You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திடக்கழிவுகளை கையாள திடமான திட்டம்: முன்னுதாரணமாக திருச்சி மாநகராட்சி
திடக்கழிவுகளை கையாள்வது தமிழகத்தின் ஒவ்வொரு மாநகராட்சிக்கும் இன்றைய பொழுதில் பெரிய சவாலாகிவிட்டது. ஆனால், திருச்சி மாநகராட்சியோ திடக்கழிவு மேலாண்மைக்காக செயல்திறன்மிக்க ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி ஆக்கப்பூர்வமாக இச்சவாலை எதிர்கொண்டு வருகிறது.
திருச்சி மாநகராட்சி தமிழகத்தின் மையப் பகுதி. 9 லட்சம் மக்கள் தொகையை கொண்டுள்ள இம்மாநகராட்சியில், தினசரி 710 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு வருடத்திற்கு முன்பு வரை, இவை அனைத்தும் அரியமங்கலம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தன.
சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து 100 டன் குப்பைகள் மட்டும் அருகில் உள்ள 7 ஏக்கரில் செயல்பட்டு வரும் உரம் தயாரிக்கும் நிறுவனத்தால் வாங்கிக்கொள்ளப்படும். இதன் மூலம் 25 டன் உரம் தினசரியாக தயாரிக்கப்பட்டு வந்தது. மக்காத நெகிழி கழிவுகள் மீண்டும் குப்பை கிடங்கிற்கே சென்று விடும்.
தொடர்ந்து கொட்டப்பட்டு வந்த குப்பைகளால், குப்பை கிடங்கு மலை போல் காட்சியளிக்கத் தொடங்கியது. மேலும், அதிக வெப்ப அளவு நிலவும் காலங்களில், குப்பைகளில் இருந்து வெளிவரும் வாயுவால், தீ விபத்துக்களும் அதிகம் நேரிட தொடங்கிவிட்டன.
ஒரு காலத்தில் திருச்சி மாநகரத்தின் மைய பகுதியில் இருந்து அரியமங்கலம் தொலைவில் இருந்ததாலும், மக்கள் தொகை அப்பகுதியில் குறைவாக இருந்ததாலும், குப்பை கிடங்கு அங்கு அமைக்கப்பட்டது. ஆனால் நாளடைவில் அரியமங்கலத்திலும் குடியிருப்புக்கள் அதிகமாக தொடங்கிவிட்டன. அதனால்,குப்பை கிடங்கில் நிகழும் தீ விபத்துக்களின் போது வெளிவரும் கடும் புகையால், அருகாமையில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்காளாகி வருகின்றனர்.
இது ஒரு பிரதான காரணமாக இருக்க, நிலத்தடி நீர் மாசடைதல், துர்நாற்றம், குழந்தைகளுக்கு சுவாச கோளாறுகள் என அடுக்கடுக்காக காரணங்களை முன்வைத்து குப்பை கிடங்கை அப்பகுதியில் இருந்து வேறு மாற்ற வேண்டும் என மக்கள் தங்களது எதிர்ப்பு குரலை பதிவு செய்ய துவங்கி விட்டனர்.
இதனை சமாளிக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்தது. அதாவது, திருச்சி மாநகரம் முழுவதிலும், 18 நுண்ணுரம் செயலாக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்டோன்மெண்ட், காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் என்பன உள்ளிட்ட 18 இடங்களில் செயல்பட்டு வரும் இம்மையங்களால், அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு செல்லும் குப்பை அளவு சற்று குறைந்துள்ளது.
தினசரி சேகரிக்கப்படும் 710 டன் குப்பையில், 75% மக்கும் குப்பைகள். இம்மையங்களின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் அனைத்தும் உரமாக இம்மையங்களில் மாற்றப்படுகின்றன. இப்பணியை மேற்கொள்ள 300 க்கும் மேற்பட்ட சுய உதவி குழு பெண்கள் வேலை செய்துவருகின்றனர்.
நுண்ணுரம் செயலாக்க மையத்தின் செயல்பாடு
தினசரியாக மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சிறிய ரக சரக்கு வாகனங்களில் சென்று வீடு வீடாக குப்பைகளை சேகரிக்கின்றனர். இவை அனைத்தும் நுண்ணுர செயலாக்க மையங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. முதலில் குப்பைகள், மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டாக தரம்பிரிக்கப்படுகின்றன.
மக்கும் குப்பைகள் அனைத்தும் ஒரு அரவை இயந்திரத்திற்குள் போடப்பட்டு, சிறு துகள்களாக மாற்றப்படுகின்றன. இத்துகள்கள், அங்கு அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன. 15 நாட்களுக்கு ஒரு முறை, துகள்களை கிளறி மாட்டு சாண தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
இது நாளடைவில் உரமாக மாறி, விவசாயிகளுக்கும், மரம் வளர்க்கும் சமூக ஆர்வலர்களுக்கும் பொதுமக்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் அனைத்தும் உரமாக மாற்றப்படுவது ஒரு புறம் இருக்க, மக்காத குப்பைகள் மீண்டும் இரண்டாக தரம்பிரிக்கப்படுகின்றன. பால் கவர்கள், நெகிழி பைகள் என விற்க முடிந்தவை அனைத்தும் ஒரு பிரிவாகவும், விற்கமுடியாத குப்பைகள் அனைத்தும் மற்றொரு பிரிவாகவும் உள்ளன.
இதில் விற்கப்படும் குப்பைகளை விற்று, அதன்மூலம் வரும் பணம், மையங்களில் பணிபுரியும் சுய உதவி குழு பெண்களுக்கு பிரித்து வழங்கப்படுகின்றது. விற்க முடியாத குப்பைகள், மீண்டும் அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கே எடுத்து செல்லப்படுகிறது.
திருச்சி- தஞ்சை சாலையில் உள்ள பூக்கொல்லை எனும் இடத்தில் முதல் நுண்ணுர செயலாக்க மையம் துவங்கப்பட்டது. அதன் பிறகு மூன்று மையங்கள் திறக்கப்பட்டன. மையங்களின் செயல்பாடு சிறப்பாக இருந்ததால், தொடர்ந்து 15 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு தங்கப்பரிசு
இத்திட்டம் மேலும் சிறப்பாக செயல்பட பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என கருதிய திருச்சி மாநகராட்சி நிர்வாகம், கடந்த ஜூன் 5 ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே மக்கும் குப்பைகளையும் மக்காத குப்பைகளையும் தரம் பிரித்து இரண்டு தொட்டிகளில் கொடுக்க வேண்டும்.
மக்கும் குப்பைகளை தினசரியாக மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் பெற்றுக்கொள்வார்கள் எனவும், மக்காத குப்பைகளை புதன்கிழமையன்று மட்டும் தர வேண்டும் எனவும் கூறியிருந்தது. மேலும் பொதுமக்களை ஊக்கப்படுத்த, ஒரு படி மேலே சென்று முறையாக குப்பைகளை தரம் பிரித்து வழங்குபவர்கள் தங்களது புகைப்படத்தை மாநகராட்சி தொடர்பு எண்ணிற்கு அனுப்பினால், அதில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் மூன்று நபர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் மக்களது பங்களிப்பையும் ஆதரவையும் பெற்ற மாநகராட்சி நிர்வாகம், இத்திட்டத்தை ஒவ்வொரு வார்டிற்கும் விரிவு படுத்தும் முனைப்போடு உள்ளது. விரைவாக பணிகள் நடப்பின், அடுத்த ஆண்டிற்கான தூய்மை நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகரம் முதல் இடத்தை பெறும் முனைப்பில் உள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்