நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் - மோதியின் திட்டம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜுபைர் அகமது
- பதவி, பிபிசி
ஒரே நாடு, ஒரே தேர்தல் - இந்த கருத்து பிரதமர் மோதியால் ஊக்குவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பேச்சின்போது இது எதிரொலித்தது.
நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே இதன் அர்த்தம். செலவைத் தவிர்க்கவே இந்த ஆலோசனை என்று இதனை முன்வைப்போர் கூறுகின்றனர்.
''இந்தியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து தேர்தல் நடப்பது, நாட்டின் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என ஒரு கவலை இருக்கிறது.'' என பேசினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
மேலும் தொடந்த அவர்,'' ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த, பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டியது அவசியம்'' என்றார்.
இந்த பேச்சுக்கு பிரதமர் மோதியும் அவரது சகாக்களும் உற்சாகமாக மேசை தட்டியதன் மூலம், இக்கருத்துக்கு அரசு ஆதரவளிக்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்தியுள்ளனர்.
பொதுத் தேர்தல் 2019 மே மாதம் நடக்க உள்ள நிலையில், பொது தேர்தல் முன்பே வரும் என்பது இதன் அர்த்தமா? சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியமா?அரசியலமைப்பில் திருத்தங்கள் வேண்டுமா? எதிர்க்கட்சிகள் இதனை ஏற்றுக்கொள்ளுமா?
''அனைத்துக் கட்சிகளுடன் ஒருமித்த கருத்து ஏற்படாத வரை இதனைச் செயல்படுத்த முடியாது. 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது இதனை செயல்படுத்தலாம். அதற்கு முன்பு வாய்ப்பில்லை'' என்கிறார் மூத்த அரசியல் ஆலோசகர் பிரதீப் சிங்.

பட மூலாதாரம், Twitter
''இக்கருத்து பணத்தை சேமிக்கும், பொருளாதாரத்தின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பிரதமர் இதனைப் பரிந்துரைக்கிறார். எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளாதவரை இது நடக்காது'' என்கிறார் பிரதீப் சிங்.
29 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி செய்தால், இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், வரும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடக்க உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில தேர்தல்கள் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்றும் பிரதீப் சிங் கூறுகிறார்,
பொறுமையாக இருப்பதன் மூலம் மோதி அரசுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்கிறார் பிரதீப் சிங். ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியது, மோதி அரசுக்குத் தூக்கமற்ற இரவுகளைத் தந்துள்ளது. ஆனால், அண்மையில் வந்துள்ள பொருளாதார ஆய்வு அரசுக்கு நல்ல செய்தியை கொடுத்துள்ளது. எனவே மோதி அரசு முன்கூட்டியே தேர்தலைச் சந்திப்பதை விட காத்திருப்பது நல்லது என்கிறார் பிரதீப் சிங்.
சட்டமன்றத் தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையில் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு அரசியலமைப்பில் திருத்தங்கள் தேவைப்படும் என சட்ட நிபுணர்கள் நம்புகின்றனர்.
''நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த பிரதமர் மோதி முடிவு செய்தால் அதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை. ஆனால், அரசியலமைப்பில் திருத்தங்களை செய்யாமல், சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையில் ஒரே நேரத்தில் நடத்த முடியாது'' என்கிறார் அரசியலமைப்பு நிபுணரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞரான சுரேஷ் சிங்.

பட மூலாதாரம், Getty Images
'' ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பணத்தை மிச்சப்படுத்தும் எனக் கூறுவது வலுவான காரணமல்ல. இது ஒரு அரசியல் கருத்து'' என்கிறார் சுரேஷ் சிங். அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இக்கருத்து தோற்றுப்போகும் எனவும் சுரேஷ் நம்புகிறார்.
பொதுத் தேர்தலை ஒரு வருடத்திற்கு முன்பே நடத்த மோதி அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுவது குறித்து சில நிபுணர்கள் விவாதிக்கின்றனர். குஜராத் தேர்தலில் திருப்திகரமான வெற்றி கிடைக்கவில்லை என்பதால் மோதி அரசு முன்கூட்டியே தேர்தல் நடத்த விரும்புவதாக ஊடகங்கள் கூறுகின்றன. குஜராத் தேர்தலில் பாஜக 49% ஓட்டுகளும், காங்கிரஸ் 42% ஓட்டுகளும் பெற்றிருந்தன.
சட்டமன்றத் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலிடம் இருந்து வேறுபடுகிறது என்பதை பாஜக தலைமை அறிந்திருக்கும் என்கிறார் பிரதீப் சிங்.
குஜராத் தேர்தல் நடந்த 20 நாட்களுக்குப் பிறகு, நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பை அவர் குறிப்பிடுகிறார். இப்போது பொது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் அந்த கருத்துக்கணிப்பில் மக்களிடம் கேட்கப்பட்டது. 54% பேர் பாஜகவுக்கும், 35% பேர் காங்கிரஸுக்கு வாக்களிக்க விரும்புவதாகக் கூறியிருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற மிகப்பெரிய வேலையை செய்ய தேர்தல் ஆணையம் போதிய தயாரிப்புகளுடன் இருக்கிறதா? அது சாத்தியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்,
பாதுகாப்பு பணிக்கு ஆட்களை நியமிப்பதில் தேர்தல் ஆணையம் சில பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். ஆனால், பல கட்டமாக வாக்குப்பதிவை நடத்தி இந்த பிரச்சினையை சமாளிக்கலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












