You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலையை செவ்வாய்க்கிழமையன்று இரவு 9 மணியளிவில் உடைக்க முயன்றதாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக காவல்துறை தெரிவிக்கிறது.
திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் பெரியாரின் மார்பளவுச் சிலை ஒன்று உள்ளது. செவ்வாய்க்கிழமையன்று இரவு 9 மணியளிவில் அந்தச் சிலையை இருவர் சுத்தியல் கொண்டு தாக்கினர் என்று கூறப்படுகிறது. இதில் சிலையின் முகப் பகுதி சேதமடைந்தது.
இதனைப் பார்த்த அந்த பகுதியில் இருந்த திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சிலையை உடைக்க முயன்றவர்களை பிடித்து , டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட இருவரில் முருகானந்தம் என்பவர் பா.ஜ.கவின் நகர பொதுச்செயலாளராக இருக்கிறார். மற்றொரு நபரின் பெயர் ஃப்ரான்சிஸ்.
இந்த விவகாரம் தொடர்பாக திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இளங்கோ என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் பிடிபட்டவர்கள் குடிபோதையில் இருப்பதாக தெரிகிறது என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இருவரிடமும் காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 19 பெரியார் சிலைகளுக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பெரியார் சிலைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைப்போல, தமிழகத்தில் நாளை பெரியாரின் சிலையும் உடைக்கப்படும் என்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட கருத்து தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :