மத அடிப்படைவாதத்தின் சோதனைக்களமாகும் கர்நாடக நகரம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சல்மான் ரவி
- பதவி, பிபிசி
வகுப்புவாத வன்முறைகளுக்கும், அசாதாரண சூழ்நிலைக்கும் கூடாரமாக விளங்கும் கர்நாடக மாநிலத்தின் தென்பகுதியிலுள்ள மங்களூரு நகரத்தின் பகுதிகள் மத அடிப்படைவாதத்தின் ஆய்வகமாகவும் மாறிவருகிறது.
இந்த பகுதியில் இந்துத்துவ அமைப்புகள் அதிகளவில் உள்ளதால் அவர்களின் மீதே பெரும்பாலான அவதூறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீராம் சேனா, பஜ்ரங் டால் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் போன்ற இந்துத்துவ அமைப்புகளின் மீது அதிகளவிலான அவதூறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
அடிப்படைவாதம், 'காதல் ஜிகாத்' மற்றும் 'நில ஜிகாத்தை' ஊக்குவிப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் மீதும், மதமாற்றத்தை மேற்கொள்வதாக கிறித்துவ அமைப்புகள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
இந்த பகுதியிலுள்ள அனைத்து அமைப்புகளும் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்துவதற்காக முயல்கின்றன.
கர்நாடக மாநிலத்தின் கடற்கரையோர பகுதிகளில் மதவாத அமைப்புகளுக்கிடையே நிலவும் அசாதாரணமான சூழ்நிலைக்கு நீண்டகால வரலாறு உள்ளது. இந்த நிலைப்பாடு 1960களில் தொடங்கியதாக சில வரலாற்றாசிரியர்களும், நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது தோன்றியதாக இன்னும் சிலரும் கூறுகின்றனர்.
1960களிலேயே இந்த பகுதியில் பசுவதை செய்வோர் மீதான தாக்குதல்கள் தொடங்கியதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அந்நேரத்தில்தான் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு இப்பகுதியில் தன்னுடைய ஆதிக்கத்தை அதிகரித்துக்கொண்டது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அதன் பிறகு ஹிந்து யுவ சேனா மற்றும் இந்து ஜக்ரன் வைதிகா போன்ற இந்துத்துவ அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.
குஜராத் கலவரத்திற்கு பிறகு, பஜ்ரங் தல் அமைப்பின் ஆதிக்கம் இப்பகுதியில் அதிகரித்தது. குஜராத்திலுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட கர்நாடகாவில் அதிகளவிலான முஸ்லிம்கள் உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கர்நாடகத்தின் 224 சட்டமன்ற தொகுதிகளில் 35இல் 20 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் முஸ்லிம்கள் உள்ளனர். மங்களூரில் அதிகளவிலான கிறித்துவர்கள் உள்ளதால் அது தென் இந்தியாவின் 'ரோம்' என்று கூறப்படுகிறது.
மதத்தின் பெயரில் இப்பகுதியில் மிகப்பெரிய போட்டி நிலவுகிறது. சில பகுதிகளில் கோயில்கள் மற்றும் மடங்களுக்கு இடையேயும், மற்ற சில பகுதிகளில் ஷியா மற்றும் சுன்னி முஸ்லிகளுக்கு இடையேயும் ஆதிக்கம் செலுத்துவதில் மோதல் நிலவுகிறது. குறிப்பாக, இந்த மோதல்கள் குறிப்பிடத்தக்க வன்முறைகளாகவும் உருவெடுத்துள்ளது.
மசூதிகளை யார் கட்டுப்படுவது என்பதில் ஏற்பட்ட சண்டை சில இளைஞர்கள் மருத்துவமனைக்கு செல்லுமளவுக்கு சென்றது.
மங்களூருவிலுள்ள தகவலறியும் உரிமை சட்ட ஆர்வலரான விநாயக் பாலிகாவின் சகோதரியான வர்ஷாவை சந்தித்தோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி மனுக்களை தாக்கல் செய்த தனது சகோதரர், ஒருநாள் தங்களது வீட்டின் வாசலிலேயே படுகொலை செய்யப்பட்டதாக அவர் கூறுகிறார்.
விநாயக் படுகொலை செய்யப்படுவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு, அப்பகுதியுள்ள கோயில் ஒன்றின் வரவு செலவு கணக்கை அளிக்க வேண்டுமென்று தகவலறியும் உரிமை சட்டப்படி அவர் கோரியிருந்ததாக கூறுகிறார் வர்ஷா.

பட மூலாதாரம், GOPICHAND TANDLE
தனது சகோதரர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவரென்றும், மேலும் அவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்படுபவர்களும் அதே கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் வர்ஷா கூறுகிறார்.
அடிப்படைவாதிகளுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வரும் சமூக சேவகராக நரேந்திர நாயக்கின் மீது பல மதவாத அமைப்புகள் குறிவைத்துள்ளன. அதனால், அவருக்கு உள்ளூர் நிர்வாகம் பாதுகாப்பு வழங்கியுள்ளது.
பிபிசியிடம் பேசிய அவர், தான் பிராமண சமூகத்தை சேர்ந்தவரென்றும், கோவாவில் போர்த்துக்கீசிய ராணுவத்தினர் தங்களது பேரரசை நிறுவியபோது, அங்கிருந்த பிராமணர்கள் மங்களூருக்கு வந்ததாகவும், அங்கேயே இருந்தவர்கள் கிறித்துவ மதத்திற்கு மாறுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
மேலும், அங்கேயே இருந்த பிராமணர்கள் கிறித்துவ மதத்திற்கு மாறினாலும் அதற்குரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்பதால், அவர்களுடைய வழிபாட்டு முறையும், கலாசாரமும் மாற்றமடையவில்லை. எனவே, மீதமிருந்த இந்துக்களும் அங்கிருந்து இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
தற்போது கடவுள் நம்பிக்கையற்றவராக உள்ள நாயக், மங்களூருவில் ஆபத்தான சூழலை எதிர்கொள்கிறார். பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலைசெய்யப்பட்ட பிறகு, நாயக்குக்கு இரண்டு ஆயுதம் ஏந்திய போலீசாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தலித்துகள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளை இலக்குவைத்து சங்கப் பரிவார் இயக்கங்கள் செயல்பட்டு வருவதுடன், தனது செல்வாக்கையும் அவை நிலைநாட்டியுள்ளதாக நாயக் கூறுகிறார்.
பாபர் மசூதி 1992இல் தகர்க்கப்பட்டபோது, இங்கிருந்து சென்ற தொண்டர்கள் தலித்துகள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்களாக இருந்தனர் என்றும், அதே நேரத்தில் மேல் சாதி தொண்டர்கள் மங்களூருலேயே கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
மோதல்கள் வன்முறையாக மாறும்போதெல்லாம் இதுபோன்ற இயக்கங்கள் தலித்துகள் மற்றும் மற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்களை அதில் முன்னிறுத்துவதாக நாயக் குற்றஞ்சாட்டுகிறார்.
கடற்கரையோர கர்நாடகம் ஏன் அடிப்படைவாதத்தின் ஆய்வகம் என்று அழைக்கப்படுகிறது? என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த ஜெகதீஷ் ஷெனாயிடம் கேட்டபோது, அதை ஏற்றுக்கொள்வதற்கு அவர் மறுத்துவிட்டார்.
பிபிசியிடம் பேசிய ஜெகதீஷ், தென் கர்நாடகாவை ஒட்டியுள்ள கேரளப் பகுதியில் அரேபிய நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் அனுப்பும் பணத்தின் உதவியோடு அங்கு இஸ்லாமிய இயக்கங்கள் நடத்தப்படுவதாகவும், குறிப்பாக பட்கல் என்ற பகுதியில் 'இஸ்லாமிய தீவிரவாதம்' வளர்ந்து வருவதாகவும் கூறுகிறார்.
பெண்கள் இப்பகுதியில் பாதுகாப்பாக இருக்க முடியாததிற்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு காரணமில்லை என்றும், மேலும் அப்பகுதியானதுகாதல் ஜிகாத், நில ஜிகாத்திற்கு மையமாக மாறிவருவதை தாங்கள் எதிர்த்து வருவதாகவும் ஜெகதீஷ் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அவர் அமைதி காத்தார்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பரப்புவதாக குற்றஞ்சாட்டப்படும் இஸ்லாமிய அமைப்புகளுள் ஒன்றான இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரான முகமது இல்யாஸ் தும்பே, இஸ்லாமிய அமைப்புகளின் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பப்பட்டு வருவதாக கூறுகிறார்.
"லவ் ஜிஹாத் மற்றும் நில ஜிகாத் அல்லது மாட்டிறைச்சி ஜிகாத் போன்ற வார்த்தைகள் சங்க பரிவாரத்தின் அகராதியிலேயே இருக்கின்றன. இதன் மூலம் அவர்கள் இளைஞர்களை தடுக்கிறார்கள் மற்றும் பதட்டமான சூழலை உருவாக்குகின்றனர்" என்று அவர் கூறுகிறார்.
கர்நாடக சட்டசபை தேர்தல்கள் மே மாதம் நடத்தப்பட உள்ள சூழ்நிலையில், அனைத்து கட்சிகளும் சாதி மற்றும் மதத்தின் பெயரில் வாக்குகளை கவர்வதற்கு முயல்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












