பதவியேற்றார். அந்த வரும் வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே அவர் முதல்வராக இருந்தார். 1991ஆம் சௌதாலாவுக்கு மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், வெறும் 14 நாட்கள் மட்டுமே முதல்வராக பதவி வகித்தார்.
மேகாலயாவில் மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.சி.மராக் 1998ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்றபோது 13 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார்.
1988ல் தமிழ்நாட்டில் எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு, தமிழகத்தின் முதல்வராக எம்ஜிஆரின் துணைவி ஜானகி 23 நாட்கள் மட்டுமே இருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












