நீரவ் மோதி மோசடி: வாராக்கடனாகிறாதா 8,000 கோடி ரூபாய்?

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து

பண உத்தரவாதக் கடிதம் மூலம் நீரவ் மோதி, மெகுல் சோக்சி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட 12,700 கோடி ரூபாய் கடனில் சுமார் 8,000 கோடி ரூபாய் அளவுக்கு வாராக்கடனாக வாய்ப்புள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் மொத்த பணத்தையும் வாராக்கடனாக அறிவிக்க வேண்டும். தற்போது 8,000 கோடி அளவிலான பணத்தை வாராக்கடனாக அறிவிக்கும் முயற்சியில் வங்கிகள் இறங்கியுள்ளன.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோதி மற்றும் அவரது உறவினர்கள் 12,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த வழக்கின் விசாரணைக்காக 31 பிற வங்கிகளின் தலைமை நிர்வாகிகளுக்கு மத்திய அமலாகத் துறை அதிகாரிகள் மற்றும் தீவிர மோசடி மற்றும் விசாரணை அலுவலக அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியுள்ளார்.

ஏக்சிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஷிகா சர்மா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சர் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டாலும் அவர்களது பிரதிநிதிகளே விசாரணைக்குச் சென்றனர்.

தினமணி

இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது கப்பற்படை பலத்தை சீனா அதிகரித்து வருவது குறித்தும், டோக்லாம் எல்லைப் பிரச்சனைக்கு பிறகு தனது ராணுவ மற்றும் விமானப் படை பலத்தையும் சீனா அதிகரித்து வருவது குறித்தும் தினமணி தலையங்கம் எழுதியுள்ளது.

2018-19ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 56% ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவிடப்படுவதாகவும், பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்துவதற்கான நிதி கடந்த ஏழு ஆண்டுகளில் 26%இல் இருந்து 18%ஆக குறைந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, அம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி உறுப்பினர்கள் மக்களவையிலும் செவ்வாயன்று அவையின் மையத்துக்கு சென்று குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: