You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாளிதழ்களில் இன்று: ஜெயலலிதா, மருத்துவமனையில் என்னிடம் பேசினார் - பாதுகாப்பு அதிகாரி
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினத்தந்தி - 'ஜெயலலிதா, மருத்துவமனையில் என்னிடம் பேசினார்`
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா தன்னிடம் பேசியதாக பாதுகாப்பு அதிகாரி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த போலீஸ் அதிகாரி வீரபெருமாள், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜரானார். ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக போயஸ் கார்டனில் இருந்து அழைத்து சென்ற போது எங்கு இருந்தீர்கள்?, அன்றைய தினம் போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பது தெரியுமா?, ஜெயலலிதா மயங்கிய நிலையில் தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாரா? என்பது போன்று பல்வேறு கேள்விகளை வீரபெருமாளிடம் நீதிபதி ஆறுமுகசாமி கேட்டார். நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் வீரபெருமாள் பதில் அளித்தார் என்று விவரிக்கிறது அந்த செய்தி.
தி இந்து (ஆங்கிலம்) - 'ஃபேஸ்புக் போன்ற இந்திய சமூக ஊடகம்'
ஃபேஸ்புக் தொடர்பான கேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சையை தொடர்ந்து, 19 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ஃபேஸ்புக்குக்கு போட்டியாக இந்திய சமூக ஊடகம் ஒன்றை தொடங்க, தாம் நிதி அளிக்க தயாராக இருப்பதாக கூறி உள்ளார் என்று ’தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தினமணி: 'மதுரையில் தொடங்கிய நியூட்ரினோ மாதிரி ஆய்வு`
தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு தொடங்க எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதற்கான மாதிரி ஆய்வுகள் மதுரை அருகே நடைபெற்று வருகின்றன என்கிறது தினமணி நாளிதழ். `மதுரை வடபழஞ்சி நியூட்ரினோ திட்ட அலுவலகத்தில் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ மாதிரி ஆய்வு நடந்து வருகிறது. இங்கு அறிவியல் அலுவலர், செயல்திட்ட பொறியாளர்கள் உள்ளிட்டோர் தங்கி ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். திட்ட இயக்குநர் சென்னையிலிருந்து அடிக்கடி வந்து செல்கிறார்`என்று விவரிக்கிறது அந்த செய்தி.
தி இந்து (தமிழ்): ‘காங்கிரஸ் கட்சியும் அனலிடிகா வாடிக்கையாளர்`
காங்கிரஸ் கட்சியும் கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் வாடிக்கையாளர் என்று அதன் முன்னாள் ஊழியர் கிறிஸ்டோபர் வாக்குமூலம் அளித்துள்ளார் என்கிறது தி இந்து(தமிழ்) நாளிதழ் செய்தி.
"லண்டனை தலைமையிடமாகக் கொண்டு கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற அரசியல் பிரசார நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் பேஸ்புக்கில் இருந்து 5 கோடி பேரின் தகவல்களை திருடி அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக மக்களிடம் பொய்யான செய்திகளை வெளியிட்டு தாக்கத்தை ஏற்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. அதன் முன்னாள் ஊழியர் கிறிஸ்டோபர் பிரிட்டிஷ் புலனாய்வு குழுவிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கேம்பிரிட்ஜ் அனலிடிகாவுக்கு இந்தியாவில் அலுவலகங்கள் உள்ளன. எனது கணிப்புப்படி அந்த நிறுவன வாடிக்கையாளர்களில் காங்கிரஸ் கட்சியும் ஒன்று. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் பிரிட்டனின் பரப்பளவுக்கு இணையானவை. பல்வேறு மாநிலங்களில் கேம்பிரிட்ஜ் அனலிடிகாவுக்கு அலுவலகங்கள் உள்ளன. ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்." என்று விவரிக்கிறது அந்த செய்தி.
தொடர்புடைய செய்திகள்:
கறுப்புப் பணம் மீட்பு:
’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’: 'உயரும் சுங்க கட்டணம்`
தமிழகத்தில் உள்ள 22 டோல் பிளாசாக்களில் ஏப்ரல் முதல் சுங்க கட்டணம் உயர இருப்பதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள 20 டோல் பிளாசாக்களில் சுங்க கட்டணம் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர இருப்பதாக விவரிக்கிறது அந்த நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்