எட்டு வயது சிறுமி கொலை: காஷ்மீரில் 2 பாஜக அமைச்சர்கள் ராஜிநாமா

பட மூலாதாரம், KANDHARI / BBC
எட்டு வயதுப் பெண் குழந்தை கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு பா.ஜ.க அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.
தொழிற்துறை அமைச்சர் சந்திர பிரகாஷ் கங்கா மற்றும் வனத்துறை அமைச்சர் லால் சிங் ஆகிய இருவரும் இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
இதற்கு முன்னதாக, இச்சம்பவம் குறித்து பேசிய பிரதமர் மோதி, நாகரீகமான சமூகத்தில் இது போன்ற செயல்கள் வெட்கக்கேடான ஒன்று எனக் கூறினார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறிய அவர், பா.ஜ.கவுக்கு எதிராக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

பட மூலாதாரம், TWITTER @ PIB_INDIA
தில்லியில் அம்பேத்கர் நினைவிடத்தை திறந்து வைத்து பேசிய அவர், ஆசிஃபா கொலைக் குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என தாம் உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது போன்ற சம்பவங்களில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது எனவும் அவர் கூறினார்.
நம் சமூகத்தில் உள்ள தீமைகளை ஒழிக்க நாம் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்றார் பிரதமர் மோதி.
நடந்தது என்ன?
எட்டு வயதுப் பெண் குழந்தை ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா முழுவதிலும் கடும் சீற்றத்தை உருவாக்கியுள்ளது.
இமயமலை மலையில் ஆடுகள், எருமைகள் மேய்க்கும் குஜ்ஜர் எனப்படும் முஸ்லிம் நாடோடி மேய்ப்பர் சமூகத்தைச் சேர்ந்த ஆசிஃபா பானு, கடந்த ஜனவரி 17ம் தேதியன்று இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள கத்துவா நகரத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது தொடர்பாக எட்டு இந்துக்கள் கைது செய்யப்பட்டதற்கு இந்து வலதுசாரிக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
ஓர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, நான்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் பதின்ம வயது இளைஞர் ஒருவர் உள்ளிட்ட எட்டு ஆண்களை போலீசார் இந்த குற்றம் தொடர்பில் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் பலரும் #JusticeforAasifa என்ற ஹேஷ் டேகை பயன்படுத்தி ஆசிஃபா வன்புணர்வு-கொலைக்கு நீதிகேட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிடடு வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












