You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாதம்விவாதம்: பெண் சிசுக் கொலை நிலவ என்ன காரணம்?
பாலினத் தேர்வு செய்து ஆயிரக்கணக்கில் கருக்கலைப்பு செய்ததாக திருவண்ணாமலையில் 3 ஸ்கேன் மையங்கள் மற்றும் ஒரு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து, பெண் சிசுக்கொலையை தடுப்பதற்கு அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லையா? பெண் குழந்தைகளின் மீதான சமூகத்தின் பார்வை மாறவில்லையா? என்று பிபிசி தமிழின் வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நேயர்களின் கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
"பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்து உள்ளதால் பெற்றோர்கள் பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கு பயப்படுகிறார்கள் ,அதனால் தான் பெண் சிசு கொலை பெற்றோர்களின் உதவியோடு நடைபெறுகிறது ,பெண் சிசு கொலையை தடுக்க வேண்டும் என்றால் இந்திய நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பை அரசுகள் பலப்படுத்த வேண்டும்" என்பது புலிவலம் பாட்ஷாவின் கருத்து.
சக்தி சரவணன் சொல்கிறார், "பெண் சிசுக்கொலை தடுப்பதற்காகத் தமிழக அரசு வகுக்கும் (தொட்டில் குழந்தை திட்டம் உட்பட) பல முன்னோடி நலத்திட்டங்களானது செயல்படுத்தல், விரிவுபடுத்தல், மேம்படுத்தலில் உள்ள பல சிக்கல்களின் காரணமாக காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போய்விடுகிறது. இந்நவீன கால சமூகத்தில் ஒரு பெண் குழந்தையின் கருத்தரிப்பு, பிறப்பு, படிப்பு, தொழில், திருமணம், பொது தனி வாழ்வில் சமநிலை போன்றவற்றுக்கு இன்னமும் போராட வேண்டிய சூழலில் இருப்பதைக் காணும் பொழுது பாரதி, காந்தி, பெரியார் போன்றோரின் கனவினை, கருத்துக்களைப் பெண் குழந்தை என்றால் செலவு, பாதுகாப்பின்மை போன்ற மடமை கருத்தியல் வீழ்த்திவிட்டதோ என்ற ஐயம் எழுகிறது." என்கிறார்.
ரமேஷ் சுப்பிரமணியி கருத்து: "மாற வேண்டியது மக்கள்! இந்த காலத்திலும் பெண் குழந்தைகளை கருவில் அழிக்கும் செயலை செய்து வரும் அறிவற்ற மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும்... திரைப்படங்கள் பல எடுத்தாலூம் இது போன்ற மக்களை திருத்த முடியவில்லை என்றால் அது வெட்கக்கேடு."
"பெண் சிசு கொலையை தடுப்பதற்கு தான் சட்டம் இயற்றி உள்ளது அரசாங்கம் எனவே பெண் குழந்தைகள் மீது அக்கறை இல்லை என்று சொல்ல முடியாது. இந்த விவகாரத்தில் அரசு போதுமான நடவடிக்கை எடுத்து வருவது தான் உண்மை. ஆனால் சமூகத்தின் பார்வை தான் இன்னும் மாறவில்லை. தனக்கு ஆண் குழந்தை பிறந்ததை பெருமையாக நினைக்கும் சமூகம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது." என்கிறார் முத்துச்செல்வம்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :