You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடகா: முதல்வர் எடியூரப்பாவின் தோளில் பச்சை சால்வை - எதை குறிக்கிறது?
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
கர்நாடகா மாநிலத்தின் 23வது முதலமைச்சராக வியாழக்கிழமையன்று பி.எஸ் எடியூரப்பா பதவி ஏற்றார். பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் வாஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பாவின் தோளில் பச்சை சால்வை இருந்தது, இது விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் அவரது மனநிலையை குறிப்பதாக கருதப்படுகிறது.
ஆனால் பச்சை வண்ண துண்டு, அவரை பதவியில் உடும்புப்பிடியாக தக்கவைத்து அவரது வாழ்வில் பசுமையை கொண்டுவருமா? அல்லது அவரது பதவியை துண்டாடுமா?
தற்போதைய குழப்பமான சூழ்நிலையில் எதிர்வரும் நாட்களில் கர்நாடகாவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை நாட்டு மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
அடுத்தது என்ன?
அரசமைப்பு சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப்பின் கருத்துப்படி, முதலமைச்சர் பதவியேற்றபிறகு சட்டமன்ற அமர்வு கூட்டப்படும்.
விதிகளின்படி, முதலமைச்சரின் ஆலோசனைக்கு ஏற்ப மாநில ஆளுநர் சட்டமன்ற அமர்வுக்கான தேதியை முடிவு செய்வார்.
இதற்கான அறிவிப்பை ஆளுநர் வெளியிடுவார். சட்டமன்ற அமர்வு ஒரு நாள் அல்லது ஒரு வாரத்திற்கு கூடலாம். இதற்கு நிலையான காலக்கெடு எதுவும் இல்லை. வழக்கமாக, சட்டமன்ற அமர்வு எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது சட்டசபையின் செயல்பாடுகளைக் கொண்டு தீர்மானிக்கப்படும்.
சட்டசபை கூடுவதற்கான நாளை அறிவிக்கும்போதே, இடைக்கால சபாநாயகரின் பெயரையும் ஆளுநர் முன்மொழிவார்.
இடைக்கால சபாநாயகர் யார்?
இடைக்கால சபாநாயகர், தற்காலிக சபாநாயகர் (ப்ரோடெம் சபாநாயகர்) என்றும் அழைக்கப்படுகிறார்.
பொதுவாக மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்படுவது பாரம்பரியமான நடைமுறை.
மூத்த சட்டமன்ற உறுப்பினரை தீர்மானிக்க இரண்டு நடைமுறைகள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் வயது, சட்டமன்ற உறுப்பினராக அவர் பணியாற்றிய கால அளவு என இதில் எதாவது ஒன்றின் அடிப்படையில் இடைக்கால சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
அரசியலமைப்பின்படி, இடைக்கால சபாநாயகருக்கு இருவகை அதிகாரங்கள் உண்டு.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவியேற்பு பிரமாணம் செய்து வைப்பதற்கான உரிமை இடைக்கால சபாநாயகருக்கு இருக்கிறது.
சட்டமன்றத்திற்கான சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரமும் இடைக்கால சபாநாயகருக்கு இருக்கிறது.
கடந்த 15-ம் தேதி எடியூரப்பா, கர்நாடகாவில் ஆட்சி அமைக்க கோரி கடிதம் தந்ததையடுத்து, கர்நாடக முதல்வராக பதவியேற்று ஆட்சியமைக்க அவருக்கு அழைப்பு விடுத்தார் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (மதச்சார்பற்றது) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் தீவிரத்தை புரிந்து கொண்ட உச்சநீதிமன்றம் 16ஆம் தேதி நள்ளிரவு 1.45 மணிக்கு வழக்கை விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண், அர்விந்த் பாப்டே அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டனர்.
காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கட்சிகளின் கோரிக்கையை தள்ளுபடி செய்யவில்லை என்று கூறிய உச்சநீதிமன்ற அமர்வு, வழக்கு விசாரணை 18ஆம் தேதியன்று காலை 10.30 மணிக்கு தொடரும் என்றும் கூறியது.
அரசு அமைப்பதற்கான கோரிக்கை கடிதத்துடன் தங்களுக்கு 115 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் கடிதத்தை கொடுத்த பிறகும் ஆளுநர் தங்களை ஆட்சியமைக்க அழைப்புவிடுக்கவில்லை. ஆனால் போதுமான ஆதரவு இல்லாத பா.ஜ.க, ஆதரவு கடிதத்தை கொடுக்காதபோதும் அவர்கள் அரசு அமைக்க அழைப்பு விடுத்தார் மாநில ஆளுநர் என்று காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.
பெரும்பான்மை ஆதரவு இல்லாதவர்களுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கலாமா?
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் சுபாஷ் காஷ்யப் கூறுகிறார்: "அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுப்பதற்கு ஆதரவு கடிதம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கவேண்டும்."
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதியிலும், ஜனதா தளம் (மதச்சார்பற்றது) 37 இடங்களிலும் சுயேட்சைகள் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன.
சுபாஷ் காஷ்யப் கூறுகையில், "தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால் இது அரசு அமைக்க போதுமான பெரும்பான்மை எண்ணிக்கை இல்லை என்றாலும், சட்டமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தங்களுக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை நிரூபித்தால் போதும்."
நம்பிக்கை வாக்கெப்பில் என்ன நடக்கும்?
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக சட்டமன்ற இடைக்கால சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
பல முறை எதிர்ப்பே இல்லாமல் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். ஆனால் அதற்கு இரண்டு பெயர்கள் பரிந்துரைக்கப்படலாம்.
இத்தகைய சூழ்நிலையில், இடைக்கால சபாநாயகரால் நட்த்தப்படும் சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் இருவரில் பெரும்பான்மை வாக்குகளை பெறுபவரே சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
அதன் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரின் முன்னிலையில், முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்மொழிவார், அதை சபாநாயகர் வழிமொழிவார்.
வாக்கெடுப்பானது, மின்னணு முறையிலோ, டிவிஷன் வாக்கெடுப்பு அல்லது வாக்குச்சீட்டு மூலம் நடத்தப்படலாம்.
கர்நாடக சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மின்னணு வாக்களிப்பு முறை பயன்படுத்தப்படும்.
ஆனால் எப்போது, எப்படி நடக்கும், அதன் விளைவுகள் எந்தவிதமான அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும்?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்