You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு வர பெண்களைத் தடுப்பது எது?
- எழுதியவர், விக்னேஷ்.அ
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் எனும் கனவு நிச்சயம் இருக்கும்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கோர் விண்ணப்பிக்கும் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு ஆகியவற்றைக் கடந்து கடைசி நிலையான நேர்காணல் வரை வருபவர்கள் சில ஆயிரம் பேர் மட்டுமே.
நேர்காணலில் வெற்றிபெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ் என உயர் பொறுப்புகளுக்கு தகுதி பெறுபவர்கள் சில நூறு பேர் மட்டுமே. அந்த சில நூறு பேரிலும் பெண்களின் விகிதம் குறைவாகவே உள்ளது. பல சமயங்களில் தேசிய அளவில் முதலிடம் பிடிப்பவர்கள் பெண்களாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக தேர்ச்சியடையும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிடவும் குறைவுதான்.
2016ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் 1099 பேர். அவர்களில் 846 பேர் ஆண்கள். 253 பேர் பெண்கள். வெள்ளியன்று முடிவுகள் வெளியான 2017ஆம் ஆண்டுக்கான தேர்வில் வெற்றிபெற்ற 990 பேரில் 750 பேர் ஆண்கள். 240 பேர் மட்டுமே பெண்கள்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் கனகராஜ் தனது பயிற்சியின் மூலம் இதுவரை 85 பேரை குடிமைப் பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெறவைத்துள்ளார். ஆண்டுதோறும் வெளியாகும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் பட்டியலில் இவரது மாணவர்களும் கடந்த பல ஆண்டுகளாக தவறாமல் இடம் பிடித்து வருகின்றனர்.
குடிமைப் பணிகள் தேர்வில் பெண்கள் வெற்றிபெறும் விகிதம் குறைவாக இருப்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கனகராஜ், "இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பெண்களை அதிகாரப்படுத்துதல் முழுமையடையவில்லை. தமிழ்நாடு, கேரளா போன்ற வளர்ந்த மாநிலங்களில் ஒப்பீட்டளவில் பெண்களின் நிலை நன்றாக இருந்தாலும், அங்கும் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு ஆகியன போதுமானதாக இல்லை," என்கிறார்.
பெண்களின் பங்களிப்பை குடிமைப்பணிகள் தேர்வில் அதிகரிப்பது குறித்து பேசிய அவர், "ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு சென்றால் அரசியல் தலையீடு அதிகம் இருக்கும் எனும் கருத்து நிலவுகிறது. அது அப்படியல்ல. உண்மையில் குடிமைப் பணிகள், பிற பணிகளைவிட பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பு, பொருளாதார உத்தரவாதம், சமூக அந்தஸ்து என அனைத்தையும் வழங்குகிறது என்பதை மாணவிகளிடம் உணர்த்த வேண்டும்," என்று கூறுகிறார்.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அரசே குடிமைப் பணிகளுக்கான பயிற்சி மையங்களை நடத்துகின்றன. பெண்களுக்கான பிரத்யேக பயிற்சி மையங்களை உருவாக்கினால் இத்தேர்வுகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும், என்கிறார் கனகராஜ்.
பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது குடிமைப் பணிகளில் மட்டுமல்ல. பொதுவாக எல்லாத் துறைகளிலும் பணியாற்றும் பெண்களின் விகிதம் குறைவாகத்தான் உள்ளது என்கிறார் கர்நாடக மாநிலத்தில் பணியாற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மொட்கில்.
"குடிமைப் பணிகளுக்கான தேர்வில் முதல் முயற்சியில் பெண்கள் வெற்றியடையாவிட்டால், அவர்கள் குடும்பத்தினர் இரண்டாம் முயற்சிக்கே அரை மனதுடன்தான் அனுமதிக்கிறார்கள். மூன்றாம் முயற்சியென்றால் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதே இல்லை," என்கிறார் அவர்.
தங்கள் ஆரம்ப முயற்சிகளில் தோல்வி அடைந்தாலும் தொழில்முறை வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்காக ஆண்கள் மீண்டும் மீண்டும் அந்தத் தேர்வை எழுதுகிறார்கள். ஆனால், பெண்கள் பல சமயங்களில் அதைக் கைவிட்டுவிடுகின்றனர். தொடர்ந்து முயல வேண்டும் என தொடக்கத்திலேயே பெண்கள் தங்கள் மனதை உறுதியாக்கிக்கொள்ள வேண்டும் என்று ரூபா வலியுறுத்தினார்.
எனினும், சமீப ஆண்டுகளில் குடிமைப் பணிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :