பெரு: 550 ஆண்டுகளுக்கு முன் நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள்
பெரு நாட்டில் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ள நரபலிதான் உலக வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் நரபலி கொடுக்கபட்ட சம்பவமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பட மூலாதாரம், GABRIEL PRIETO/NATIONAL GEOGRAPHIC
550 ஆண்டுகளுக்கு முன்னால், பெருவின் வட பகுதியில் அமைந்துள்ள கடலோர பிரதேசத்தில், ஒரே சமயத்தில் 140 குழந்தைகளுக்கு மேலாக நரபலி கொடுக்கப்பட்டுள்ளது.
முற்கால சிமு நாகரிக மையத்திற்கு அருகில் அமைந்துள்ள இன்றைய ட்ருஜிலோவுக்கு அருகில் இந்த நரபலி கொடுக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ள 200க்கு மேலான லாமா வகை ஒட்டகங்களும் இந்த குழந்தைகளோடு புதைக்கப்பட்டுள்ளன.
தேசிய புவியியல் நிறுவனத்தின் நிதி ஆதரவோடு நடைபெற்றுள்ள இந்த ஆய்வின் கண்டுபிடிப்பு, இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
"நான் இதுபோன்றதொரு கண்டுபிடிப்பை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. வேறு யாரும் கூட இந்த கண்டுபிடிப்பை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்" என்று இந்த ஆய்வை தலைமையேற்று வழிநடத்திய ஜான் வெரானோ கூறியுள்ளார்.

பட மூலாதாரம், GABRIEL PRIETO/NATIONAL GEOGRAPHIC
2011ம் ஆண்டு 3,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் நடத்திய தொல்பொருள் ஆய்வில், 40 மனிதர்கள் மற்றும் 74 ஒட்டகங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது ஹூயான்சாகுய்ட்டோ-லாஸ் லாமாஸ் என்று அறியப்படுகிறது. இந்த இடம்தான் மனித நரபலி சம்பவம் பற்றி கண்டறியப்பட்ட முதல் இடமாகும்.
இந்த நரபலி சம்பவத்தில் நரபலி கொடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள 140 குழந்தைகளும் 5 முதல் 14 வரையான குழந்தைகள் என தெரிகிறது. ஆனால், அதில் பெரும்பாலோர் 8 முதல் 12 வயது வரையானவர்கள் என்று தேசிய புவியியல் இணையதளம் தெரிவிக்கிறது,
மார்பு நடு எலும்பு உள்பட எலும்புகளில் வெட்டு அடையாளங்கள் இருப்பதால் இந்த குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டவர்கள் என்று அறியப்படுகின்றனர். விலா எலும்புகள் பல சேதமடைந்திருப்பதால் இதயங்கள் அகற்றபட்டிருக்கலாம் என்பதை காட்டுகிறது.
சின்னாபாரில் என்கிற தாதுவில் இருந்து தயாரிக்கப்பட்ட சிவப்பு வண்ணப்பொருளால் இந்த குழந்தைகள் பலர் மீது பூசப்பட்டுள்ளது. இது நரபலி சடங்கின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது.
இந்த குழந்தைகளோடு நரபலி கொடுக்கப்பட்டுள்ள ஒட்டகங்களும் 18 மாதங்களுக்குள் இருந்த இளம் ஒட்டகங்கள் என்று தெரிகிறது. இவை ஆண்டஸ் மலை தொடரை நோக்கி கிழக்கு திசை பார்வையாக அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

"இது பற்றி கேள்விப்பட்டவுடன், மக்கள் முதலில் கேட்கிற கேள்வி, ஏன் இவ்வாறு நடைபெற்றுள்ளது என்பதுதான்" என்று இன்னொரு ஆய்வாளரான கபிரியெல் பிரியேட்டோ கூறுகிறார்.
இந்த தொல்லியல் ஆய்வில், பாதிக்கபட்டவர்கள் புதையுண்டிருக்கும் மண் அடுக்கு இதுபற்றிய துப்பு வழங்கலாம். எல் நினோ போன்ற மிக மோசமான காலநிலையால் உருவாகும் சாத்தியம் உடைய பொதுவாக மிகவும் வறட்சியான இடத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இவர்கள் புதையுண்டிருக்கலாம்.
இத்தகைய சம்பவம், சிமுவிலுள்ள பரந்த அளவிலான உள்கட்டுமான வசதிகளில், அந்த பகுதியிலுள்ள விவசாய கால்வாய்களை மூழ்கடித்த கடலோர வெள்ளப்பெருக்கு கடல் மீன் வளத்தை பாதித்திருக்கலாம் என்று தேசிய புவியியல் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது,
கார்பன் பரிசோதனைபடி, ஆடைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த சம்பவம் கிட்டத்தட்ட கி.பி 1400 முதல் 1450க்குள் நடைபெற்றிருக்கலாம் என்று தெரிகிறது.
சந்திர கடவுளை வழிபட்டு வந்த சிமு மக்கள் சில தசாப்தங்களுக்கு பின்னர் இன்கா நாகரிகத்தால் தோற்கடிக்கப்பட்டனர்.
50 ஆண்டுகளுக்கு பின்னர் தென் அமெரிக்கா வந்த ஸ்பானியர்கள் இன்கா பேரரசை கைப்பற்றினர்.
கஞ்சாவை மருந்தாக பயன்படுத்தும் பெரு நாடு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













