You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருச்சி நகரச் சாலைகளை வண்ணமயமாக்கும் இளைஞர்களின் முயற்சி
திருச்சி மாநகரை கண்கவரும் வகையில் அழகுபடுத்தும் வேலையில் இளைஞர்கள் சேர்ந்து முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
“தூய்மை இந்தியா திட்டத்தில்” திருச்சி மாநகரை இந்தியாவிலேயே முதலிடம் பெறச் செய்ய மாநகராட்சி நிர்வாகம் எடுத்துவருகின்ற பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
நகரை தூய்மைப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக அரசு பொதுச் சுவர்கள், சாலைத் தடுப்புகளை வண்ணமயமாக்கும் பணியினை இளைஞர்கள் தற்போது மேற்கொண்டு வருகிறார்கள்.
பொதுவாக, தமிழகத்திலுள்ள கிராமம், நகரம், மாநகரம் என்று அரசு பொதுச் சுவர்கள் காணப்படும் இடம் எல்லாம், கட்சித் தலைவர்களின் பிறந்தநாள், பொதுக்கூட்டங்கள், தேர்தல்கள் போன்ற சமயங்களில்தான் பல வண்ணங்களில் ஜொலிப்பதை பார்த்திருக்கிறோம்.
ஆனால், தாங்கள் வசிக்கின்ற மாநகராட்சி “தூய்மை இந்தியா திட்டத்தில்” முதலிடம் பெற வேண்டும் என்ற உணர்வோடு திருச்சியை சேர்ந்த இளைஞர்களும், இளம் பெண்களும் தூரிகை பிடித்து மாநகராட்சி சாலைகளின் தடுப்பு சுவர்களை வண்ணமயமாக்கி ஜொலிக்க செய்திருக்கிறார்கள்.
திருச்சி தலைமை தபால் நிலையம் தொடங்கி எம்.ஜி.ஆர் ரவுண்டானா வரை உள்ள சாலைத் தடுப்புச்சுவர்களில், திருச்சியை சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இவர்கள் தீட்டிய பச்சை, மஞ்சள் வண்ணங்கள் போன்ற பார்வைக்கு இதமான வண்ண ஓவியங்கள் அப்பகுதியை மிக அழகாக்கியுள்ளன.
திடக்கழிவுகளை கையாள திடமான திட்டம்: முன்னுதாரணமாக திருச்சி மாநகராட்சிஇது குறித்து பொதுமக்களில் ஒருவர் கூறுகையில், " இளைஞர்களின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இளைஞர்களிடம் தற்போது சமூக அக்கறை மேலோங்கியுள்ளதைதான் இது போன்ற செயல்கள் எடுத்துக்காட்டுகின்றன” என்றார்.
“சாலைகளில் செல்லும்போது கறுப்பு, மஞ்சளை மட்டுமே கண்ட கண்களுக்கு, சாலைத் தடுப்புச் சுவர்கள் பச்சை, மஞ்சள் பட்டாம்பூச்சிகளாய் மாறியிருப்பது கண்களை கவரும் வண்ணம் உள்ளது", என்று அவர் மேலும் கூறினார்.
`தூய்மை நகர்` பட்டத்தை நோக்கி செல்லும் திருச்சி
"எங்களின் இந்த முயற்சி திருச்சியின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளான தலைமை தபால் நிலையம் தொடங்கி, எம்.ஜி.ஆர் ரவுண்டானா வரையிலான சாலைகளில் உள்ள தடுப்புச் சுவர்களில் அழகுபடுத்துவதாகும்” என்கிறார் இப்பணியில் ஈடுபட்ட அக்ஷயா.
“இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததோடு, பெயிண்ட்களும் வாங்கி தந்து எங்களை ஊக்கப்படுத்தினர். பகல் நேரங்களில் இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகம். எங்களின் பணியால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படக் கூடாதென வார விடுமுறை தினங்களில் இரவு நேரத்தில் 30-க்கும் அதிகமான தன்னார்வலர்களோடு இணைந்து அழகுபடுத்தும் பணியில் ஈடுபட்டோம்" என்று அக்ஷயா கூறினார். வண்ணம் தீட்டிய இடங்களில் யாராவது சுவரொட்டி (போஸ்டர்) ஒட்டுகிறார்களா, அசுத்தப்படுகிறார்களா என்று மாநகராட்சி பணியாளர்கள் கண்காணிப்பார்கள். யாராவது சுவரொட்டி ஒட்டினால், அப்புறப்படுத்தப்படும்.
அதன் பிறகும் அசுத்தப்படுத்தப்படுவது தொடர்ந்தால், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நகரின் அனைத்து வார்டுகளிலும் சுத்தமாக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
விரைவில் திருச்சியை நாடே திரும்பி பார்க்கும். திருச்சியின் தூய்மை, திசை எங்கும் எட்டும் என்று பெருமிதத்துடன் தெரிவிக்கிறார் மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன்.
2017 ஜல்லிக்கட்டு போராட்டம்: அமைதியாக முடிக்கச் செய்த போலீஸ் அதிகாரி
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்