''பெரியார் சிலையை சிதைத்தவர்கள் முதுகெலும்பில்லாத கோழைகள்'': மு.க ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பெரியார் சிலை, அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெரியார் சிலையின் தலைப்பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து ஆலங்குடி காவல்நிலைய ஆய்வாளர் வைத்தியநாதனிடம் கேட்டபோது,''அடையாளம் தெரியாத நபர்களால் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. பொது சொத்தை சேதப்படுத்திய குற்றத்தின் கீழ் அவர்களைத் தேடி வருகிறோம்'' என்றார்.

பட மூலாதாரம், @mkstalin
இந்த பெரியார் சிலையை, திராவிட கழகத்தினரும், அப்பகுதி பொது மக்களும் இணைந்து நிறுவியுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்குமுன் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் பெரியாரின் மார்பளவுச் சிலை ஒன்று உள்ளது. அந்தச் சிலையை இருவர் சுத்தியல் கொண்டு தாக்கியதில் சிலையின் முகப் பகுதி சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த அந்த பகுதியில் இருந்த திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சிலையை உடைக்க முயன்றவர்களை பிடித்து , டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட இருவரில் முருகானந்தம் என்பவர் பா.ஜ.கவின் நகர பொதுச்செயலாளராக இருக்கிறார். மற்றொரு நபரின் பெயர் ஃப்ரான்சிஸ்.
பா.ஜ.கவின் தேசியச் செயலர் ஹெச். ராஜா, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைப்போல, தமிழகத்தில் நாளை பெரியாரின் சிலையும் உடைக்கப்படும் என்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட கருத்து தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் திருப்பத்தூர் சிலை உடைப்பு சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சில பகுதிகளில் நடைபெறும் சிலைகளை சேதப்படுத்தும் சம்பவங்களுக்கு பிரதமர் மோதி கண்டனம் தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
- `மகிழ்ச்சி` - எப்படி எப்போதும் ஃபின்லாந்து மக்களால் மகிழ்வாக இருக்க முடிகிறது?
- பரியேறும் பெருமாளும், கருப்பியும்: திரைப்பயணத்தை விவரிக்கும் மாரி செல்வராஜ்
- புதின் ஏன் சிரிக்கிறார்? : புதின் குறித்து கூகுளில் தேடப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்
- காத்திருந்து சாதித்த தினேஷ் கார்த்திக்: தோனியின் இடத்தை நிரப்புவாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












