பெரியார் சிலை விவகாரம்: பா.ஜ.கவின் சேதத் தடுப்பு முயற்சிகள் பலனளிக்குமா?
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்த பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் அகில இந்திய அளவில் பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், தமிழக பா.ஜ.க. சேதத் தடுப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பட மூலாதாரம், facebook/Dravidarkazhagam
பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென எச். ராஜா ஃபேஸ்புக்கில் பதிவிட்ட விவகாரம் நேற்று சர்ச்சையாக உருவெடுத்தவுடனேயே, இது அவரது தனிப்பட்ட கருத்து என பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
இந்த நிலையில், திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட திருப்பத்தூர் நகர் ஒன்றியச் செயலாளர் ஆர். முத்துராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். மேலும், தங்களுடைய கட்சி இம்மாதிரி நடவடிக்கைகளை ஏற்பதில்லை என்றும் எந்த தலைவரையும், எந்த சிலையையும் அவமதிப்பதை பாஜக கண்டிக்கிறது என்றும் தமிழிசை கூறியிருக்கிறார்.
பா.ஜ.கவின் பொதுச் செயலாளரும் தமிழகப் பொருப்பாளருமான பி. முரளிதர் ராவ், பெரியார் போன்ற போன்ற தலைவர்களை அவமதிக்கும், ஆத்திரத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை பா.ஜ.க. ஏற்கவில்லை. இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இது தொடர்பாக எச். ராஜா அளித்த விளக்கம் ஏற்கமுடியாதது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சித் தலைமை முடிவுசெய்யும் என்றும் கூறினார்.
நேற்று முதல் தொலைபேசி அழைப்புகளைத் தவிர்த்துவந்த எச். ராஜா இன்று செய்தியாளர்களிடம் பேசினார். தனக்குத் தெரியாமல் தன் ஃபேஸ்புக் அட்மின் அந்தக் கருத்தைத் தெரிவித்துவிட்டதாகவும் அதற்காக தான் மன்னிப்புக் கேட்பதாகவும் அந்த அட்மினை பணியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் ராஜா தெரிவித்தார்.

பட மூலாதாரம், H.RAJA / FACEBOOK
"பாரதீய ஜனதாக் கட்சிக்கு இது மிகப் பெரிய பின்னடைவுதான். இதிலிருந்து அவர்கள் மீள பல நாட்களும் பல நடவடிக்கைகளும் தேவைப்படும். ஆனால், அந்தக் கட்சி நினைத்தால் மாநிலத்தையே ஆத்திரமடையச் செய்ய முடியும் என்பதுதான் கவலையளிக்கும் விஷயம்" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.
பா.ஜ.க. தலைவர்கள் எச். ராஜாவின் கருத்திலிருந்து விலகி நின்றாலும் அவர் மீது இதுவரை கட்சி ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்கிறார் அவர். எச். ராஜா ஒரு இந்துத்துவத் தலைவரை இதுபோல பேசியிருந்தால், பா.ஜ.க. இதுபோல்தான் நடந்துகொள்ளுமா என்றும் கேள்வியெழுப்புகிறார் ரவிக்குமார்.
இந்த விவகாரத்தையடுத்து சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பா.ஜ.கவின் தலைமையகமான கமலாலயத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அந்த அலுவலகம் அமைந்துள்ள வைத்தியராமன் தெருவின் இரு முனைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, உள்ளே செல்பவர்கள் விசாரணைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
"எச். ராஜா நீண்ட காலமாகவே இப்படிப் பேசிவருகிறார். வைகோவை தெருவில் நடமாட முடியாது என்று எச்சரித்தார். அப்போதெல்லாம் பெரிய எதிர்வினைகள் வராதது ஆச்சரியமாக இருந்தது. ஆனால், ஒட்டுமொத்தமாக எல்லாவற்றுக்கும் சேர்ந்து ஒரு எதிர்வினை உருவாகியுள்ளது. இது அந்தக் கட்சிக்கு பெரிய பின்னடவுதான். இம்மாதிரியான பேச்சுக்களை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான சிகாமணி.
இந்தக் கருத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லையென அக்கட்சித் தலைவர்கள் விலகிக் கொண்டாலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் அவர்.
இதற்கிடையில் கோயம்புத்தூரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தின் மீது இன்று (புதன்கிழமை) காலை 3.30 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த அலுவலகத்திற்கு பாதுகாப்பாக நின்ற காவலர், பெட்ரோல் குண்டை வீசிய மூன்று பேரை பார்த்ததாக தெரிவித்திருக்கிறார். இந்தக் காட்சி சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், எச். ராஜாவைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தி.மு.க., தி.க., தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளும் அமைப்புகளும் நடத்தின. பல இடங்களில் எச். ராஜாவின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












