பயன்படுத்தப்படாத சிறுநகர விமான நிலையங்களை இணைக்க பட்ஜெட்டில் திட்டம்

பட மூலாதாரம், Getty Images
ஆண்டுக்கு 100 கோடி பயணங்களை கையாளும் திறனை உருவாக்கும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களின் திறன் ஐந்து மடங்குக்கும் மேல் விரிவுபடுத்தப்படும் என்று இந்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
என்.ஏ.பி.எச். நிர்மான் என்ற திட்டத்தின் கீழ் இந்த விரிவாக்கம் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். மேலும், உடான் எனப்படும் பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் 56 பயன்படாத விமான நிலையங்களும், 31 பயன்படாத ஹெலிபேடுகளும் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சி
321 கோடி மனித நாள்கள் வேலைவாய்பை உருவாக்குவதற்காகவும், ஊரகப் பகுதியில் உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்தவும் 14.34 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊரகப் பகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதாக இந்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
3.17 லட்சம் கி.மீ. சாலைகள், 51 லட்சம் புதிய வீடுகள், 1.88 கோடி கழிப்பறைகள், 1.75 கோடி வீடுகளுக்கு மின் இணைப்புகள் போன்றவற்றை ஏற்படுத்துவதற்கு இந்த மூலதனம் பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்துக்குகான ஒதுக்கீடு ரூ.4,500 கோடியில் இருந்து, 5,750 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
உணவு பதப்படுத்தல் துறைக்கான ஒதுக்கீடு 715 கோடியில் இருந்து 1,400 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய மூங்கில் திட்டத்துக்கு ரூ.1,290 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
22,000 ஊரக சந்தைகள் மேம்படுத்தப்பட்டு ஊரக வேளான் மார்க்கெட்டுகளாக ஆக்கப்படும்.
மக்கள் நலவாழ்வு, கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைகளுக்கான ஒதுக்கீடு 1.38 லட்சம் கோடி.
ஒட்டுமொத்தமாக உள்கட்டமைப்புத் துறைகளுக்கான ஒதுக்கீடு ரூ.5.97 லட்சம் கோடி. பத்து முக்கியத் தலங்கள் சுற்றுலா மையங்களாக மேம்படுத்த முடிவு.
நிதி ஆயோக் தேசிய செயற்கை நுண்ணறிவு திட்டம் ஒன்றைத் தொடக்கும்.
வரவும் பற்றாக்குறையும்

பட மூலாதாரம், Getty Images
மத்திய பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ள 2018-19ம் ஆண்டுக்கான வரவு பற்றாக்குறைப் பட்டியல்:
வருவாய் வரத்து- ரூ. 17,25,738 கோடி,
மூலதன வரத்து- 7,16,475 கோடி.
மொத்த வரத்து- 24,42,213 கோடி
வருவாய்ப் பற்றாக்குறை- 4,16,034 கோடி
நிதிப் பற்றாக்குறை - 6,24,276 கோடி.
கார்ப்பரேட் வரியில் சலுகை
தற்போது ஆண்டுக்கு ரூ.50 கோடி வரையில் வணிகம் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி விகிதம் 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை தற்போது ரூ.250 கோடி வரை வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.
தனிநபர் வருமான வரிவிதிப்புக்கான விலக்கு வரம்பு உயர்த்தப்படவில்லை. இது நடுத்தர வர்க்கத்துக்கு பெரும் ஏமாற்றமாக மாறியுள்ளது.
அதே நேரம், ஊதியம் பெறும் வகுப்புக்கு போக்குவரத்து, மருத்துவ செலவினங்கள் திருப்பி அளிப்பது ஆகிய இனங்களை வரிவிதிப்பதற்கான வருவாயில் இருந்து விலக்குவதற்கான வரம்பு தற்போது ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
மூத்த குடிமக்களின் வங்கி, அஞ்சலக வைப்பு நிதியில் இருந்து வரும் வட்டிக்கான வருமான வரி விலக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மருத்துவச் செலவினங்கள், மருத்துவ இன்சூரன்ஸ் செலவினங்களுக்கான வரிவிலக்கு அளவு 80D பிரிவின் கீழ் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு சில குறிப்பிட்ட கொடுநோய்களுக்கான சிகிச்சைகளுக்கு செலவிடப்படும் தொகைக்கு வருமான வரி விலக்கு அளிப்பதற்கான வரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரொக்கப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் அறக்கட்டளைகள், நிறுவனங்கள் ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமான ரொக்கப் பட்டுவாடாக்களை பணமாக செய்தால் அவற்றுக்கு வரிவிதிக்கப்படும்.
வேலைவாய்ப்பு
ஓராண்டில் 70 லட்சம் முறையான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ள ஜெட்லி, அடுத்த மூன்றாண்டுகளுக்கு புதிய ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியின் 12 சதவீதப் பங்களிப்பை அரசு ஏற்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் பல்வகை அளிப்புகள் சட்டம் 1952ல் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் பெண் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிப் பங்களிப்பை 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக மூன்றாண்டுகளுக்கு குறைக்கவுள்ளது. அதே நேரம் நிறுவனங்களின் பங்களிப்பாக அளிக்கவேண்டிய தொகை குறையாது என்றும் அமைச்சர் அறிவித்தார்.
ஜவுளித் துறைக்கான ஒதுக்கீடு ரூ.7,148 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பெயர் மாற்றம்
மத்திய சுங்கம் மற்றும் ஆயத்தீர்வைகள் வாரியம் பெயர் மாற்றப்பட்டு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி வாரியம் என்று பெயரிடப்படவுள்ளது.
2017-18 ஆண்டில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பதற்கு இலக்கு ரூ.72,500 கோடியாக இருந்தது. இந்த இலக்கை மீறி பங்குகள் விற்கப்பட்டு ரூ.1 லட்சம் கோடி வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது. 2018-19ம் ஆண்டுக்கான பொதுத்துறை நிறுவனப் பங்கு விற்பனை ரூ.80 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் ஜெட்லி. மூன்று பொதுத்துறை பொதுக்காப்பீட்டுத்துறை நிறுவனங்கள் இணைக்கப்பட்டு ஒரே நிறுவனமாக மாற்றப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












