#தமிழ்தேசியம்: தீர்வுக்குத் தடை பிராந்திய அரசியலா, இந்திய தேசியமா?

    • எழுதியவர், இரா.முருகானந்தம்
    • பதவி, செய்தித் தொடர்பாளர், தமிழ்நாடு காங்கிரஸ்

(தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந்த நிலையில், தமிழ் தேசியம் தொடர்பாக பல்வேறு ஆர்வலர்களின் கருத்துக்கள், இங்கே தொடராக வெளியிடப்படுகின்றன. இது, அந்தத் தொடரின் ஒன்பதாவது பாகம். இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

தற்போதைய இந்தியச் சூழலில் தேசியம், தேசிய இனங்களின் தனித்தன்மை, மாநில உரிமைகள் ஆகியவை குறித்த விவாதங்கள் வேகமெடுத்துள்ளன.

குறிப்பாக நரேந்திர மோதி அரசு பதவிக்கு வந்ததும் இந்துத்துவ அடையாள அரசியல், தேசியவாதமாக முன்வைக்கப்படுவதன் பின்னால் இந்த விவாதம் முக்கியத்துவமுடையதாகிறது.

தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகளில் மத்திய மாநில அரசுகளின் தமிழக விரோதப் போக்குகள் சுட்டிக்காட்டப்பட்டு தமிழ்த் தேசிய அரசியல் குரல்கள் எழத்துவங்கியுள்ளன. இன்னொரு புறம் தென்னிந்திய மாநிலங்கள் வரிவருவாய் பகிர்வில் தாங்கள் குறைந்த பங்கையே மத்திய அரசிடமிருந்து திரும்பப் பெறுவதாக (தமிழகம் தவிர) அதன் முதல்வர்கள் வெளிப்படையாக பேசத்துவங்கியுள்ளனர்.

இவற்றின் பின்னணியில் இந்திய தேசியம் குறித்ததொரு மீளாய்வு தேவையாகிறது. சுதந்திரம் பெற்றபோது நமது அரசியல் பாதையாக எல்லோரையும் உள்ளடக்கும் விரிவான பன்மைத்துவ தேசியத்தை முன்வைத்தனர் நம்முன்னோடிகள். அதற்கான பரிசோதனை கூடமாக 1885-ல் துவங்கப்பட்ட காங்கிரஸின் வரலாற்று பயணம் அமைந்தது.

கடந்த 1915-ல் காந்தி இந்தியா திரும்பியதற்கு பின் கணவான்களின் கூடாரமான காங்கிரஸ் சாமானியர்களை உள்ளடக்கிய அவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் இயக்கமாக உருப்பெற்றது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சம் 1920ல் காங்கிரஸ் அமைப்புரீதியாக மையப்படுத்தப்பட்ட தனது நிர்வாக அமைப்பை மாகாணக் கமிட்டிகளாக பிரித்தது. அந்த மாகாணக் கமிட்டிகள் அன்றைக்கு நடப்பிலிருந்த பிரிட்டிஷ் மாகாணங்களை அடிப்படையாக கொள்ளாமல் தேவையான இடங்களில் மொழிவழி மாகாணக் கமிட்டிகளாக அமைந்தன.

அன்றைய பம்பாய் மாகாணத்தின் ஒருபகுதியாக இருந்த குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையேற்ற அதே காலத்தில், சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியான தமிழகத்தின் காங்கிரஸ் தலைவராக முத்துரங்க முதலியார் பொறுப்பேற்றார்.

சுதந்திர இந்தியா மொழிவழி மாநிலங்களை அமைப்பதற்கு முன்னோடியாக காங்கிரஸ் தனித்தன்மை கொண்ட தேசிய இனங்களின் இருப்பை அங்கீகரித்ததன் அடையாளமே இந்த அமைப்பு முறை.

சென்னையை தங்களுக்குப் பெற ஆந்திர, தமிழக காங்கிரஸ் கட்சிகள் மல்லுக்கட்டி நின்றதும் வரலாறு.

இதன் பின்னணியில் சங்பரிவார் முன்வைக்கும் இந்து தேசியவாதமும் அதற்கு மாற்றாக தமிழகத்தில் சிலரால் முன்வைக்கப்படும் தமிழ்த் தேசியவாதமும் முதிரா அரசியல் முழக்கங்கள்.

பன்மைத்துவ அரசியலின் கால்கோல்

சுதந்திரத்திற்கு சற்று முன் அமைக்கப்பட்ட இந்தியாவிற்கான மைய அரசில் தங்களோடு கடுமையாக முரண்பட்ட அம்பேத்கரையும் இறுதிவரை பிரிட்டிஷாருடன் இணக்கம் காட்டிய நீதிக்கட்சியின் ஆர்.கே.சண்முகம் செட்டியாரையும் அமைச்சரவையில் முறையே சட்ட அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் அமர்த்திய காங்கிரஸின் முடிவு ஒரு விரிவான பன்மைத்துவ ஜனநாயகத்தை கட்டியமைக்க அமைக்கப்பட்ட கால்கோல்.

இருவரும் தங்கள் துறைகளில் நிபுணர்கள் என்கிற காரணம் மட்டுமின்றி, கடந்த காலக் கசப்புகளின் மீது ஒரு நவீன தேசத்தின் கட்டுமானம் நிகழக்கூடாது என்கிற விசாலமான நடைமுறை நோக்கும் ஒரு கூடுதல் காரணம்.

பெரும்பாலும் தமிழகத்திற்கு தனது எல்லைப்புற மாநிலங்களிடையே உள்ள நதிநீர் பங்கீட்டு தகராறுகளை தமிழ்த் தேசியத்திற்கு காரணவாதமாகப் பலரும் குறிப்பிடுகின்றனர். இப்பிரச்சனைகளில் தமிழகம் தனது பங்கீட்டை பெற கடுமையாக போராட வேண்டியிருப்பதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளைக்கூட அண்டை மாநிலங்களும் மத்திய அரசும் அரசியல் நோக்குடன் அணுகுவதும் உண்மையில் துரதிருஷ்டவசமானவையே.

மாநிலங்கள் தங்களது பாசனப் பகுதிகளை பெருமளவு விரிவுபடுத்திக்கொண்டதும் அதே நேரம் பருவமழையின் அளவு ஆண்டுதோறும் குறைந்து வந்ததும் நாம் கவனிக்க மறுக்கும் கூடுதல் காரணங்கள். காவிரி பாசனப்பரப்பை கர்நாடகா பெருமளவு விரிவுபடுத்திக்கொண்டதே தமிழகத்துக்குரிய பங்கீட்டு நீர் வராமல் போனதற்கு முக்கிய காரணம்.

ஆனால் அதே நேரம் தமிழகத்தில் 1,70,000 ஏக்கருக்கும் கேரளத்தில் 20,000 ஏக்கருக்கும் பாசன வசதியளிக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டத்தில் பயன்பெறும் பகுதிகளை தமிழகத்தில் இன்று சுமார் 4,00,000 ஏக்கருக்கும் அதிகமாக விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறோம்.

ஆனாலும் இதுவரை நீர்ப்பங்கீடு பெரிய பிரச்சனைகளின்றி மேற்கொள்ளப்படுகிறது. எனவே ஒரு விரிவான ஜனநாயக அமைப்பில் பேசினால் விட்டுக்கொடுத்தால் நல்லெண்ணத்தை முன்வைத்தால் தீராத பிரச்சனை ஏதுமில்லை. அதற்கு குறுகிய பிராந்தியவாத அரசியல்தான் தடையே தவிர இந்திய தேசியமல்ல.

இந்திய தேசியத்தைவிட மூத்த தேசிய இன அடையாளம்

சமீபத்தில் கூட்டாட்சி அமைப்பு பற்றியும் அதில் மாநிலங்களின் உரிமை பற்றியும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஒரு முகநூல் பதிவு பரவலான விவாதத்தை கிளப்பியது. அதில் அவர் முன்வைத்த இரண்டு அம்சங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

1. பல தேசிய இனங்களின் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் இந்திய தேசியத்தைவிடவும் பல நூற்றாண்டுகள் மூத்தவை. எனவே அவற்றின் தனித்தனை்மையை தக்கவைக்கும் விருப்பங்கள் இயல்பானவை என்பதுடன் அவை இந்தியாவின் நல்லிணக்கத்திற்கு எதிரானவை அல்ல. மாறாக அவற்றை அங்கீகரிப்பதன் மூலம் இந்தியா ஜனநாயகம் வலுப்படவே செய்யும்.

2. நாம் சுதந்திரமடைந்த காலத்தின் பிரச்சனைகளை கடந்து இப்போது ஒரு ஜனநாயகமாக நாம் பலபடிகள் முன்னகர்ந்திருக்கிறோம். எனவே, மத்திய, மாநில அரசுகளின் உறவுகளில் மாநில உரிமைகள் முக்கியத்துவம் பெறுவதை தவிர்க்க இயலாது. எனவே மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் மாநிலங்களின் பங்களிப்பை உறுதி செய்வது அவசியம்.

இந்த இரண்டு அம்சங்களும் நாம் விரிவான வலுவான ஜனநாயகமாக முன்னகரத் தேவையான பாதை வரைபடங்கள்.

மதப்பெரும்பான்மை வாதமும், குறுகிய மொழி அடிப்படை வாதங்களும், ஒரு போதும் பன்மைத்துவ தேசியத்தை பதிலீடு செய்ய இயலாது.

அதே நேரம் எல்லா கருத்தியல் தரப்புகளையும் ஒரு ஜனநாயக விவாதம் இடம் தந்து ஏற்கும். ஏற்க வேண்டும். அந்த பண் புநலனை கொண்டிருக்கும் வரை இந்திய தேசியமே எல்லோருக்குமான நம்பகமான அரசியல் கையிருப்பு. பிளவு படுத்துதல்களை மையமாக கொண்ட கருத்தாக்கங்கள் வரலாற்றில் நிகழ்த்திய பேரழிவுகளே, உள்ளடக்கும் தன்மைகொண்ட இந்திய ஜனநாயகம் நீடிப்பதற்கான நியாயம்.

ஒரு பிரெஞ்ச்சு எழுத்தாளர் நேருவிடம் பேசிக்கொண்டிருந்த போது கேட்ட கேள்வி, "உங்கள் வாழ்வின் சவாலான பணி எது?"

அதற்கு நேரு அளித்த பதில் "ஒரு நியாயமான தேசத்தை நியாயமான வழியில் உருவாக்கியது".

அந்த நியாயமே இந்திய தேசியம் நீடிப்பதற்கான, ஏன் இந்தியா நீடிப்பதற்குமான நியாயமும் கூட.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: