ஐஏஎஸ், ஐபிஎஸ்: குடிமைப் பணிகள் தேர்வில் சரிந்த தமிழர்கள் எண்ணிக்கை
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
டெக்கன் கிரானிக்கல் - குடிமைப் பணிகள் தேர்வில் சரிந்த தமிழகம்

பட மூலாதாரம், XtockImages
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகள் தேர்வில் இந்த ஆண்டு நாடு முழுவதும் தேர்ச்சியடைந்துள்ள 990 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 42 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 78 பேர் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்த ஆண்டு தருமபுரியை சேர்ந்த கீர்த்தி வாசன் அகில இந்திய அளவில் 29ஆம் இடமும், சென்னையைச் சேர்ந்த மதுபாலன் 71ஆம் இடமும் பெற்று முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளனர்.

தி இந்து (ஆங்கிலம்) - கத்துவா வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

பட மூலாதாரம், Reuters
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள கத்துவாவில் எட்டு வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்து கொலைசெய்யப்பட்ட வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் மே 7 வரை இடைநிறுத்தம் செய்துள்ளது.
வழக்கு விசாரணையை சண்டிகருக்கு மாற்ற வேண்டும் என்றும் உயிரிழந்த சிறுமியின் தந்தை கோரிக்கை விடுத்து தாக்கல் செய்துள்ள மனுவுக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் பதிலளிக்க அவகாசம் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - பயிர்காப்பீட்டு திட்டத்தில் குறைகள்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 2016-17 மற்றும் 2017-18 ஆகிய நிதி ஆண்டுகளில் முறையே 22,180 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் 24,454 கோடி ரூபாய் சாந்த வசூலித்துள்ள காப்பீட்டு நிறுவனங்கள் அந்த ஆண்டுகளில் 12,959 கோடி ரூபாய் மற்றும் 402 கோடி ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியுள்ளதாக டெல்லியிலிருந்து வெளியாகும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
பயிர் இழப்பீடுகளை மதிப்பீடு செய்யும் மாநில அரசுகளே 50% சந்தா தொகையை மானியமாக செலுத்த வேண்டியுள்ளதால், மத்திய அரசே முழு மானியத்தையும் வழங்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி - கழுதைக்கு தேர்வு எழுத அனுமதிச் சீட்டு

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற அரசுப் பணிக்கான தேர்வு ஒன்றில் கழுதை ஒன்றுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது சமூக ஊடகங்களில் கேலிக்கு உள்ளாகியுள்ளது.
அதில் கழுதையின் படம் இருப்பது மட்டுமல்லாது பெயருக்கான இடத்தில் 'பழுப்பு கழுதை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












