You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்
இலங்கை முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் நடந்த சிங்கள முஸ்லிம் வன்செயல்களை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை சந்திப்பு ஒன்றில் ஜனாதிபதியும், அமைச்சர்களும் இந்த முடிவை எடுத்ததாக அந்த சந்திப்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வரும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
பதற்றத்தை தணிக்க கூடிய வகையில் சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக கூறிய அவர், உடனடியாக போலிஸாரும் ராணுவத்தினரும் அதற்காக சேவையில் ஈடுபடுத்தப்படுவர் என்று கூறியுள்ளார்.
அவசரகாலநிலையை மேலும் நீடிப்பதா என்பது குறித்து 10ஆவது நாளில் ஜனாதிபதி அறிவிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
அம்பாறை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட போலீஸ் விசாரணைகளில் குறைப்பாடுகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பை சட்டமா அதிபரிடமும் போலீஸ்மா அதிபரிடமும் ஒப்படைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று (திங்கள்கிழமை) முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை அடுத்து கண்டி மாவட்டத்தில் நேற்று இரவு முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும், தாம் தங்கியிருந்த பகுதிகளின் மீது இரவு வேளையில் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பகுதி முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தாக்குதலில் குறைந்தபட்சம் மூன்று பள்ளிவாசல்கள், கடைகள், வீடுகள் உட்பட முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துக்கள் பல சேதமாக்கப்பட்டன அல்லது நிர்மூலம் செய்யப்பட்டன. பல சொத்துக்களுக்கு தீவைக்கப்பட்டது.
போலிஸ் ஊரடங்கு போடப்பட்ட போதிலும் தாம் தாக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அங்கு அச்சத்தில் உள்ளனர்.
இந்த தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட சில இடங்களில் போலிஸார் தவறுகளை விட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆகவே அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, இன்று அங்கு இராணுவத்தினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
நேற்று மாலை முதல், மாவட்டம் முழுவதும் அமலுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு காலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. ஆனாலும் திஹன மற்றும் பல்லேகல்ல ஆகிய போலிஸ் பிரிவுகளில் அந்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் வன்முறைச் சம்பவங்கள் பெரிதாக எங்கும் நடக்கவில்லையாயினும், மாலையில் நிலைமை எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் முஸ்லிம்கள் இருப்பதாக அந்தப் பகுதி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளதுடன், தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டம், ஒழுங்கு துறையை தனது பொறுப்பில் ஏற்ற பிறகு அவரது கட்சிக்கு பெருத்த ஆதரவை வழங்கி வரும் முஸ்லிம்கள் இரு இடங்களில் தாக்கப்பட்டமையால் பெரும் சவாலை எதிர்கொள்கிறார்.
கண்டி மாவட்ட நிகழ்வுகள் குறித்து பக்கசார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்,
தனது வீட்டை கூட்டம் தாக்கி எரித்ததை அடுத்து ஒரு முஸ்லிம் இளைஞர் மரணமானதாகவும் செய்திகள் கூறுகின்றன.
முன்னதாக வீதி விபத்து ஒன்றையடுத்து முஸ்லிம் இளைஞர்களால், சிங்களவர் ஒருவர் தாக்கப்பட்டு பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்தே இந்த வன்செயல்கள் ஆரம்பித்தன.
கண்டி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இளைஞர் மீது தாக்குதல்
அதேவேளை கிழக்கில் காத்தான்குடி, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை உட்பட முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் திஹன தாக்குதலை கண்டித்து இன்று முழுமையான கடையடைப்பு நடந்தது. முஸ்லிம்களுக்கு சொந்தமாக கடைகள் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
அக்கரைப்பற்றில் ஊர்வலமாக வந்தவர்கள் அங்கு வந்த தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கவே அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இராணுவத்தினரும் அங்கு ஸ்தலத்துக்கு உடனடியாக வந்தனர். இதனால் அங்கு சற்று பதற்றமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
ஏற்கனவே அட்டப்பள்ளம் என்னும் இடத்தில் இந்துக்களின் மயானம் ஒன்றை முஸ்லிம் ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படும் ஒரு பிரசனை தொடர்பில் தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அங்கு ஏற்கனவே ஏற்பட்டுள்ள பதற்ற நிலையில் இந்தச் சம்பவமும் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சமூக முக்கியஸ்தர்கள் பின்னர் சமரச முயற்சியில் ஈடுபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
இலங்கை ஜனாதிபதி அறிக்கை
இந்நிலையில், இதுதொடர்பாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த சில தினங்களாக அம்பாறை, கண்டி ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் ஏற்படுத்தியிருப்பதுடன் அப்பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக நாட்டில் குறிப்பாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுகின்ற ஒரு சூழல் உருவாகி இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
மேலும், "இந்த சம்பவங்கள் காரணமாக உயிரிழப்புக்களுக்கும் பொருள் இழப்புக்களுக்கும் முகம்கொடுத்த அனைத்துக் குடும்பங்களுக்கும் அவர்களது உறவுகளுக்கும்; எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன், மேற்கொள்ளப்பட்ட அனைத்து வன்முறைச் சம்பவங்களையும் இச்சந்தர்ப்பத்தில் நான் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் தற்போது மோதல் நிலை ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் 24 மணிநேரமும் பொலிஸ் ராணுவத்திரை கொண்டு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதர செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :