You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
‘கர்நாடகத்துக்கு மின்சாரம்’ - நெய்வேலியில் அனல் மின்நிலையம் முற்றுகை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, கர்நாடகத்துக்கு மின்சாரம் தரக் கூடாது என்ற கோஷத்துடன் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நெய்வேலி அனல்மின் நிலையத்தை இன்று (செவ்வாய்கிழமை) முற்றுகையிட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகின்றன. ரயில் மறியல், பேரணி என பெரிய அரசியல் கட்சிகள் முதல் சிறிய அமைப்புகள் வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இன்று இரவு நடக்க இருக்கும் ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிராக போராட்டம் நடத்த அமைப்புகள் அணி திரண்டு வரும் சூழ்நிலையில், தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்திற்கு மின்சாரம் தரக்கூடாது என்று நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
'தண்ணீர்... மின்சாரம்'
தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழ்த் தேசிய பேரியக்கம், மே 17, பெரியார் திராவிட விடுதலைக் கழகம், பச்சை தமிழகம், பல்வேறு விவசாய சங்கங்கள் என பல அமைப்புகள் இணைந்து காவிரி உரிமை மீட்புக் குழுவை உருவாக்கி இருந்தனர்.
தமிழகத்திற்கு தண்ணீர் மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் வழங்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிடப்போவதாக காவிரி உரிமை மீட்புக் குழுவினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி, இன்று காலை முதலே அணி அணியாய் நெய்வேலி நகரத்தில் விவசாயிகளும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரள தொடங்கினர்.
'பலத்த போலீஸ் பாதுகாப்பு'
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை ராமகிருட்டிணன், சுப. உதயகுமார், தியாகு உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் இந்த பேரணி செவ்வாய்ச்சந்தை, புதுக்குப்பம் ரவுண்டானா வழியாக நெய்வேலி அனல்மின் நிலையம் முன்பு உள்ள ஸ்க்யூ பாலத்தை சென்றடைந்தது.அதன் பின்னர் முற்றுகை போராட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நெய்வேலி அனல் மின் நிலையத்துக்குள் செல்வதை தடுக்கும் விதமாக நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பிற செய்திகள்:
- ‘சிரியா ரசாயன தாக்குதலுக்கு ஆதாரம் இல்லை‘: ரஷ்யா
- இமாச்சல்: பள்ளிப் பேருந்து பள்ளத்தில் சரிந்ததில் 23 குழந்தைகள் உள்பட 27 பேர் பலி
- காமன்வெல்த்: டேபிள் டென்னிஸ், பேட்மின்டனில் இந்தியாவுக்கு இரண்டு தங்கம்
- ஒரு தொலைக்காட்சித் தொடர் உருவாக்கிய துப்பாக்கி வீராங்கனை
- காவிரி: `ஸ்கீம்' என்ற வார்த்தையால் தொடரும் குழப்பம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்