தலைமுறைகளாக 'எலும்புக்கூடு' சேகரிப்பவர்கள் அச்சப்படுவது ஏன்?

உத்தரப்பிரதேசத்தில் தலைமுறை தலைமுறையாக விலங்குகளின் உடல்களில் இருந்து எலும்புகளை சேகரித்து வருபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், 2017ஆம் ஆண்டில் பசுவதைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்த பிறகு அவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
புகைப்பட கலைஞர் அங்கித் ஸ்ரீநிவாஸ், அவர்களிடம் இது குறித்து பேசிய போது, "எலும்புகளை எடுத்து செல்லும்போது நாங்கள் பசுவதை முகாம்களில் வேலை செய்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள்" என்கிறார் 55 வயதான ப்ரிஜ்வசி லால்.
எலும்புகளை விற்று வரும் பணத்தை வைத்து வாழ்க்கை நடத்தும் லால், அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான தலித்துகளுள் ஒருவர்.
பசுக்களை கடத்துவதாக சந்தேகித்து பல முறை தங்களை தாக்கியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். தாமும் பலமுறை மிரட்டப்பட்டுள்ளதாக லால் தெரிவித்தார்.

18 மாநிலங்களில் பசுவதை ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இது பல மாநிலங்களில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது.
இந்துக்கள் பசுக்களை புனிதமாக கருதுவதாக அக்கட்சி நம்புகிறது. ஆனால், தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் என இந்தியாவில் பலரும் மாட்டுக்கறி உண்கிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் எத்தனை தலித்துகள் எலும்புகள் சேகரிக்கும் பணியை செய்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால், அவர்கள் பெரும்பாலும் அலகாபாத், கான்பூர் மற்றும் கோண்டா போன்ற இடங்களில் உள்ள எலும்பை பொடியாக்கும் தொழிற்சாலையின் அருகில் வசிக்கிறார்கள்.
"ஒரு கிலோ எலும்பிற்கு, நாள் ஒன்றுக்கு மூன்றிலிருந்து ஐந்து ரூபாய்தான் கிடைக்கிறது" என்கிறார் லால். இது மரியாதைக்குரிய பணி இல்லைதான். ஆனால், என் குடும்பத்திற்கு இதை செய்தால்தான் உணவு என்றும் லால் தெரிவித்தார்.

பசுவை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில், பல பேர் இங்கு கொலை செய்யப்பட்டதால் அச்சத்துடன் வாழ்கிறார் லால். கொல்லப்பட்ட பலரும் முஸ்லிம்கள்தான்.
"நாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இருட்ட ஆரம்பிக்கும் போது எங்கள் வேலையை தொடங்கி காலை பத்து மணிக்கு முன் முடித்துக் கொள்வோம்" என்கிறார் அவர்.
எலும்புக்கூடுகள் என்றால் ஏற்கனவே ஒரு தவறான எண்ணம் இருப்பதினால், இந்த தொழில் செய்வது கடினமாக உள்ளது என்றும் லால் கூறுகிறார்.
"நாங்கள் தலித்துகள். நாங்கள் எப்போதும் பெரும்பாலான மக்களால் மதிக்கப்படுவதில்லை" என்று கூறும் லால், இந்தத் தொழில் செய்வதினால் உண்மையிலே தீண்டத்தகாதவர்களாக ஆகின்றோம்" என்கிறார்.

"நாங்கள் ஒரு சாலையில் சென்றால், அந்த சாலையை செல்வதை மற்றவர்கள் தவிர்ப்பார்கள்" என்று லால் தெரிவித்தார்.
"அழுகிய மாமிசத்தின் வாடையை உங்களால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. நாங்கள் அதற்கு பழகிவிட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அப்படியில்லை. எங்களுக்கு வேறு வழி இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பணிக்கு உடல் மற்றும் மன வலிமை அதிகம் தேவை என்கிறார் சுக்ரீவ்.
உயிரிழந்த விலங்குகளை தேடி, சுமார் 45 கிலோ மீட்டர்கள் நடந்து செல்வதாக கூறும் அவர், யார் வீட்டிலாவது விலங்குகள் இறந்திருந்தாலும் தங்களை அழைப்பதுண்டு என்று குறிப்பிடுகிறார்.

இது மரியாதையான பணி செய்கிறோம் என்பதினால், வீடுகளில் எங்களுக்கு குடிக்க நீர் கூட தருவதில்லை என்கிறார் அவர்.
"நாங்கள் இந்த சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறோம். உயிரிழந்த விலங்குகளின் உடல்களை அகற்றுகிறோம். ஆனால், எங்களை யாரும் மதிப்பதில்லை. எங்களுக்கு வேறு வேலை செய்ய வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், எங்களை யார் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்?" என்று வினவுகிறார் பைசகு


பசுக்களை பாதுகாக்கிறோம் என்று முஸ்லிம்களும் தலித்துகளும் தொடர்ந்து தாக்கப்படுவதை எண்ணி பலரும் கவலை கொள்கின்றனர்.
"நாங்கள் விலங்குகளை கொல்வதில்லை. அவை இறந்த பிறகு அதன் எலும்புகளை மட்டுமே எடுக்கிறோம். ஆனால், சிலர் தவறாக புரிந்து கொண்டு எங்களை மோசமாக நடத்துகிறார்கள்"

இந்த தொழில் செய்வதற்காக தாம் மிரட்டப்படுவது, தன் வாழ்க்கையை கடினமாக்குவதாக கூறும் பைசகு, சில மாதங்களுக்கு முன்பு தனக்கு நடந்த சம்பவத்தை நினைவு கூர்கிறார்.
"இறந்த விலங்கின் உடலை என் சைக்கிளிள் கொண்டு சென்றிருந்தேன். என்னை நிறுத்திய ஒரு கும்பல், நான் பசுவை கொன்றேனா என்று கேட்டது. நான் இல்லை என்று கூறிய போதும் என்னை மிகவும் மோசமாக நடத்தினார்கள். அதை நினைத்தால் இன்றும் பயமாக உள்ளது" என்கிறார் அவர்.

வீட்டு வேலை பார்த்து வரும் சோட்டு, அதிக பணத் தேவை இருக்கும் போது எலும்புகளை சேகரிக்கிறார். ஆனால், இதனை விரைவில் நிறுத்திவிட வேண்டும் என்றே அவர் நினைக்கிறார்.
"மக்கள் எங்களை புரிந்து கொள்ளாத போது, நான் ஏன் இந்த வேலையை செய்ய வேண்டும்? நாங்கள் சுற்றுச்சூழலை சுத்தம் செய்கிறோம். ஆனால் எங்களுக்கு கிடைப்பது என்னவோ அவமானமும், மிரட்டல்களும்தான்"
"எங்களை மரியாதையாக நடத்துவது அவ்வளவு கடினமா?" என்று அவர் வினவினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












