"ஆடை உருவப்பட்ட என் மகள் மீண்டு வருவாள்; அவர் மருத்துவர் ஆகவேண்டும்"

- எழுதியவர், ரவி பிரகாஷ்
- பதவி, பிபிசிக்காக
"மிருகங்களை வேட்டையாடுவதைவிட மோசமான வகையில் அவர்கள் என் என் பேத்தியின் ஆடைகளை கிழித்து கொடுமை செய்துள்ளனர். எப்போதும் என்னுடன் தூங்கும் அவள் சம்பவ தினத்தன்று அழுதுகொண்டே படுத்திருந்தார். நான் எவ்வளவு கேட்டும் அதற்கான காரணத்தை அவள் கூறவில்லை. இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி போலீசார் எங்களது வீட்டிற்கு வந்தபோதுதான் இதுகுறித்து எங்களுக்குத் தெரியவந்தது. இந்த மோசமான செயலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வேண்டும்."
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வீட்டிற்கு நான் சென்றபோது அங்கிருந்த அனைவரும் அழுதுகொண்டிருந்ததால் என்னால் அவர்களுடன் இதற்குமேல் கலந்துரையாட முடியவில்லை.
சமீபத்தில் நாடு முழுவதும் வைரலானது இளம்பெண் ஒருவரின் ஆடையை சில ஆண்கள் கிழிக்கும் காணொளி. அந்த இளம்பெண்ணின் 70 வயதாகும் பாட்டியை ஜஹானாபாத்தில் சந்தித்தோம்.
"எனது மகனுக்கு இதுவரை தெரியாது"
இந்த மோசமான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட என் பேத்தி, என் மகன் வழிப் பேத்தி. டெல்லியில் தனது சகோதரர் வீட்டில் வசித்துக்கொண்டு ரிக்ஷா ஓட்டும் எனது மகனுக்கு இதுவரை இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கவில்லை.
70 வயதாகும் இந்த மூதாட்டி தன்னுடைய கணவர், மூன்று மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஜஹானாபாத்தில் வசித்து வருகிறார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் இந்த ஒட்டுமொத்த குடும்பத்திலேயே இளையவர் என்பதுடன், பள்ளிக்கு செல்லும் ஒரே பெண்ணாவார்.
தலித் பெரும்பான்மை கிராமம்

தேசிய நெடுஞ்சாலை 83ஐ ஒட்டியுள்ள ஜஹானாபாத்தின் குறுகிய சந்திலுள்ள இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்றேன்.
கிட்டத்தட்ட 400 வீடுகள் உள்ள இந்தப் பகுதியில் ரவிதாஸ் என்று அழைக்கப்படும் தலித் சமூகத்தவர் பெருமளவில் வசிக்கின்றனர். ரவிதாஸ் சாதியை சேர்ந்த தலித்துக்களை மகா தலித் என்னும் பிரிவில் வைத்துள்ளது பீகார் மாநில அரசு. தலித்துக்களுக்கு அடுத்தபடியாக இந்த கிராமத்தில் யாதவர்கள் மற்றும் முஸ்லிம்கள் சிறிய அளவில் உள்ளனர்.
பல வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்கள் தலித்துக்கள் வசிக்கும் இந்த இடத்தை அவர்களுக்கு வழங்கினர். எனவே, அவர்களிடம் நிலத்துக்கு உரிமைகோரும் ஆவணங்கள் ஏதுமில்லை. மேலும், இவர்கள் எலி பிடித்தும் மற்றும் தினக்கூலி வேலைக்கு சென்றும் தங்களது பிழைப்பை நடத்துகின்றனர்.
போலீஸ் கெடுபிடி

பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டை அடைவதற்கு குறுகிய தெருக்களை கடக்க வேண்டியிருந்தது. அவர்களின் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அந்த வீட்டின் உள்ளே செல்வதற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. பல மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு என்னை உள்ளே அனுமதித்தனர்.
வீடு செங்கற்களால் கட்டப்பட்டிருந்தாலும், மேல்பூச்சு செய்யப்படாத நிலையில் இருந்தது. ஒரு துணியினால் மூடப்பட்டிருந்த அறையின் உள்ளே இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் தனது தோழிகளுடன் அமர்ந்திருந்தார். நாம் கேட்ட கேள்விக்களுக்கு அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
தாயாரின் வேதனையும், ஆத்திரமும்
இருப்பினும், பெருமுயற்சிக்கு பிறகு பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாயாரை சந்தித்தேன். அவர் சாணம் தெளிக்கப்பட்ட தரையில் அமர்ந்திருந்தார். என்னதான் நடந்ததென்று நான் அவரிடம் கேட்டேன்.

அவர் உடனே கோபத்துடன், "நீங்களே என்ன நடந்ததென்று கூறுங்கள். எனது மகள் ஜஹானாபாத்திலுள்ள பயிற்சி மையத்துக்கு ஏப்ரல் 25ஆம் தேதியன்று சென்றார். வகுப்பு முடிந்ததும் இரவு சுமார் ஒன்பது மணியளவில் எங்களது உறவினர் ஒருவர் தான் வீட்டில் கொண்டு விடுவதாக தெரிவித்ததால் அவருடன் சென்றார். அதன் பிறகு என்ன நடந்தது என்று நாம் கேட்டபோது, தனது உணர்ச்சியை அடக்க முடியாத அவர், தனக்கு என்ன நடந்ததென்று தெரியாது என்று கோபத்துடன் கூறியதுடன் நம்மை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினார்.
பிறகு நான் அங்கிருந்து புறப்படும்போது பேசிய அவர், தனது மகள் இந்த சம்பவத்திலிருந்து மீண்டு வருவார் என்று நம்புவதாகவும், மேலும் "என்னுடைய மகள் நன்றாகப் படித்து மருத்துவர் ஆக வேண்டும். அப்போது, இந்த சம்பவத்தை அனைவரும் மறந்துவிடுவார்கள்" என்றும் அவர் கூறினார்.

துணிவுமிக்க பெண்; அரசாங்கம் உதவ முன்வர வேண்டும்
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பர்வேசை சந்தித்தேன். துணிவுமிக்க இந்த பெண்ணின் கல்விக்கு உதவுவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்று அவர் கூறினார்.
ஒரேயொரு குற்றவாளிதான் இன்னும் பிடிபடவில்லை

ஏப்ரல் 25 நடந்த இந்த சம்பவம் தொடர்பான காணொளி நாடு முழுவதும் பரவி வைரலானதும், பீகார் போலீசாரின் சிறப்பு விசாரணை குழு குற்றவாளிகளை தேடத் தொடங்கியது. இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டப்படும் 13 குற்றவாளிகளில் 12 பேர் பிடிபட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற ஒருவர் மட்டும்தான் தப்பித்துவிட்டதாகவும், ஆனால் அவர் விரைவில் பிடிபடுவார் என்று நம்புவதாகவும் என்று பிபிசியிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனிஷ் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












