You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எங்கள் குடும்பத்தின் அச்சாணி ஸ்ரீதேவி - போனி கபூர் உருக்கம்
ஸ்ரீதேவியின் உடல் நேற்று மும்பையில் தகனம் செய்யப்பட்ட நிலையில், அவரது கணவர் போனி கபூர் உருக்கமான கடிதம் ஒன்றை ஸ்ரீதேவி பயன்படுத்தி வந்த ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது
தோழி, மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு தாயான ஒருவரை இழந்து நிற்பதன் வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்றும், தங்களுடன் உறுதுணையாக இருந்த ஸ்ரீதேவியின் எண்ணிலடங்கா ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்வதாகவும் போனி கபூர் கூறியுள்ளார்.
முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு நன்றி
தனது முதல் மனைவிக்கு பிறந்த பிள்ளைகளை பற்றி குறிப்பிட்ட போனி கபூர், ''இதுபோன்ற ஒரு சூழலில் எனக்கும், ஜான்வி மற்றும் குஷி ஆகியோருக்கும் ஆதரவாக இருந்த அர்ஜூன் மற்றும் அனுஷுலாவுக்கு நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதேவியின் பிரிவு தரும் வலியை ஒரே குடும்பமாக எதிர்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகள்களுக்கு எல்லாமுமாக இருந்த ஸ்ரீதேவி
உலகத்தை பொறுத்தவரை ஸ்ரீதேவி அவரது ரசிகர்களுக்கு 'சாந்தினி' ஆகவும், ஒரு தலைசிறந்த நடிகராகவும் திகழ்ந்தார் ஆனால் தனக்கு ஸ்ரீதேவி ஒரு காதலியாகவும், தோழியாகவும், தனது பிள்ளைகளுக்கு தாயாகவும், துணைவியாகவும்தான் தெரிந்தார் என்று போனி கபூர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதேவியை மையமாக வைத்து தனது குடும்பம் இயங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
எங்களை தொந்தரவு செய்யாதீர்கள்!
ஸ்ரீதேவிக்கு பிரியாவிடை தந்துள்ளோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ள போனி கபூர், தங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் இருப்பதாகவும், தனிமையில் வருந்துவதற்கான தேவை இருப்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ள போனி கபூர், ஸ்ரீதேவி குறித்து பேச வேண்டுமானால் அவர் குறித்த உங்களது சிறப்பான நினைவலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.
முன்புபோல எங்கள் வாழ்வு இருக்காது
தன்னுடைய ஒரே கவலை ஸ்ரீதேவி இல்லாமல் தனது மகள்களையும், வாழ்க்கையும் எப்படி முன்னெடுத்து செல்வது என்பதுதான் என்றும், ஸ்ரீதேவியை அளவுகடந்து நேசிப்பதாகவும் போனி கபூர் உருக்காமாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்