You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"இனி வெற்றிடத்துடன்தான் வாழ வேண்டும்" - உருகும் ஸ்ரீதேவியின் மகள்
தாயில்லாமல் வெறுமையுடன் வாழவேண்டும் என்று மனம் கலங்குகிறார் ஸ்ரீதேவியின் மகள் ஜானவி கபூர். அவரது பதிவு படிப்பவர்களின் மனதை உருக்குவதாக இருக்கிறது.
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் அகால மரணம் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியது என்றால் அவரது குடும்பத்தினரின் துயரோ அளவிட முடியாதது. ஸ்ரீதேவி பயன்படுத்தி வந்த ட்விட்டர் பக்கத்தில் அவரது கணவர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார். தோழி, மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு தாயான ஒருவரை இழந்து நிற்பதன் வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜானவி கபூர் தனது இன்ஸ்ட்ராகாமில் தாயைப் பற்றி பகிர்ந்துக் கொண்ட செய்தி உருக்கமானதாக இருக்கிறது.
துபாயில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அதுவே அவர் கலந்துகொண்ட இறுதி நிகழ்வாகவும் ஆகி போனது. பிப்ரவரி 25ஆம் தேதியன்று காலமான ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்குகள் 28ஆம் தேதியன்று நடைபெற்றன.
ஸ்ரீதேவி தனது புகைப்படத்தையும், மகள் ஜானவியின் புகைப்படத்தையும் அடிக்கடி இன்ஸ்ட்ராகாமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஜானவி திரைப்படங்களில் அறிமுகமாகுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார் ஸ்ரீதேவி.
தாயின் மறைவுக்கு பிறகு முதன்முறையாக அவரது மகள் ஜானவி பொதுத்தளத்தில் தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
தங்கள் குடும்பத்தின் ஆணிவேராக இருந்த தாய், தனக்கு மிகவும் நெருங்கிய தோழியாகவும் இருந்ததாக தனது பதிவில் ஜான்வி கூறியிருக்கிறார்.
''எனது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அம்மா இல்லாததால் ஏற்பட்டிருக்கும் சங்கடமான வெற்றிடத்தை மனது அதிகமாக உணர்கிறது. ஆனால், அம்மா இல்லாத வெற்றிடத்துடன்தான் இனிமேல் வாழப் பழகவேண்டும். அது எப்படி என்று புரியவில்லை. அம்மா, உன்னை நான் இப்போதும் உணர்கிறேன். இந்த துக்கத்தில் இருந்தும், வலியில் இருந்தும் நீ தான் என்னை பாதுகாக்கிறாய் என்று நம்புகிறேன். என் கண் இமைகள் மூடும்போதெல்லாம் உன்னுடனான சிறந்த நினைவுகளே விரிகிறது. இது அனைத்தையும் செய்வது நீயே என்று எனக்கு தெரியும் அம்மா.''
''எங்கள் வாழ்க்கையின் வரம் நீ. உன்னுடன் நாங்கள் வாழ்ந்த காலங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை. ஆனால் இப்போது இந்த உலகத்திற்கு மட்டுமே நீ இல்லை, நீ மிகவும் நல்லவள், பவித்ரமானவள், அன்பே உருவானவள். அதனால்தான் கடவுள் உன்னை மீண்டும் அழைத்துக் கொண்டார். ஆனால், உன்னை சிறிது காலத்திற்காவது அவர் எங்களுடன் விட்டு வைத்தாரே.''
''நான் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக எனது நண்பர்கள் சொல்வார்கள். என் மகிழ்ச்சிக்கு காரணம் நீ தான் என்று. இப்போதுதான் புரிகிறது. யார் என்ன சொன்னாலும் கவலைப்பட மாட்டேன், எந்தவொரு பிரச்சனையும் பெரிதாக தோன்றியதே இல்லை, கவலைப்பட்டதும் இல்லை. ஏனெனில் நீ என்னுடன் இருந்தாய். என்னை மிகவும் நேசித்தாய், எனக்கு எப்போதும் நீ தேவைப்பட்டாய். நீ என்னுடைய ஆத்மாவின் அங்கம், என்னுடைய மிகச் சிறந்த தோழி, எனக்கு எல்லாமாக இருந்தாய். உன்னுடைய வாழ்க்கை முழுவதும் மற்றவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தாய். அம்மா, நானும் உன்னைப் போலவே இவை அனைத்தையும் செய்ய விரும்புகிறேன்.''
''உனக்கு பெருமை சேர்க்க விரும்புகிறேன். நான் செய்யும் செயல்களைப் பார்த்து நீ பெருமைப்படும் செயல்களையே செய்யவேண்டும் என்ற நம்பிக்கையுடனே நான் தினசரி கண்விழிப்பேன் என்று சத்தியம் செய்கிறேன். ஏனெனில் நீ இங்கு இருப்பதை என்னால் உணர முடிகிறது. நீ, என்னுடன், அப்பாவுடன், குஷியுடன் ஒன்றாக கலந்து ஐக்கியமாகி இருக்கிறாய். உன்னுடைய அடையாளமாக எங்களை விட்டு சென்றுவிட்டீர்கள். உங்களுடைய வழிகாட்டுதல் எங்களை வழிநடத்த போதுமானதாக இருக்கலாம், ஆனால், நீ இல்லாமல் நான் எப்போதும் நிறைவாக இருக்க முடியாது.''
''அம்மா, நான் உன்னை நேசிக்கிறேன், என்னுடைய எல்லாமே நீ தான்''.
இதர செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :