You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எளியமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளதா பட்ஜெட்?
விவசாயத் துறைக்கான அறிவிப்புகளுடன் பட்ஜெட் உரையைத் தொடங்கினார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.
2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்திக்கு அதிக விலை நிர்ணயிக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான விவசாயத் துறை சார்ந்த அறிவிப்புகள் அவர் உரையில் இருந்தன.
இது குறித்து, விவசாய செயற்பாட்டாளர் அனந்து கூறுகையில், "இந்த பட்ஜெட்டில் விவசாயம் குறித்து அறிவிக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் மேம்போக்காக இருந்தன. விவசாய உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கொடுப்பது தொடர்பான தெளிவான பார்வை இந்த பட்ஜெட்டில் இருப்பதாகத் தெரியவில்லை." என்கிறார்.
மேலும், "2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த உறுதிபூண்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், அரசு அமைப்பான நிதி ஆயோக் அதற்கு வாய்ப்பு இல்லை என்று ஏற்கெனவே கூறிவிட்டது. ஆக, அது குறித்தான அறிவிப்பு வெறும் வார்த்தை ஜாலம் மட்டும்தான்"
"இயற்கை விவசாயம் குறித்த அறிவிப்புகள் வரவேற்கதக்கது. அதே நேரம், அது நிறுவனங்களுக்கு நன்மை பயப்பதாக இல்லாமல், சாமானிய விவசாயிகளுக்கு நேரடிப் பலன் தருவதாக இருக்க வேண்டும்" என்றார் அனந்து.
"மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யவில்லை"
"இது ஜனரஞ்சகமான பட்ஜெட்டும் இல்லை. வளர்ச்சிக்கான பட்ஜெட்டும் இல்லை" என்கிறார் பட்ஜெட்டின் பொதுவான விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்த பொருளாதார நிபுணர் பாண்டியன்.
"மாத ஊதியம் வாங்குபவர்களுக்கான வரி விகிதம் குறைக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. வழக்கத்தைவிட 41 சதவிகிதம் அதிகமாக வருமான வரித் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். அப்படியானால், மக்கள் நியாயமாக வரி செலுத்த விரும்புகிறார்கள் என்றுதானே அர்த்தம். அவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஏதாவது நன்மை செய்யப்பட்டு இருக்கிறதா என்றால் ஒன்றும் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது."
எளிய மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் பூர்த்திசெய்யவில்லை என்று சொல்லும் பாண்டியன், அதேநேரம், மூத்த குடிமக்களுக்கான காப்பீடு குறித்த அறிவிப்பும், உள்கட்டுமானம் குறித்த அறிவிப்பும் வரவேற்கத்தக்கவை என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :