You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிறம் மாறும் தாஜ் மஹால்: சரிசெய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
தாஜ் மஹால் நிறம் மாறி வருவது கவலையளிப்பதால் வெளிநாட்டு உதவி பெற்று சரிசெய்திட இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
"நிபுணர்கள் உள்ளபோதிலும் அவர்களை நீங்கள் பயன்படுத்தவில்லை அல்லது இதை பற்றி அக்கறை கொள்ளவில்லை" என்று இது தொடர்பாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
வெள்ளை பளிங்குக்கல் மற்றும் பிற பொருட்களால் 17ஆம் நூற்றாண்டு கட்டப்பட்ட புகழ்பெற்ற இந்த கல்லறை கட்டடம் மஞ்சளாக மாறி தற்போது பளுப்பு நிறமாகவும், பச்சையாகவும் மாறிவருவதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
மாசுபாடு, கட்டுமான பணிகள் மற்றும் பூச்சிகளின் மலக்கழிவுகள் இதற்கு காரணமென கூறப்படுகிறது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் சமர்பித்த தாஜ் மஹாலின் புகைப்படங்களை பரிசோதனை செய்த நிதிபதிகள் மதன் லோகுர் மற்றும் தீபக் குப்தா, இதனை சரிசெய்வதற்கான நிபுணர்களை இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் கண்டுபிடிக்க ஆணையிட்டுள்ளது.
தாஜ் மஹால் பக்கத்திலிருந்த ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை அரசு முன்னதாக அகற்றியிருந்தாலும், இன்னும் தாஜ் மஹால் அதன் பளபளப்பை இழந்து வருகிறது.
தாஜ் மஹாலை ஒட்டி ஓடுகின்ற யமுனா நதியிலுள்ள கழிவுநீரால் பல பூச்சிகள் வருகின்றன. இந்தப் பூச்சிகளின் மலக்கழிவுகள் தாஜ் மஹாலின் சுவர்களில் படிந்து கறை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஆக்ரா நகரில் மொகலாய மன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட தாஜ் மஹால் ஒவ்வொரு நாளும் 70 ஆயிரம் சுற்றுலா பயணிகளை கவர்கின்ற சுற்றுலா தளமாக புகழ்பெற்று விளங்குகிறது.
தாஜ் மஹால் மீது அழுக்கு படிந்துள்ள இந்த பிரச்சனை புதியது அல்ல. கடந்த 2 தசாப்தங்களுக்கு மேலாகவே மாசு படிந்திருந்த இதனை சுத்தப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வந்துள்ளன. ஆனால், இந்த பிரச்சனை மிகவும் மோசமாகி வருவதாக அச்சம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் அதில் ஒட்டியிருக்கும் மாசு படிவை அகற்றும் பணிகள் ஜனவரி மாதம் தொடங்கின.
சாரக்கட்டு அமைத்து தாஜ் மஹாலின் சுவர் மீது ஒட்டியிருக்கும் மாசு படிவுகள் அனைத்தையும் அகற்றி விடுகின்ற மண் பசையை பூசி சுவர்களை சுத்தம் செய்கின்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
பின்னர், இந்த மண் பசை கழுவப்படும்போது அதோடு சேர்ந்து மாசு படிவுகளும் வந்து சுவர்கள் சுத்தமாகி விடுகின்றன.
தற்போதைய இந்த சுத்தப்படுத்தும் பணிகள் இந்த ஆண்டு இறுதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாஜ் மஹால் பற்றிய அடுத்த உச்ச நீதிமன்ற விசாரணை மே மாதம் 9ம் தேதி நடைபெறவுள்ளது.
பிற செய்திகள்:
- கொரியாவிடம் இருந்து ஏன் இந்தியா-பாகிஸ்தான் கற்றுக்கொள்ளக் கூடாது?
- இந்துக்கள், சீக்கியர்கள் உதவியால் கட்டப்படும் மசூதி
- பாலிவுட் வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைப்பதா? - மனம் திறக்கும் நடிகைகள்
- ஆசாராமுக்கு தண்டனை வழங்கப் போராடிய குடும்பத்தின் வலிகள்
- என் அரசை விமர்சித்தால் நகத்தை வெட்டுவேன் - திரிபுரா முதல்வரின் அடுத்த சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்