You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆந்திராவில் 13 மணி நேரத்தில் 36,749 மின்னல் தாக்கியது ஏன்?
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று 13 மணி நேரத்தில் 36,749 மின்னல்கள் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது வழக்கத்திற்கு மாறான எண்ணிக்கை. மேலும் ''தீவிர வானிலை பாங்குகளால்'' இந்த அளவுக்கு மின்னல்கள் ஏற்பட்டதாக மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒரு ஒன்பது வயது சிறுமி உட்பட ஒன்பது பேர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஆந்திராவில் ஏற்பட்ட மின்னல் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
கடுமையான பருவ மழைக்காலங்களில் இந்தியாவில் மின்னல்கள் தாக்குவது பொதுவான விஷயம்.
''ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை மழைக்கான பருவகாலம் இருக்கும் . ஆனால் இந்த குறிப்பிட்ட பிராந்தியத்தில் பருவமழை துவங்குவதற்கு முன்னர் மின்னல்கள் தாக்குவது அதிகமாக இருப்பதை பாரக்கமுடிகிறது'' என பிபிசியிடம் தெரிவித்தார் மாநில பேரழிவு மேலாண்மை ஆணையத்தின் கிஷான் சங்கூ.
செவ்வாய்க்கிழமை நடந்த மின்னல் தாக்குதல்கள் மிகவும் முரண்பாடான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த வருடம் இந்த பிராந்தியத்தில் மே மாதத்தில் ஒட்டுமொத்தமாக 30 ஆயிரம் மின்னல்கள் ஏற்பட்டன.
புவி வெப்பமயமாதல் மின்னல் தாக்குதல் நிகழ்வை குறிப்பிடத்தக்க அளவில் அதிகப்படுத்தியிருக்கலாம் என சில அறிஞர்கள் நம்புகின்றனர்.
ஏன் அதிகம் மின்னல் தாக்குகிறது?
ஆந்திராவின் வடக்கு கடற்கரையோரத்தில் அடிக்கடி கடும் மழை இருக்கும். இப்பகுதியில்தான் மின்னல் அதிகளவு தாக்குகிறது.
பருவமழை தொடங்குவதற்கு முன்னர் இந்த பகுதியில் மின்னல் வழக்கமாக அதிகரிக்கும். இந்த வருடம் அரேபிய கடலில் இருந்து குளிர் காற்றும் வட இந்தியாவில் இருந்து வெப்பக் காற்றும் மோதியதால் மேகங்கள் உருவாக்கம் வழக்கத்தை விட அதிகரித்ததாக சங்கூ தெரிவித்துள்ளார்.
இதனால் மின்னல் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகரித்தது.
இந்நிலை ஏற்படுவதற்கு தனித்தன்மை வாய்ந்த காரணம் என்னவெனில் மேக மூட்டம் 200 கிமிவரை விரிவடைந்ததாக அவர் தெரிவித்தார்.
''பொதுவாக 15-16 கிமி அளவுக்கு திட்டுகளாகத்தான் மேகமூட்டம் இருக்கும். ஆனால் என்னுடைய அனுபவத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்வு மிகவும் அரிதானது'' என சங்கூ பிபிசியிடம் கூறினார்.
இந்தியாவில் மின்னல் மரணங்கள் பொதுவானவையா?
தேசிய குற்றவியல் ஆவணப்பதிவு நிறுவனம் கருத்துப்படி இந்தியாவில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மின்னல் தாக்குதலால் குறைந்தபட்சம் இரண்டாயிரம் பேர் மரணமடைகின்றனர்.
ஜூன் 2016-ல் பீகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மின்னல் தாக்குதலால் 93 பேர் இறந்தனர். இருபதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்றவற்றை ஒப்பிடும்போது இந்தியாவில் மின்னல் தாக்கி மரணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 27 பேர் மின்னல் தாக்கி இறக்கின்றனர்.
நம்பகமான முன்னெச்சரிக்கை விடுக்கும் அமைப்பு இல்லாததே அதிக மரணத்துக்கு ஓர் காரணமாக கருதப்படுகிறது. மற்ற நாடுகளை விட கட்டடங்களுக்கு வெளிப்புறத்தில் செய்யப்படும் வேலைகளில் ஈடுபடுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருப்பது பாதிப்புகளை இன்னும் மோசமாக்குகிறது.
சங்கூ பிபிசியிடம் பேசுகையில் தனது அலுவலகம் மக்களுக்கு அபாயங்கள் குறித்து எச்சரிக்கையூட்டி வருகிறது என்றார். செவாய்க்கிழமையன்று வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற குறுஞ்செய்தி சேவை நிறுவனங்கள் மூலம் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்ததாகவும்,வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
அலைபேசி பயன்படுத்துவோருக்கு சந்தா வழி விழிப்புணர்வும் வழங்கப்படுவதாகவும் '' ஆனால் எங்களால் களத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களை எச்சரிக்கை செய்ய முடியவில்லை. ஏனெனில் அவர்கள் அலைபேசியை தங்களுடன் எடுத்துச் செல்வதில்லை'' என்றார்.
மின்னல் தாக்கும்போது உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
1. ஒரு பெரிய கட்டடம் அல்லது காரினுள் பாதுகாப்பாக இருங்கள்
2. வெளிப்படையான மலைப்பகுதி மற்றும் பரந்து விரிந்த திறந்தவெளி பகுதிகளில் இருந்து வெளியேறுங்கள்.
3. ஒருவேளை உங்களுக்கு பாதுகாப்பான இடம் கிடைக்கவில்லை கூடுமானவரையில் உங்களின் மீது மின்னலின் இலக்கு இருப்பதை குறைத்துக்கொள்ளுங்கள். உங்களது பாதங்களை சேர்த்துவைத்தது, கைகளை மூட்டின் மேல் வைத்து தலைகளை குறுக்கி மூட்டுக்கு அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.
4. உயரமான அல்லது தனிமைப்படுத்தப்பட்ட மரங்களிடம் பாதுகாப்பை நாடாதீர்கள்.
5. நீங்கள் தண்ணீரில இருந்தால் விரைவாக கரைக்குச் செல்லுங்கள்.
ஆதாரம் : விபத்து தடுப்புக்கான அரசு அமைப்பு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :