You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாளிதழ்களில் இன்று: "இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற புதிய படிப்பு: ஜேஎன்யுவில் வலுக்கும் எதிர்ப்பு
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (சனிக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
கல்வி அலுவல் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில், "இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற புதிய படிப்பை தொடங்குவதற்கான முன்மொழிவை டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது குறித்த செய்தியை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் முதன்மை செய்தியாக வெளியிட்டுள்ளது.
நேற்று நடந்த ஜேஎன்யுவின் கல்வி அலுவல் கூட்டத்தில் தேச பாதுகாப்பு, மின்னணு பாதுகாப்பு, எல்லைப்பகுதி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புதிய படிப்புகளை தொடங்குவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் "சர்வதேச தீவிரவாதம்" குறித்த படிப்புகள் உள்ள நிலையில், குறிப்பிட்ட மதத்தோடு தீவிரவாதத்தை தொடர்புபடுத்தும் படிப்பொன்றை தொடங்குவதற்கு முன்மொழியப்பட்டது. இதுவே முதல் முறையாக இருக்குமென்று ஜேஎன்யு பேராசிரியர்கள் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தி இந்து (தமிழ்)
தொலைத்தொடர்பு பயனாளிகள் தங்களது சேவை நிறுவனங்களை மாற்றும்போது புதிய சிம் கார்டு வாங்குவதை தவிர்க்கும் இ-சிம் கார்டு முறைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய சிம் கார்டு வாங்குவதற்கும் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இந்த திட்டம் குறித்த புதிய வழிகாட்டுதல்களை மத்திய தொலைத் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது.
இ-சிம் மூலம் இயந்திரத்திலிருந்து இயந்திரத்தை (M2M) தொடர்பு கொள்ள பயன்படுத்தலாம். குறிப்பாக காரிலிருந்து செல்போனுக்கு தகவல் அளிக்க பயன்படுத்தலாம். இதன் மூலம் கார் கண்காணிப்பு மேம்படும்.
மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இ-சிம் கார்டு முறையை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகவும், சர்வதேச தரம் மற்றும் சர்வதேச அளவில் அளிக்கப்படும் சேவைகளுக்கு முன்கூட்டியே இதன் மூலம் தயாராக முடியும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
தினமணி
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜகவை ஆட்சியமைப்பதற்கு அம்மாநில ஆளுநர் அழைத்ததை தொடர்ந்து, எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடந்த மணிப்பூர் மற்றும் கோவா மாநில தேர்தல்களில் தனிப்பெரும்பான்மை பெற்ற தங்களையும் ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென்று அந்த மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர்களை சந்தித்து முறையிட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூரில் அகழ்வு வைப்பகம் அமைக்கப்படுமென்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் கூறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
கீழடியில் 18 நாட்கள் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிட்டத்தட்ட 2,200 பொருள்கள் கிடைத்துள்ளதாகவும், எனவே அகழ்வாராய்ச்சியானது தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு 109 ஏக்கர் பரப்பளவில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியதாக தினமணியின் செய்தி கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்