You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#WeMetOnTwitter ட்விட்டரில் சந்தித்து காதல் கொண்டவர்களின் நினைவுகள்
தொலைத் தொடர்புப் புரட்சி தோன்றுவதற்கு சிறிது காலம் முன்பு கூட பார்க்காமலே கடிதம் மூலம் காதல் கொண்ட ஒரு கதை தமிழ்த் திரைப்படத்தின் வெற்றிக் கதையானது.
எந்தக் கொம்பையும் பற்றிக் கொண்டு மேலே ஏறிவிடுகிற கொடியைப் போல காதலும், மாறுகிற யுகத்தில் புதிய ஊடகங்களைப் பற்றி படர்ந்து தமது ஆசை மனத்தைப் பற்றிக்கொள்கிறது.
ஆனால், அன்னத்தைத் தூது விட்ட காவியக் காலம் போலவோ, கடிதம் மூலம் தூது விட்ட 'கருப்பு வெள்ளை'க் காலத்தைப் போலவோ, வண்ணப் படங்கள் புதிதாகத் தோன்றிய வசந்த காலம் போலவோ, நவீன யுகக் காதலர்கள், ஒரு வார்த்தை பேச ஒருவருடமெல்லாம் காத்திருக்கத் தேவையில்லை இப்போது.
செல்பேசியில் அவர்கள் பதிவிடும் உணர்வுகள் அவர்கள் நேசிக்கும் இதயத்தை ஒரு நொடியில் சென்று சேர்ந்துவிடுகின்றன.
ஒருவரின் பின்னணியையும், உண்மை நிலையையும் ஆராய்ந்து பாராமல் மாய வலையில் சிக்கும் அபாயம் சமூக வலைத்தளத்தில் இருப்பது ஒருபுறம் உண்மைதான்.
ஆனால், கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்துதான் காதல் கொள்ளவேண்டிய தேவை இன்றைய இளைஞர்களுக்கு இல்லை. சந்தித்து, சிந்தித்து, உரையாடி கதை பேசி, ஆற அமர தம் காதலைத் தேர்வு செய்து, பதற்றமின்றி அதை வெளிப்படுத்தி, நிதானமாக கரம் கோர்க்கும் வாய்ப்பையும் சமூக தளங்கள் உருவாக்கித் தந்துள்ளன.
தம் காதலை ட்விட்டர் தளம் மூலம் கண்டடைந்த வெற்றிகரமான காதலர்கள், காதலர் தினமான இன்று அதை நினைவு கூறும் விதமாக #WeMetOnTwitter என்ற ஹேஷ் டேக் இட்டு தங்கள் இனிய சந்திப்புகளை, அதன் நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
காதலர் தினத்தை ஒட்டி, அதனை கொண்டாடும் விதத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது ட்விட்டர் தளம்.
அதில், ட்விட்டர் தளம் மூலம் உங்கள் நண்பரையோ, துணையையோ, தொழில் ரீதியிலான நண்பர்களையோ அல்லது பிற நபர்களையோ நீங்கள் சந்தித்திருந்தால் உங்கள் கதையை இங்கு தெரியப்படுத்துங்கள் என்று கூறியிருந்தது.
மேலும், அவ்வாறு பதியப்படும் ட்வீட்களில் சிறப்பானவற்றை தேர்வு செய்து அவற்றுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ட்விட்டர் பயன்பாட்டாளர்களுக்கு காட்டப்படும் என்று தெரிவித்திருந்தது.
ட்விட்டரின் அறிவிப்பையடுத்து, பல பயன்பாட்டாளர்கள் ட்விட்டர் மூலம் தங்கள் வாழ்வில் நடைபெற்ற அழகிய தருணங்களை பகிர்ந்து கொண்டனர்.
சர்தார் என்ற பயன்பாட்டாளர், ''நான் அவளது ட்விட்டர் பக்கத்திலிருந்த ஒரு வார்த்தையை குறிப்பிட்டு சந்தேகம் கேட்டேன். அப்படி தொடங்கிய எங்கள் நட்பு ஆறு மாதங்கள் கழித்து அவளுக்கு மோதிரம் அணிந்து என்னவளாக்கிக் கொண்டேன். என்னை காதலிக்க அனுமதித்தற்கு நன்றி'' என்று கூறி அவரது துணைவியை டேக் செய்திருந்தார் அவர்.
''மூன்றாண்டுகளுக்குமுன் ட்விட்டர் மெசேஜ்ஜில் இருவருக்குமான நட்பு தொடங்கியது. ஒன்றரை வருட காத்திருக்குப்பிறகு நேரில் சந்தித்து கொண்டோம். என்னுடைய 25வது பிறந்தநாள் நாங்கள் சந்தித்து கொண்டோம். தற்போது, நிச்சயம் முடிந்துவிட்டது. அடுத்த வருடம் திருமணம்.'' என்று கூறி இரு புகைப்படங்களை பதிந்துள்ளார் பயன்பாட்டாளர் பிரியாந்தன்.
பலரும் தங்களது காதல் கதைகளை ட்விட்டரில் செதுக்கிக் கொண்டிருக்க, வழக்கம்போல் ட்விட்டரின் இந்த அறிவிப்பு குறித்த மீம்களும், நையாண்டி கருத்துகளும் இடம்பெற்றிருந்தன.
''தயவு செய்து இதை நிறுத்துங்கள். இந்த தளம் சண்டைபோடுவதற்கும், வெறுப்பை பகிர்வதற்கு மட்டுமே. இதன் புனிதத்தை கெடுக்க வேண்டாம்'' என்று ராகுல் ரோஷன் என்ற பயன்பாட்டாளர் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.
#WeMetOnTwitter ஹேஷ்டேக் பதிவுகளை கிண்டல் செய்து இடப்பட்ட சில நக்கல் பதிவுகள் இதோ...
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :