You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மு.க. ஸ்டாலின் பெயரை சொல்லக்கூடாதா? சமூக வலைதள கிண்டலுக்கு திமுக பதில்
தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் வரும் செய்திகள் மற்றும் விளம்பரங்களில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலினின் பெயரைக் குறிப்பிடக்கூடாது என செய்திகள் வெளியான நிலையில் தி.மு.க. அதனை மறுத்துள்ளது.
"முரசொலியில் இன்று (31.01.2018) முதல் அனைத்துச் செய்திகள் மற்றும் விளம்பரங்களிலும் 'கழக செயல் தலைவர்' என்றே குறிப்பிட வேண்டும். தளபதியின் பெயர் இடம்பெறக்கூடாது" என இன்றைய (புதன்கிழமை) முரசொலியில் செய்திக் குறிப்பு வெளியாகப் போவதாக சமூக வலைதளங்களிலும் வாட்ஸப் குழுக்களிலும் செய்திகள் பரவின. அந்த அறிவிப்பின் படமும் வாட்ஸப் குழுக்களில் பெருமளவில் பகிரப்பட்டது.
தி.மு.கவின் இந்த 'அறிவிப்பு' குறித்து சமூகவலைதளங்களில் விமர்சனங்களும் கேலியும் பரவின. நாளிதழ்கள் சிலவும் இந்தச் செய்தியை வெளியிட்டன.
ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியில், முரசொலி அலுவலகத்திற்குள் இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பெயருக்குப் பதிலாக செயல் தலைவர் என்றே குறிப்பிட வேண்டும் என்றும் ஸ்டாலின் என்ற பெயர் இடம்பெறக்கூடாது என கழக நாளேடான முரசொலி வெளியிடாத ஒரு செய்தியை வெளியிட்டதாக ஒரு சில நாளிதழ்கள் விஷமத்தனமான பொய்ச் செய்தியினை வேண்டுமென்றே வெளியிட்டுள்ளன. இதுபோன்ற செய்தியையோ, சுற்றறிக்கையையோ தி.மு.கவோ, முரசொலியோ வெளியிடவில்லை" என்று கூறியிருக்கிறார்.
மு.க. ஸ்டாலினின் அபரிமிதமான வளர்ச்சியின் மீது காழ்ப்புணர்ச்சிகொண்ட சில நாளேடுகள் வேண்டுமென்றே இதைச் செய்துள்ளதாகவும் தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்